The hill threw stones on utterers! | Vana Parva - Section 110a| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் ஹேமகூட மலையில் சில அதிசயங்களைக் காண்பது; பிறகு நந்தை அபரநந்தை ஆகிய நதிகளில் நீராடி கௌசி நதி இருக்கும் இடத்திற்கு செல்வது; லோமசர் யுதிஷ்டிரனுக்கு ரிஷ்யசிருங்கரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயா} சொன்னார், "ஓ! பாரதகுலத்தில் தலைவா {ஜனமேஜயா}! பிறகு குந்தியின் அந்த மகன் {யுதிஷ்டிரன்}, பாவங்கள் குறித்த பயத்தை அழிக்கும் தன்மை கொண்ட நந்தை, அபரநந்தை ஆகிய இரு நதிகளை மெதுவாக அடைந்தான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுதிஷ்டிரன்}, ஆரோக்கியத்திற்கு இருப்பிடமான *ஹேமகூடம்1 என்ற மலையை அடைந்து, அங்கே வியப்பிற்குரிய, ஆச்சரியப்படத்தக்க காட்சிகள் பலவற்றைக் கண்டான். அங்கே ஏதும் வார்த்தைகளை உச்சரித்தாலே, உடனே மேகங்கள் கூடின, ஆயிரக்கணக்கான கற்களும் விழுந்தன. இக்காட்சியைக் கண்ட மக்கள் துயருற்று, அந்த மலையை ஏற இயலாதவர்களானார்கள். அங்கே எப்போதும் காற்று வீசிக்கொண்டிருந்தது, வானம் எப்போதும் மழையைக் கொட்டிக் கொண்டே இருந்தது. மேலும் புனித ரித்துகளின் ஒலி {வேத ஒலி} கேட்டுக் கொண்டிருந்தாலும், அங்கே {வேதம் உரைப்பவர்கள்} யாரும் தென்படவில்லை.
மாலையிலும், காலையிலும் தேவர்களுக்குக் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அருள் நிறைந்த நெருப்பு அங்கே தென்பட்டது. தவப்பயிற்சிகள் தடைபடும் வண்ணம் அங்கே பூச்சிகள் கடித்தன. அங்கே ஆன்மாவைச் சோகம் பீடித்து, மனிதர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதைப் போன்ற பல விசித்திரமான குணங்களைக் கண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் இந்த அற்புத காரியங்கள் குறித்து லோமசரிடம் கேட்டான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்வபனே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நாங்கள் ஏற்கனவே கேட்டவற்றை இப்போது நான் சொல்லப் போகிறேன். அதைக் கவனமான மனதுடன் கேள். ரிஷபம் என்ற இந்தச் சிகரத்தில், முன்பொரு சமயம் அதே பெயர் {ரிஷபர்} கொண்ட தவசி ஒருவர் இருந்தார். அவர் பல நூறு வருடங்கள் தனது உயிரைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அவர் மிகுந்த கோபக்காரராகவும் இருந்தார். அவர் {ரிஷபர்} பலபேர் தன்னைக் குறித்துப் பேசுவதைக் கண்டு கோபத்துடன் அந்த மலையிடம், "இங்கே வார்த்தைகளை உச்சரிக்கும் எவர் மீதும், நீ கற்களை எறியவேண்டும். மேலும் அவன் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வண்ணம் நீ காற்றையும் அழைக்க வேண்டும்" என்றார். இதுதான் அந்தத் தவசி {ரிஷபர்} சொன்னது.
ஆக இந்த இடத்தில் எந்த மனிதனும் வார்த்தைகளை உச்சரித்தால், அவன் கர்ஜிக்கும் மேகங்களால் தடைசெய்யப்படுகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி இந்தக் காரியங்கள் அனைத்தும் அந்தப் பெருந்தவசியால் ஏற்பட்டது. கோபத்தால் அவர் மற்றச் செயல்களுக்கும் {இங்கே} தடையேற்படுத்தினார். ஓ மன்னா! பழங்காலத்தில் தேவர்கள் நந்தைக்கு வந்த போது, திடீரென அந்தத் தேவர்களைப் பார்க்க நிறைய மனிதர்கள் (அங்கே) கூடினர். இருப்பினும் தேவர்களும், அவர்களின் தலைவனான இந்திரனும் தாங்கள் அவர்களால் காணப்படுவதை விரும்பாததால், அந்த இடத்தில் மலைகளின் உருவில் தடைகளை ஏற்படுத்தி அதை அடைவதற்கரியதாக மாற்றினர். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}!, அந்த நாள் முதல், மலைபோல் தெரியும் அதன் மேல் மனிதர்கள் தங்கள் பார்வையை எப்போதும் செலுத்த முடியவில்லை. பார்த்தாலும், அவர்களால் அதை ஏற முடியவில்லை.
தவவாழ்க்கை வாழாத எவரும் அந்தப் பெரிய மலையைக் காண முடியாது, காண முடிந்தாலும் அதை ஏற முடியாது. ஆகையால், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! உனது நாவைக் கட்டுக்குள் வை. அந்தக் காலத்தில் அந்தத் தேவர்கள் அனைவரும் அங்கேதான் சிறந்த வேள்விச் சடங்குகளைச் செய்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த நாளில் கூட நாம் அக்குறிப்புகளை அங்கே காணலாம். இங்கே இருக்கும் புல்கூடப் புனிதமான குசப்புல் {வெட்டிவேர்} போன்ற உருவைக் கொண்டிருக்கிறது. இங்கே இருக்கும் தரை, புனிதமான புற்களால் மூடப்பட்டிருக்கிறது. ஓ! மனிதர்களின் தலைவா! இங்கே இருக்கும் பல மரங்கள், பலி விலங்குகள் கட்டப்படும் இடங்கள் போலவே இருக்கின்றன.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களும், தவசிகளும் இங்கே இன்னும் தங்கள் வசிப்பிடங்களை வைத்திருக்கின்றனர். அவர்களது புனித நெருப்பு {வேள்வி நெருப்பு} காலையிலும் மாலையிலும் காணப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடும் ஒருவனின் பாவம் உடனே அழிக்கப்படுகிறது. ஓ குருகுலத்தில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, நந்தையில் நீ நீராடிய பிறகு, விஸ்வாமித்திரர் கடுந்தவம் இருந்த அற்புதமான இடமான கௌசிகி நதிக்குச் செல்ல வேண்டும்" என்றார் {லோமசர்}. பிறகு மன்னனும் {யுதிஸ்டிரன்} தனது சேவகர்களுடன் தனது உடலை அங்கே கழுவி கொண்டு, காண்பதற்கினிய, குளிர்ந்த, சுத்தமான நீரையுடைய கௌசிகி நதிக்குச் சென்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்தச் சுத்தமான தெய்வீக நதியின் பெயர் கௌசிகி. கவனத்தைக் கவர்கின்ற இந்த மகிழ்ச்சிகரமான ஆசிரமம் விஸ்வாமித்திரருடையது. மேலும் புனிதமான பெயரைக் கொண்ட இதோ இந்த ஆசிரமம் பலம்வாய்ந்த ஆன்மா கொண்ட காசியபருடையது. அவருக்கு நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரிஷ்யசிருங்கர் என்ற மகன் ஒருவர் இருந்தார். அவர் {ரிஷ்யசிருங்கர்}, தனது நோன்புகளின் சக்தியால் இந்திரனை மழை பொழிய வைத்தார்; பேய்களான பலனையும் விருத்திரனையும் கொன்ற அந்தத் தேவன் {இந்திரன்} அவர் {ரிஷ்யசிருங்கர்} மீதிருந்த பயத்தால் பஞ்ச காலத்திலும் மழையைப் பொழிந்தான். காசியபரின் பலம்வாய்ந்த சக்தி மிக்க மகன் {ரிஷ்யசிருங்கர்} பெண்மானுக்குப் பிறந்தவராவார். அவர் {ரிஷ்யசிருங்கர்} லோமபாதனின் நாட்டில் பெரிய அற்புதத்தைச் செய்தார். அவர் பயிர்களை மீட்டெடுத்த போது, மன்னன் லோமபாதன், சூரியன் தனது மகள் சாவித்திரியைக் கொடுத்தது போல, தனது மகள் சாந்தையை அவருக்குத் {ரிஷ்யசிருங்கருக்கு} திருமணம் செய்து கொடுத்தான்" என்றார் {லோமசர்}.
1. [ஹேமகூட மலை, கர்நாடக மாநிலத்தின் வடக்கே உள்ள ஹம்பி என்ற இடத்தில் இருக்கிறது. மேலே உள்ள படம் அந்த மலையின் படம்தான்]↩
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.