The game of dice is evil | Vana Parva - Section 13 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
சூதாட்ட காலத்தில் தாம் துவாரகையில் இல்லாததே யுதிஷ்டிரனுக்கு நேர்ந்த துயரத்திற்குக் காரணம் என்று கிருஷ்ணன் சொல்வது....
வாசுதேவன் சொன்னான், "பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, நான் துவாரகையில் இருந்திருந்தால், ஓ மன்னா, இந்தத் தீமை உம் மேல் விழுந்திருக்காது! கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, அம்பிகையின் மகனோ (திருதராஷ்டிரரோ), துரியோதனனோ, மற்ற கௌரவர்களோ என்னை அழைக்காதிருந்தால்கூட அந்தச் சூதாட்டத்துக்கு வந்து, அந்த ஆட்டத்தின் தீமைகளை எடுத்துக் கூறி, பீஷ்மர், துரோணர், கிருபர், பால்ஹீகர் ஆகியோரை உதவிக்கு அழைத்து அந்த ஆட்டம் நடவாமல் தடுத்திருப்பேன்.
மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}! உமக்காக ஏகாதிபதிகளில் முதன்மையான விசித்திரவீரியனின் மகனிடம் {திருதராஷ்டிரரிடம்}, உமது மகன்களுக்கும் பகடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போகட்டும் என்று சொல்லியிருப்பேன். நீர் இப்படி துயரில் விழக்காரணமான பல தீமைகளையும், முன்பொருகாலத்தில் வீரசேனின் மகன் நாட்டை இழந்த கதையையும் எடுத்துக் கூறியிருப்பேன். மன்னா {யுதிஷ்டிரா}, பகடையினால் ஏற்படும் தீமைகளை எண்ணிப்பாராமல் மனிதன் அதில் விழுகிறான்! அவ்விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் மனிதன் (வெற்றியடையும் விருப்பத்தால்} எப்படித் தொடர்ந்து விளையாடுவான் என்பதை விவரித்துச் சொல்லியிருப்பேன். மனிதர்களை மயக்கி அடிமையாக வைக்கும் பெண், பகடை, வேட்டை, மது ஆகிய நான்கும் மனிதனின் செழிப்பை அழிக்கும் நான்கு தீமைகளாகும். சாத்திரமறிந்த அனைவரும் இவர்களை அனைத்து தீமைகளும் தாக்கும் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். பகடைக்கு அடிமையாக இருக்கும் அந்த குறிப்பிட்ட மனிதர்களுக்கே அதன் அனைத்துத் தீமைகளும் தெரியும்.
பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னால் தோன்றி, இந்தப் பகடையின் மூலம் ஒரு நாளில் மனிதர்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து துயரத்தில் வீழ்வதையும், அவர்களே சுவைக்காத அவர்களது செல்வத்தை இழந்து கடும் வார்த்தைகள் பேசும் நிலை ஏற்படுவதையும் எடுத்துக் கூறியிருப்பேன்.
குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, இவற்றையும் இன்னும் பிற தீமைகளையும் சுட்டிக் காட்டியிருப்பேன். நான் சொல்லும் வார்த்தைகளை அவர்{திருதராஷ்டிரர்} ஏற்றுக் கொண்டிருந்தால் குருக்களின் நலனும், அறமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்!
மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவர் மருந்து போன்ற எனது நல்ல ஆலோசனைகளை ஏற்க மறுத்திருந்தால், பிறகு, ஓ பாரதகுலத்தில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நான் எனது பலத்தால் அவரை {திருதராஷ்டிரரைக்} கட்டாயப்படுத்தியிருப்பேன்! அந்தச் சபையில் அவருக்காகக் காத்திருப்பவர் எவரும், நண்பர் என்ற போர்வையில் எதிரியாய் இருக்கும் எவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்தால், அவர்கள் அனைவரையும் அந்த சூதாடிகளுடன் சேர்த்துக் கொன்றிருப்பேன்! கௌரவரே {யுதிஷ்டிரரே}, நான் அப்போது ஆனர்த்த தேசத்தில் {துவாரகையில்} இல்லாததாலேயே உமக்குப் பகடை மூலம் இந்தத் துயர் வந்தது.
குருக்களில் சிறந்தவரே, பாண்டுவின் புதல்வரே {யுதிஷ்டிரரே}, துவாரகைக்கு வந்ததும் யுயூதனன் மூலம் உமக்கு நேர்ந்த பேரிடரைப் பற்றி அறிந்தேன். மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதைக் கேள்விப்பட்டதும் துயரத்தால் தாக்குண்டு, கனத்த இதயத்துடன், விரைவாக உம்மைப் பார்க்க விரும்பி இங்கு வந்தேன். மன்னா, பாரத குலத்தின் காளையே, நீர் பெரும் துன்பத்தில் விழுந்துவிட்டீர்! கேடுகாலத்தில் மூழ்கியிருக்கும் உம்மையும் உமது சகோதரர்களையும் நான் காண்கிறேன்!" என்றான் {கிருஷ்ணன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.