Bathe in Sethu!| Vana Parva - Section 82b | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "காய்கறிகளாலும், கிழங்குகளாலும், கனிகளாலும் தன்னைத் தாங்கிக் கொள்பவன், ஒரு அந்தணனுக்கு அதே பொருட்களை அவமரியாதை செய்யாமல், பக்தியுடன், கட்டணமாகக் கொடுக்கலாம். ஓ மன்னர்களில் சிறந்தவனே, அப்படிக் கொடுக்கப்படும் பரிசினால் கூட ஒரு ஞானவான் குதிரைவேள்வியில் கிடைக்கும் பலன்களை அடைந்துவிட முடியும். அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியவர்களில் சிறந்த மனிதர்கள் புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான். ஓ பாரதா {பீஷ்மா} கரங்களைக் கூப்பிய படி காலையும் மாலையும் புஷ்கரையை மனதால் நினைப்பவன், அனைத்து தீர்த்தங்களிலும் குளித்ததாகக் கருதப்படுகிறான்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிறப்பிலிருந்து அவர்களால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் புஷ்கரையில் நீராடுவதன் மூலமாக அழிகிறது. ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} தேவர்களில் முதன்மையானவன் என்பது போல புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான். வெண்மையான மூன்று குன்றுகளும், மூன்று நீரூற்றுகளும் நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்து புஷ்கரை என்ற பெயரால் அறியப்படுகிறது. அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. புஷ்கரைக்குச் செல்வது கடினம்; புஷ்கரையில் தவச்சடங்குகள் செய்வது கடினம்; புஷ்கரையில் தானம் கொடுப்பது கடினம்; புஷ்கரையில் வாழ்வதும் கடினம்.
சரியான உணவுப் பழக்கம் மற்றும் நோன்புகளுடன் புஷ்கரையில் பனிரெண்டு {12} இரவுகள் தங்கியபிறகு, ஒருவன், ஜம்பு மார்க்கம் செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், பித்ருக்களும் ஓய்ந்திருக்கும் ஜம்பு மார்க்கத்தை ஒருவன் அடைந்தால், அவன் குதிரை வேள்வி செய்த தகுதியை அடைந்து, தனது விருப்பங்கள் அனைத்தும் கனியக் காண்பான். அங்கே ஐந்து {5} இரவுகள் தங்கும் மனிதனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்படுகிறது. அவன் நரகத்திற்குள் மூழ்குவதே இல்லை, ஆனால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். ஜம்பு மார்க்கத்தை விட்டு அகன்றவன் அடுத்து {ஸ்}தண்டுலிகாஸ்ரமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே செல்பவன் யாரும் நரகத்தில் மூழ்குவதில்லை, ஆனால் பிரம்மலோகத்தை அடைகிறான். ஓ மன்னா, அதன் பின்பு, அகத்திய தடாகத்திற்கு {ஏரிக்கு} சென்று தங்குபவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபட்டு மூன்று {3} இரவுகள் உண்ணா நோன்பிருந்து அக்னிஷ்டோமா செய்வதன் பலனை அடைகிறான். காய்கறிகளையும், கனிகளையும் உண்டு வாழ்பவன் அங்கு சென்று கௌமாரம் என்ற நிலையை {முருகனின் நிலையை} அடைகிறான்.
அடுத்து, முழு உலகத்தாலும் வழிபடப்படும் கண்வரின் அழகான ஆசிரமத்திற்கு முன்னேற வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே, தெய்வீகத்தால் நிரம்பிய அந்தப் புனிதமான வனம், நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஒருவன் அதற்குள் நுழைந்ததுமே, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். முறையான உணவு பழக்கத்துடன் நோன்பிருந்து, பித்ருகளையும் தேவர்களையும் வழிபடுபவன், ஒருவரின் விருப்பங்களைக் கனிய வைக்கும் சக்தி படைத்தவனாக ஆவான். இந்த ஆசிரமத்தை ஒருமுறை வலம் வந்த பிறகு, ஒருவன் யயாதி (சொர்க்கத்திலிருந்து) விழுந்த இடத்திற்கு வர வேண்டும். அங்கே செல்பவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு முறையான உணவு பழக்கத்துடன், புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் மஹாகாலம் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கோடி என்ற பெயரில் அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான்.
ஒரு அறம் சார்ந்த மனிதன் அடுத்து, மூன்று உலகிலும் பத்ரவடம் என்று அறியப்படும், உமையின் கணவனான ஸ்தாணுவின் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். பத்ரவடத்திற்குச் செல்லும் மனிதர்களில் சிறந்தவர்கள் ஈசானனைக் கண்டு, ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைவார்கள். பிறகு மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் நர்மதை ஆற்றுக்கு வந்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன்கள் கொடுப்பதால் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொண்டு, புலன்களை அடக்கி தென் கடலுக்குச் {இது வடமொழி மூலத்தில் தக்ஷிண சிந்து [சேது சமுத்திரமாக இருக்கலாம்] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் தென் கடல் {southern ocean} என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது} செல்பவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்ததன் பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்வான். பிறகு சர்மண்வதி நதியை அடைந்து, முறையான உணவுப் பழக்கத்துடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் இருப்பவன், ரந்திதேவனின் கட்டளையின் பேரில் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.
ஓ போர்வீரர்களின் அறம் சார்ந்த தலைவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன் இமயத்தின் மகனான அர்ப்புடம் செல்ல வேண்டும். அங்கு பழங்காலத்தில் பூமியைத் துளைத்தப்படி சென்ற ஒரு துளை இருந்தது. அங்கே, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. ஒரு இரவு அங்கு தங்குவதால் ஒருவனுக்கு ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கிறது. ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா} பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, பிங்கம் எனும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நூறு கபிலைப் பசுக்களைத் தானம் கொடுப்பதன் பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் பிறகு, பிரபாசம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே எப்போதும் ஹுதாசனன் {அக்னி} நேரடியாகவே இருக்கிறான். ஓ வீரா {பீஷ்மா}, பவனனின் {இந்திரனின்} நண்பனான அவன் {அக்னி}, தேவர்களுக்கு வாயாக இருப்பவனாவான். தன்னை அடக்கி, சுத்திகரிக்கப்பட்ட ஆன்மா கொண்ட மனிதன் அந்தத் தீர்த்ததில் நீராடுவதால், அக்னிஷ்டோமா அல்லது அதிராத்ர வேள்வியால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.