The merit of Pushkara said by Pulastya | Vana Parva - Section 81a | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
புஷ்கரையின் பலனைச் சொல்லும் புலஸ்தியர்
புஷ்கர், அஜ்மீர் மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா |
பீஷ்மர் {புலஸ்தியரிடம்}, "ஓ அதிகமாக அருளப்பட்டவரே, மூவுலகங்களாலும் வழிபடப்படும் நீர் என்னிடம் திருப்தி அடைந்திருப்பதாலும், மேன்மையான உமது காட்சியை நான் கண்டதாலும், நான் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டதாகக் கருதுகிறேன். ஆனால், ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, உமது உதவியைப் பெற எனக்குத் தகுதியுண்டானால், நான் எனது சந்தேகங்களை உம்மிடம் கேட்கிறேன், அவைகளை நீர் களைய வேண்டும். ஓ புனிதமானவரே, எனக்கு தீர்த்தங்கள் சம்பந்தமாக சில அறச் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து என்னிடம் விரிவாகப் பேசுவீராக. நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். ஓ தேவர்களைப் போன்றவரே, ஓ மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரே, (கோவில்களைத் தரிசித்து) உலகம் சுற்றுபவர்களுக்குக் கிடைக்கும் பலன் யாது? இதை எனக்கு நிச்சயமாகச் சொல்லும்" என்று கேட்டார்.
அதற்கு புலஸ்தியர் {பீஷ்மரிடம்}, "ஓ மகனே, கவனமாகக் கேள். முனிவர்களின் புகலிடமாக இருக்கும் தீர்த்தங்களால் ஏற்படும் பலனை நான் உனக்குச் சொல்கிறேன். யாருடைய கரங்கள், பாதம், மனது, அறிவு, தவம் மற்றும் செயல்கள் அவனது முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பரிசுகள் பெறுவதில்லையோ, எவன் தன்னடக்கம் கொண்டவனோ, எவன் கர்வமற்றவனோ அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பாவமில்லாமல் இருக்கிறானோ, எவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுகிறானோ, எவன் அதிகமாக உண்ணாதிருக்கிறானோ, எவன் தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, எவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, எவன் கோபத்தில் இருந்து விடுபட்டிருக்கிறானோ, எவன் உண்மைச் சார்ந்து இருக்கிறானோ, எவன் தனது நோன்புகளில் உறுதியாக இருக்கிறானோ, எவன் அனைத்து உயிர்களையும் தன்னைப் போலவே கருதுகிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். வேதங்களில் முனிவர்கள், வேள்விகள் மற்றும் அதன் கனிகளை இப்போதைக்கும், எதிர்காலத்திற்கும் தீர்மானித்து வைத்திருக்கின்றனர். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, வேள்விகளுக்குப் பல பொருட்கள் தேவைப்படுவதாலும், பல காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாலும், அந்த வேள்விகளை ஒரு ஏழையால் செய்ய முடியாது. ஆகையால், இவை மன்னர்களாலும் அல்லது செழிப்பும் செல்வமும் கொண்ட மனிதர்களாலும் மட்டுமே செய்ய முடியும். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, இருப்பினும், செல்வமற்ற மனிதர்கள், கூட்டணி இல்லாதவர்கள், தனிப்பட்டவர்கள், மனைவி மக்கள் இல்லாதவர்கள், எந்தக் காரியமும் அற்றவர்கள் ஆகியோரால் அந்த வேள்விகள் செய்வதற்கு ஒப்பான புனிதமான கனிகளைப் பெற முடியும். அவற்றை போர்வீரர்களில் சிறந்த உனக்கு நான் இப்போது சொல்வேன்.
ஓ பாரத குலத்தில் சிறந்தவனே {பீஷ்மனே}, தீர்த்தங்கள் பரதேசிகளாய்ச் செல்பவர்களுக்கு உயர்ந்த பலனைத் தருவதாலும், முனிவர்களின் உயர்ந்த புதிர்களை உள்ளடக்கியிருப்பதாலும், அவை வேள்விகளை விட மேன்மை கொண்டவை. தீர்த்தத்திற்கு சென்றும், ஒருவன் மூன்று இரவுகள் உண்ணா நோன்பு இருக்கவில்லை {விரதமிருக்கவில்லை} என்றாலும், எப்போதேனும் தங்கத்தையோ, பசுக்களையோ தானமே கொடுத்ததில்லை என்றாலும், அவனே ஏழை. ஒருவன் அக்னிஷ்தோமா செய்வதாலும், இன்னும் பிற வேள்விகளைச் செய்து பெரும் பரிசுகள் கொடுப்பதாலும் ஏற்படும் பலனை விட, ஒருவன் தீர்த்தத்திற்கு பரதேசியாய்ச் செல்வதால் ஏற்படும் பலன் அதிகம். மனிதர்களின் உலகில், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} தீர்த்தமொன்று *புஷ்கரை என்ற பெயரில் உள்ளது. அங்கு பரதேசியாய் செல்லும் ஒருவன் அந்த தெய்வத்துக்கு {சிவனுக்கு} இணையானவனாகிறான். ஓ குரு குலத்தில் உயர்ந்த ஆன்மா கொண்ட மகனே {பீஷ்மா}, ஒரு நாளின் இரு சந்தி வேளைகளிலும் {அதிகாலை மற்றும் மாலைப்பொழுது, அதாவது பகலும் இரவும் சந்திக்கும் வேளைகளிலும்}, நடுப்பகலிலும், நூறாயிரம் கோடி தீர்த்தங்கள் புஷ்கரையில் சங்கமித்திருக்கும். ஓ மேன்மையானவனே {பீஷ்மா}, புஷ்கரையில் ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருதர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அதில் எப்போதும் தங்கியிருக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கேயே தேவர்களும், தைத்தியர்களும், பிரம்மமுனிவர்களும் தங்கள் தவ அர்ப்பணிப்புகளைச் செய்து பெரும் பலனையும், கடைசியாக தெய்வத் தன்மையையும் அடைந்தனர்.
தன்னடக்கம் கொண்ட மனிதர்கள், மனதால் புஷ்கரையை நினைத்தாலே, தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு, சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறார்கள். ஓ மன்னா {பீஷ்மா}, தாமரையைத் தனது ஆசனமாகக் கொண்டிருக்கும் சிறப்பு மிக்க பெருந்தகப்பன் {பிரம்மன்}, இந்தத் தீர்த்தத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்தார். ஓ அருளப்பட்டவனே, இந்தப் புஷ்கரையிலேயே முனிவர்களுடன் கூடிய தேவர்கள் முற்காலத்தில் பெரும் தகுதிகளை அடைந்தனர். கடைசியாக உயர்ந்த வெற்றியையும் அடைந்தனர். தேவர்கள் மற்றும் பித்ருக்களின் வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு மனிதன், இந்தத் தீர்த்ததில் குளித்தால், குதிரை வேள்வியில் கிடைக்கும் பலன்களை விட பத்து மடங்கு அதிகமான பலனை அடைவான் என்று ஞானமுள்ளவர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒ பீஷ்மா, புஷ்கர வனத்திற்குச் சென்று, ஒரு அந்தணருக்கேனும் உணவளிப்பவன், அந்தச் செயலால் அன்று {உணவளித்த அன்று} முதல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பான்.
---------------------------------------------------------------------
* புஷ்கரை இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டத்தில் இருக்கிறது.
---------------------------------------------------------------------
* புஷ்கரை இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டத்தில் இருக்கிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.