The courtesan came to Rishyashringa! | Vana Parva - Section 111| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
மன்னன் லோமபாதனிடம் உறுதி கூறி வந்த விலைமகள் ஒரு மிதக்கும் ஆசிரமத்தை அமைத்து, ரிஷ்யசிருங்கர் இருக்கும் இடத்தை அடைதல்; ரிஷ்யசிருங்கர் விலைமகளை உபசரித்தல்; சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லல்; விலைமகளைப் பிரிந்ததும் ரிஷ்யசிருங்கர் சோகத்துடன் அமர்ந்திருத்தல்.; ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர் கேட்ட கேள்வி….
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, மன்னனின் {லோமபாதனின்} நோக்கத்தை நிறைவேற்ற, அவனது உத்தரவின் பேரிலும், தனது திட்டம் நிறைவேறும் பொருட்டும், அவள் {விலைமகள்} ஒரு மிதக்கும் ஆசிரமத்தைத் {ஓடத்தில் ஆசிரமம்} தயார் செய்தாள். அந்த மிதக்கும் ஆசிரமத்தில் பலதரப்பட்ட கனிகள் மற்றும் மலர்களுடன் கூடிய செயற்கை மரங்களும், இனிமையான பழங்கள் கொடுக்கக்கூடிய அழகிய புதர்களும், கொடிகளும், மந்திரத்தால் வரவழைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இனிமையாக மனதைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. அவள் அந்த ஓடத்தைக் காசியபர் மகனின் {விபாண்டகரின்} ஆசிரமத்திற்கு அருகே கட்டி, அந்தத் தவசி {விபாண்டகர்} வாடிக்கையாக வெளியே செல்லும் நேரத்தை அறிந்து வர ஆட்களை அனுப்பினாள். அவள் {விலைமகள்} ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டு, ஒரு திட்டம் தீட்டி, தொழிலால் விலைமகளான, சாமர்த்தியசாலியான தனது மகளை {விலைமகளை} அனுப்பினாள். அந்தப் புத்திசாலிப் பெண்ணும், அந்த ஆன்மிக மனிதனின் {ரிஷ்யசிருங்கரின்} அருகே அந்த ஆசிரமத்திற்குச் சென்று அந்தத் தவசியின் மகனைக் கண்டாள்.
அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ! தவசியே! ஆன்மிக அர்ப்பணிப்பாளர்கள் {முனிவர்கள்} அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உமது ஆசிரமத்தில் கனிகளும் கிழங்குகளும் அபரிமிதமாகச் சேமிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். உம்மைக் காணவே நான் இங்கு வந்துள்ளேன். தவம்பயிலும் தவசிகளின் பயிற்சி பெருகுகிறது என்று நினைக்கிறேன். உமது தந்தையின் ஆவி தளராமல் இருக்கிறது என்றும், அவர் உம்மிடம் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் நினைக்கிறேன். ஓ! புரோகித சாதியைச் சேர்ந்த ரிஷ்யசிருங்கரே! உமது ஆய்வுகளைச் சரியாக முன்னெடுக்கிறீர் என்றும் நினைக்கிறேன்" என்றாள்.
ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நீர் ஒளிக்குவியல் போல ஒளிரும் காந்திமிக்கவராக இருக்கிறீர். நீர் வணக்கத்திற்குரியவர் என்று கருதுகிறேன். நான் உமது பாதங்களைக் கழுவ நீர் தருகிறேன். என்னிடம் இருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் நான் உமக்குத் தருகிறேன். புனிதமான புல்லால் செய்யப்பட்டு, கருப்பு மான் தோலால் மூடப்பட்ட இந்த ஆசனத்தில் திருப்தியாக, வசதியாக அமரும். உமது ஆசிரமம் எங்கே இருக்கிறது? ஓ! அந்தணரே, நீர் தேவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டிருக்கிறீர். நீர் இப்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக நோன்பு யாது?" என்று கேட்டார்.
அதற்கு அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ காசியபரின் மகனே {பேரனே}, இந்த மலைகளுக்கு அப்பால் மூன்று யோஜனை தூரத்தில் ஒரு அழகான இடத்தில் எனது ஆசிரமம் இருக்கிறது. நான் உம்மைப்போன்ற மனிதர்களால் வணங்கத்தக்கவர் அல்ல. மேலும் நான் கால் கழுவவும் நீர் வாங்குவதில்லை. நான் தான் உமக்கு வணக்கங்கள் தெரிவிக்க வேண்டும். ஓ அந்தணரே! எனது கரங்களால் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்வதே நான் பயிலும் எனது ஆன்மிக நோன்பாகும்" என்றாள்.
ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நான் உமக்குக் கடுக்காய் கனிகள் {gallnut}, நெல்லிக்கனிகள் {myrobalan}, காரூஷக் கனிகள் {Karusha} {இது என்ன கனியென்று தெரியவில்லை}, மணற்பாங்கான இடங்களில் விளையும் வாதுமை {பாதாம், மணிப்பன்குகள்} {Inguda} மற்றும் அத்திப்பழம் {Indian fig} போன்ற கனிந்த பழங்களைக் கொடுப்பேன். அவை உமக்குத் திருப்தியைத் தந்தால் நீர் அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அவர் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்த ஏற்புடைய அனைத்தையும் அவள் {விலைமகள்} புறந்தள்ளினாள். பிறகு பொருந்தாத உணவுவகைகளை அவருக்குக் கொடுத்தாள். அவை ரிஷ்யசிருங்கருக்கு ஏற்புடையதாகவும், அழகானவையாகவும் இருந்தன. நறுமணமிக்க ஒரு மலர்மாலையையும், அணிந்து கொள்ள ஒளிரும் ஆடைகளையும், முதல்தரமான பானங்களையும் அவருக்கு {ரிஷ்யசிருங்கருக்கு} கொடுத்து சிரித்து மகிழ்ந்தாள். பிறகு அவரோடு விளையாடி, சிரித்து மிகவும் மகிழ்ந்தாள். அவரது பார்வையில் படும்படி அவள் பந்து விளையாடிய போது உயர்ந்து செல்லும் கொடி இரண்டாக உடைந்ததைப் போல இருந்தாள். அவரது உடலைத் தனது உடலால் அடிக்கடித் தொட்டு, மீண்டும் மீண்டும் ரிஷ்யசிருங்கரை அணைத்துக் கொண்டாள்.
பிறகு அவள் {விலைமகள்} சால, அசோக, திலக மரங்களில் இருந்து குச்சிகளை வளைத்து ஒடித்தாள். மயக்கத்தில் மூழ்கிய அவள் {விலைமகள்}, நாணம் கொண்டு அந்தப் பெரும் தவசியின் மகனை மயக்கினாள். ரிஷ்யசிருங்கரின் இதயம் தன்னால் தீண்டப்பட்டதை அறிந்த அவள் திரும்பத் திரும்பத் அவரது உடலைத் தன் உடலால் தொட்டும், பார்வையை அவர் மீது செலுத்தியும் மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்படிச் செல்லும்போது அவள் நெருப்புக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லிச் சென்றாள்.
அவள் {விலைமகள்} சென்ற பிறகு ரிஷ்யசிருங்கர் காதலில் மூழ்கி தனது உணர்வை இழந்தார். அவரது மனம் முழுவதும் அவளிடம் இருந்ததால் அது வெறுமையா இருந்தது. அதே நேரத்தில், தனது சாதிக்குச் சரியான கல்வியைப் பெற்று, ஆன்மிகத் தவத்தைக் கடந்த அவரது {ரிஷ்யசிருங்கரின்} இதயம் சுத்தமானதாக இருந்தது. சிங்கத்தைப் போன்ற பழுப்பு நிறக் கண்களுடனும், நகத்தின் நுனிவரையுள்ள உடல் முழுவதும் முடிகளுடனும் இருந்த காசியபரின் மகன் {விபாண்டகர்} அங்கே வந்தார். அவர் வந்து, சோகத்துடனும் தனியாகப் பெருமூச்சுவிட்டபடியும், மேல்நோக்கிய கண்களுடனும் அமர்ந்திருக்கும் தனது மகனை {ரிஷ்யசிரருங்கரைக்} கண்டார்.
துயருற்றிருந்த தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} விபாண்டகர், "என் மகனே, வேள்விக்கான விறகை இன்னும் ஏன் நீ எடுத்து வரவில்லை. தினமும் செய்ய வேண்டிய சேவைகளைச் சரியாகச் செய்திருக்கிறாய், என்று நினைக்கிறேன். வேள்விக்குத் தேவையான கரண்டிகளைச் சுத்தம் செய்விட்டாயா? கொண்டு வந்திருக்கும் பொருட்களை வைத்து நெருப்புக்கு வேள்வி செய்திருப்பாய் என்று நினைக்கிறேன். எதுவும் தேவைப்படும் நிலையில் நீ இல்லை என்று நினைக்கிறேன். ஓ! மகனே {ரிஷ்யசிருங்கனே}, நீ சோகத்துடன் உணர்விழந்து இருப்பது போலத் தெரிகிறாயே. நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? இந்த இடத்திற்கு யார் வந்தார் என்று என்னைக் கேட்கவிடு?" என்றார் {விபாண்டகர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.