Salva's revenge for slained Sisupala | Vana Parva - Section 14 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
ஆனர்த்த நாட்டில் {துவாரகையில்} கிருஷ்ணன் இல்லாத காரணம் யாது என்று யுதிஷ்டிரன் கேட்டல்; சிசுபாலனின் வதத்திற்கு பழி வாங்குவதற்காக சால்வன் துவாரகையில் நடத்திய வெறியாட்டத்தை கேள்விப்பட்டு சால்வன் நகரத்தை அழிக்கச் சென்றிருந்தாக கிருஷ்ணன் பதிலுரைத்தல்...
யுதிஷ்டிரன் சொன்னான், "கிருஷ்ணா, நீ ஏன் அங்கு {ஆனர்த்த நாட்டில்) இல்லை? விருஷ்ணி குல வழித்தோன்றலே, நீ வெளியே சென்றிருந்த போது எங்கே வசித்திருந்தாய்? நாட்டை விட்டு வெளியே சென்று என்ன செய்து கொண்டிருந்தாய்?"
கிருஷ்ணன், "பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் சால்வ நகரத்தை {சௌபம்} அழிக்க (அழிக்கும் ஏற்பாட்டைச் செய்ய) சென்றிருந்தேன். கௌரவர்களில் முதன்மையானவரே, நான் அப்படிச் செய்ய வேண்டிய காரணங்களைக் கேளும். தமகோஷனின் வீர மகனும், நன்கு அறியப்பட்ட மன்னனுமான பலம் நிறைந்த கரங்களும் பெரும் சக்தியைக் கொண்டவனுமான சிசுபாலன் கொல்லப்பட்டான். பாரதர்களில் சிறந்தவரே, உமது ராஜசுய வேள்வியில் எனக்கு அளிக்கப்பட்ட முதல் மரியாதையை ஏற்க முடியாததால் கோபம் கொண்ட அந்தத் *தீயவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்பட்டான். ஓ பாரதரே, அவன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட சால்வன், கடும் கோபம் கொண்டு, நான் உம்மிடம் தங்கியிருந்த போது, {மூத்த வீரர்கள்} யாருமற்ற துவாரகைக்குச் சென்றான்.
விலைமதிப்பில்லா உலோகங்களால் செய்யப்பட்டதால் சௌபம் என்று அழைக்கப்பட்ட ரதத்தில் அங்கே சென்று, விருஷ்ணி குலத்தின் இளம் வீரர்களுடன், எங்கள் குல காளைகளுடன் கருணையின்றி போரிட்டான். அங்கே பல விருஷ்ணி குல இளம் இளவரசர்களைக் கொன்ற அந்த தீயவன் {சால்வன்}, அந்த நகரத்தின் {துவாரகையின்} தோட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} "அந்த விருஷ்ணி குல தாழ்ந்தவனும், வசுதேவரின் தீய ஆன்மா கொண்ட மகனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கே? போரில் விருப்பம் கொண்ட அவனது கர்வத்தை அழிக்கிறேன். ஆனர்த்தர்களே! உண்மையைச் சொல்லுங்கள். அவன் எங்கிருக்கிறானோ நான் அங்கே செல்கிறேன். கம்சன் மற்றும் கேசியைக் கொன்றவனைக் கொன்ற பிறகே நான் திரும்பிச் செல்வேன். அவனைக் கொல்லாது நான் திரும்புவதில்லை என்று எனது ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்" என்று சொல்லித் திரும்பத் திரும்ப "அவன் எங்கே? அவன் எங்கே?" என்றும் கேட்ட சௌபத்தின் தலைவன் {சால்வன்} என்னுடன் போரிட விரும்பி அங்கும் இங்கும் ஓடினான்.
மேலும் அந்தச் சால்வன், "சிசுபாலனை அவன் கொன்றதால் ஏற்பட்டிருக்கும் எனது கோபத்தால் அற்பனும், பாவியும், நம்பிக்கை துரோகம் செய்பவனுமான அவனை {கிருஷ்ணனை} இன்று யமனின் மாளிகைக்கு அனுப்புகிறேன்.” மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் அவன் {சால்வன்}, "இளம்பருவம் கொண்டு சிறுவனாக இருந்த என் தம்பியை {சிசுபாலனை} போர்க்களத்தில் இல்லாது இருந்த அவனை {என் தம்பி சிசுபாலனை} தயாராக இல்லாத நிலையில் கொன்ற அந்த இழிந்த ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் கொல்வேன்." என்று சொன்னான்.
பெரும் மன்னா, குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} இப்படி ஒப்பாரி வைத்து அழுது, என்னை நிந்தித்து, விலைமதிப்பில்லாத உலோகங்களால் ஆன, நினைத்த இடத்திற்கு செல்லவல்ல தனது ரதத்துடன் {சௌபம் என்ற ரதத்துடன்} ஆகாயத்தில் எழும்பினான். கௌரவரே {யுதிஷ்டிரரே}, நாடு திரும்பியதும், அந்தத் தீய மனதுடைய மாத்திக நாட்டு மன்னன் {மார்த்திகாவதகம்} என்னைக் குறித்து சொன்னதையெல்லாம் கேள்விப்பட்டேன். குரு குலத்தின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, இதனால் கோபம் அடைந்த நான், அனைத்தையும் நினைத்துப் பார்த்து, அவனைக் கொல்ல மனதில் தீர்மானம் செய்தேன். கௌரவரே {யுதிஷ்டிரரே}, ஆனர்த்தர்களை அவன் ஒடுக்கியதையும், என்னை நிந்தித்ததையும், அவனது மிதமிஞ்சிய திமிரையும் அறிந்த நான் அந்த இழிந்தவனை அழிக்கத் தீர்மானம் கொண்டேன்.
பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, அதன் படி, அந்தச் சௌபனைக் {சௌபத்தின் அதிபதியான சால்வனைக்} கொல்ல நான் {எனது துவாரகை நகரத்தை விட்டு} வெளியேறினேன். அவனை இங்கும் அங்கும் தேடி, கடைசியாக கடலுக்கு நடுவில் உள்ள தீவு ஒன்றில் அவனைக் {சால்வனைக்} கண்டேன். மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு கடலில் இருந்து பெறப்பட்ட பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதி, சால்வனைப் போருக்கு அழைத்து சவால் விட்டேன். நான் போருக்காக அங்கு நின்றேன். அந்த நேரத்தில் எண்ணிலடங்கா தானவர்கள் என்மீது தாக்குதல் நடத்தினார்கள். கடைசியில் அவர்களையெல்லாம் வீழ்த்தி தரையில் சாய்த்தேன். பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்டவரே! இந்தக் காரணத்தினால்தான் நான் அங்கு {உம்மிடம்} வரமுடியவில்லை! ஹஸ்தினாபுரத்தில் நடந்த நியாயமற்ற பகடையாட்டத்தைக் கேள்விப்பட்ட பிறகு, துயரில் மூழ்கியிருக்கும் உம்மைக் காண இங்கு வந்தேன்" என்றான் {கிருஷ்ணன்}.
---------------------------------------------------------------------------------------------
*தீயவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்பட்டான்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36
கிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 38
சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் - சபாபர்வம் பகுதி 39
மூர்க்கமாகக் குதித்த பீமன் - சபாபர்வம் பகுதி 41
சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44
---------------------------------------------------------------------------------------------
*தீயவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்பட்டான்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36
கிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 38
சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் - சபாபர்வம் பகுதி 39
மூர்க்கமாகக் குதித்த பீமன் - சபாபர்வம் பகுதி 41
சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.