Dadhicha gave his bones! | Vana Parva - Section 100| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
விருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.
லோமசர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.
பிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், "தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, "மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்" என்று சொல்லுங்கள்.
அவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இருந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.
அந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.
அங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, "தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்" என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtri} சென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், "ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் தலைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையும், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்" என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.