Pandavas bade farewell to the people | Vana Parva - Section 23 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
கிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், தங்களைத் தொடர்ந்து வந்த குடிமக்களுக்கு ஆறுதல் சொல்லி பாண்டவர்கள் திருப்பி அனுப்பியது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தாசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, சிவனைப் போல இருக்கும் வீரர்களான யுதிஷ்டிரன், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} மற்றும் அவர்களின் {பாண்டவர்களின்} புரோகிதரும் {தௌமியரும்}, அற்புதமான குதிரைகள் பூட்டப்பட்ட விலையுயர்ந்த தேர்களில் ஏறி ஒன்றாக கானகத்திற்குள் சென்றனர். அப்படி அவர்கள் கிளம்பும் நேரத்தில், சிக்ஷா, அக்ஷரா மற்றும் மந்திரங்களை அறிந்த அந்தணர்களுக்கு நிஷ்கங்கள் அளவு கொண்ட தங்கத்தையும், ஆடைகளையும், பசுக்களையும் விநியோகித்தனர். வில்லுடனும், நாண் கயிறுகள், எரியத்தக்க ஆயுதங்கள், கணைகள், ஈட்டிகள் மற்றும் அழிவிற்குண்டான பொறிகளுடன் இருந்த இருபது {20} பணியாட்கள் அவர்களைத் தொடர்ந்தனர். இளவரசர்களுக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், செவிலிகள், பணியாட்கள் ஆகியவற்றுடன் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} இந்திரசேனன் {பாண்டவர்களின் தேரோட்டி} தனது தேரில் வேகமாகத் தொடர்ந்தான். பிறகு குருக்களில் சிறந்தவனை {யுதிஷ்டிரனை} அணுகிய உயர் மனம் கொண்ட குடிமக்கள், அவனை {யுதிஷ்டிரனை} வலம் வந்தனர்.
குருஜாங்காலத்தின் தலைமை அந்தணர்கள் அவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பதிலுக்கு மகிழ்ச்சியுடன் வணங்கினான். அங்கு சிறிது நேரம் நின்ற அந்தச் சிறப்புவாய்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரளான குருஜாங்காலவாசிகளை கண்டான். குருக்களில் சிறப்பு வாய்ந்த அந்தக் காளை {யுதிஷ்டிரன்}, ஒரு தந்தை மகன்களை உணர்வதைப் போல அவர்களைக் {குருஜாங்காலவாசிகளைக்} கண்டு உணர்ந்தான். அந்த மக்களும் அவனைத் தங்கள் தந்தையைப் போல உணர்ந்தனர்! அந்தப் பெரும் திரளான மக்கள், குரு வீரனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனைச் சுற்றி நின்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, துன்புற்று, வெட்கமடைந்து, கண்களில் நீருடன் அவர்கள் அனைவரும், "ஐயோ, ஓ தலைவா! ஓ தர்மா!" என்றனர். பின்னும் அவர்கள், "நீயே குருக்களின் தலைவன், நீயே எங்கள் மன்னன், நாங்கள் உனது குடிமக்களே! ஓ நீதிமானான ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இந்த நாட்டில் வசிப்பவர்களும் உனது குடிமக்களும் ஆகிய எங்களை விட்டு நீ எங்கு செல்கிறாய்? கொடும் இதயம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஐயோ! தீய மனம் படைத்த சுபலனின் மகனுக்கு {சகுனிக்கு} ஐயோ! கர்ணனுக்கு ஐயோ! ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இந்தப் பாவிகள் எப்போதும் அறத்தில் உறுதியாக இருந்த உமக்குத் தீங்கு செய்யவே விரும்பினர்.
கைலாசத்தின் பிரகாசத்திற்கு ஒப்பான இந்திரப்பிரஸ்த நகரத்தை எதிரிகளை அற்று உன்னை நிறுவிக் கொண்டாய். ஓ சிறப்புவாய்ந்த நீதிமானான மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அதைவிட்டு {இந்திரப்பிரஸ்தத்தை விட்டு} நீ எங்கு செல்கிறாய்? ஓ இயல்புக்கு மிக்க சாதனைகளைச் செய்தவனே! ஓ சிறப்பு மிகுந்தவனே, *மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும், தேவ மாயையும், தேவர்களால் காக்கப்பட்டதுமான அந்த இணையற்ற அரண்மனையை விட்டு, ஓ தர்மா! நீ எங்கே செல்கிறாய்? பிறகு, அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை அறிந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} உரத்த குரலில், "கானகத்தில் வாழ்ந்து, தனது எதிரிகளின் நற்பெயர்களைக் களைய மன்னர் {யுதிஷ்டிரர்} உத்தேசித்துள்ளார். அறம், பொருள் ஆகியவற்றை உணர்ந்த மறுபிறப்பாளர்களைத் {அந்தணர்களைத்} தலைமையாகக் கொண்டு செல்லும் எங்களுக்கு நல்லது நடக்க துறவிகளின் அருளைப் பெற அவர்களை {துறவிகளை} அணுகுங்கள்." என்றான். அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர்களும் மற்ற வகையினரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை மகிழ்ச்சியுடன் வணங்கி, அந்த சார்ந்தவர்களில் முதன்மையானவனை வலம் வந்தனர்! அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கும் {யுதிஷ்டிரனுக்கும்}, விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, தனஞ்செயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, யக்ஞசேனிக்கும் {திரௌபதிக்கும்}, இரட்டையர்களுக்கும் நல்விடை கொடுத்தனர். யுதிஷ்டிரனால் {திரும்பிச் செல்லுமாறு} கட்டளையிடப்பட்ட அவர்கள், கனத்த இதயத்துடன் நாட்டுக்குள் இருக்கும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
---------------------------------------------------------------------------------------------
*மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும்,
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
---------------------------------------------------------------------------------------------
*மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும்,
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
"அரண்மனை கட்டிக் கொடு!" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1
மயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...
அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது...
Post by முழு மஹாபாரதம்.