Bhishma ment Pulastya | Vana Parva - Section 81 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
துயரத்தில் இருந்த பாண்டவர்களை நாரதர் சந்திப்பது; நாரதரிடம் யுதிஷ்டிரன் தீர்த்தயாத்திரையின் பயன்களை விவரமாகக் கேட்பது; பீஷ்மர் புலஸ்தியர் சந்திப்பை நாரதர் சொல்ல ஆரம்பித்தது...
வைசம்பாயனர் சொன்னார், "தனஞ்சயன் {அர்ஜுனன்} குறித்து வருத்தத்துடன் இருந்த தனது தம்பிகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரும் துயர் கொண்டான். அந்த நேரத்தில் (தனது எதிரில்) தேவலோக முனிவரான நாரதர் பிரம்ம அழகுடன், வேள்வி நெய்யால் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போல பிரகாசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அவர் {நாரதர்} வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் எழுந்து நின்று அந்தச் சிறப்பு மிக்கவரை வழிபட்டான். சக்தியால் பிரகாசித்த குருக்களின் அழகான தலைவன் {யுதிஷ்டிரன்}, நூறு வேள்விகள் செய்த தேவனை {இந்திரனை}, தேவர்கள் சூழ்ந்து கொண்டதைப் போல, தனது தம்பிகளால் சூழப்பட்டு நின்றான்.
பிருதையின் {குந்தியின்} மகன்களான தனது தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு, அறநெறிகளின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து இருந்த யக்ஞசேனி {திரௌபதி}, வேதங்களுக்கு சாவித்ரியைப் போல, மேருவின் சிகரத்திற்கு சூரியக் கதிரைப் போல இருந்தாள். சிறப்புமிக்க நாரதமுனிவர், அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்டு தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சரியான முறையில் ஆறுதலளித்தார். ஓ பாவங்களற்றவனே {ஜனமேஜயா}, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அந்த முனிவர், "ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய், என்னால் உனக்கு ஆகவேண்டியது என்ன என்பதை எனக்குச் சொல்" என்று கேட்டார். இதற்கு தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடன் சேர்ந்து, தேவர்களாலும் மதிக்கப்படும் நாரதரை வணங்கி, கரங்களைக் கூப்பியபடி, "ஓ பெரும்பேறு பெற்றவரே, நீ அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவர், உமக்கு என்னிடம் திருப்தியுண்டானால், எனது விருப்பங்கள் அனைத்தும் உமது அருளால் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறேன். ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவரே, ஓ பாவங்களற்றவரே, நான் எனது தம்பிகளுடன் சேர்த்து உமது கருணைக்குத் தகுதிபடைத்தவர்களாக இருந்தால், ஓ முனிவர்களில் சிறந்தவரே, எனது மனதில் இருக்கும் சந்தேகத்தைப் போக்குவதே உமக்குத் தகும். புனிதமான நீர்நிலைகளையும், அங்கு அமைந்திருக்கும் கோவில்களையும் காணவிரும்பி உலகத்தைச் சுற்றுபவர்களுக்கு {தீர்த்த யாத்திரை செய்பவர்களுக்கு} என்ன சிறப்பு ஏற்படும் என்பதை எனக்கு விவரமாகச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
நாரதர், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முன்பு புலஸ்தியரிடம் இருந்து புத்திசாலியான பீஷ்மர் அறிந்து கொண்டதைக் கவனத்துடன் கேள். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா} முன்பொரு காலத்தில், அறம்சார்ந்தவர்களில் முதன்மையான பீஷ்மர், ஓ மன்னா, தேவ முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கூட ஓய்வெடுக்கும் பகுதியான கங்கையின் தோற்றுவாய்க்கு அருகில், அந்த அழகான, புனிதமான இடத்தில், முனிவர்களின் துணையுடன் பித்ருய நோன்பை {முன்னோர்களை [பித்ரு தேவதைகளை] வழிபடும் நோன்பு} நோற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி அவர் அங்கே வாழ்ந்த போது, அந்தப் பிரகாசிப்பவர் {பீஷ்மர்}, அவரது தானத்தின் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி திருப்திப்படுத்தினார். அப்படிச் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு காலத்தில் அந்த சிறப்புமிக்கவர் {பீஷ்மர்}, தனது அமைதியான பாராயணத்தின் {ஒப்புவித்தலின்} போது தோற்றத்தில் அழகான முனிவர்களில் சிறந்த புலஸ்தியரைக் கண்டார் {பீஷ்மர்}.
அழகால் பிரகாசிக்கும் அந்தத் தவத் துறைவியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்து, மிகுந்த ஆச்சரியமடைந்தார். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், அந்த அருளப்பட்ட முனிவரை சடங்குவிதிகளின் படி வழிபட்டார். தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன், தனது தலையில் அர்க்கியாவுடன் {பூஜைக்குத் தேவையான திரவியத்துடன்} அந்த பிரம்ம முனிவரை {பிரம்மரிஷியை} அணுகினார். பிறகு தனது பெயரை {பீஷ்மர்} உரக்கச் சொல்லியபடி, அவரிடம் {புலஸ்தியரிடம்}, "ஓ அற்புத நோன்புள்ளவரே {புலஸ்தியரே}, நீர் அருளப்பட்டிரும். நான் உமது அடிமையான பீஷ்மன். உமது காட்சி எனக்குக் கிடைத்ததால், நான் எனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டேன்" என்றார். ஓ யுதிஷ்டிரா, இதைச் சொன்ன அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், தனது பேச்சை நிறுத்தி அமைதியாகக் கரம் கூப்பி நின்றார். நோன்புகளாலும், வேத கல்வியாலும், உடல் வற்றி மெலிந்து போயிருந்த குருக்களில் முதன்மையான பீஷ்மரைக் கண்ட அந்த முனிவர் {புலஸ்தியர்} பெரும் மகிழ்ச்சியில் மூழ்கினார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.