Rishyasringa described the woman! | Vana Parva - Section 112| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தன் தந்தையான விபாண்டகரிடம், தான் சந்தித்த அயல் மனிதரைக் குறித்து ரிஷ்யசிருங்கர் சொல்வது…
ரிஷ்யசிருங்கர் {தந்தை விபாண்டகரிடம்} சொன்னார், "இன்று இங்கே தலையில் முடி நிறைந்த கூந்தலுடைய ஒரு ஆன்மிக மாணவர் வந்தார். அவர் உயரமாகவும் இல்லை கட்டையாகவும் இல்லை. அவர் நல்ல மனமுடையவராகவும், பொன்னிறமாகவும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களையுடையவராகவும், தேவரைப் போலப் பிரகாசிக்கும் அழகுடன் இருந்தார். சூரியனைப் போன்று அவர் அழகில் பிரகாசித்தார். அவரது பார்வை அருள் நிறைந்து கருமையுடன் இருந்தது. சடைபின்னிய அவரது கூந்தல் நீலமும் கருப்பும் கலந்து நீளமாகவும், நறுமணம் பூசப்பட்டும், தங்க இழைகள் பின்னப்பட்டும் இருந்தது.
அவரது கழுத்தில் வானத்தில் மின்னும் மின்னலைப் போன்ற அழகிய ஆபரணம் ஒன்று இருந்தது. அவருடைய கழுத்துக்குக் கீழே ஒரு முடி கூட இல்லாத இரண்டு சதைப் பந்துகள் மிக அழகிய உருவத்துடன் இருந்தன. அவருடைய இடை கொடிபோன்று மெலிதாகவும், நாபி அழகாகவும், விலாப்புறம் மென்மையாகவும் இருந்தன. எனது இடையில் இருக்கும் மேகலையைப் போல {அரைஞான் கயிறு} போல அவரது ஆடைக்குக் கீழே ஒரு தங்க இழை இருந்தது. அவரது பாதங்களில் அழகிய உரு கொண்ட ஏதோ ஒன்று {கொலுசு} கிளு கிளு சத்தத்தை உண்டாக்கியது. இந்த ஜெபமாலையைப் போல அவரது மணிக்கட்டிலும் இருந்த ஆபரணங்களும் அதே போன்ற ஒலியை எழுப்பின.
ஆபரணங்களுடன் அவர் நடக்கும்போது, நீரில் மகிழ்ச்சியாகத் திளைக்கும் அன்னங்கள் எழுப்பும் ஒலியைப் போல ஒரு ஒலி எழுகிறது. அவர் தனது மேனியில் அற்புதமான வடிவமைப்புடன் கூடிய ஆடை அணிந்திருந்தார். எனது ஆடைகள் அவருடையதைப் போல அழகாக இல்லை. அவரது முகம் காண்பதற்கு அழகாக இருந்தது. அடக்கப்பட்ட அவரது குரல் இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது பேச்சு ஆண்குயிலின் பாட்டுக்கு இணையாக இருந்தது. அதைக் கேட்டபோது, அந்த இசை உள்ளிருக்கும் ஆன்மாவைத் தொட்டது. இளவேனிற்காலத்துக் காடு, தென்றலால் தழுவப்படும்போது எப்படி அருள் நிறைந்து இருக்கிறதோ அப்படி, ஓ தந்தையே {விபாண்டகரே}, காற்று அவர் மீதும் படும்போது அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கிறது.
தலையில் நன்றாக முடியப்பட்ட கேசமும், முன் நெற்றியில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வகிடும் அவருக்கு இருக்கின்றன. அவருடைய இரண்டு கண்களும் சக்கரவாகப் பறைவைகளைப் போன்ற மிகுந்த அழகாக இருக்கின்றன. அவருடைய வலது கையில் ஒரு விசித்திரமான பழம் {பந்து} வைத்திருந்தார். அது தரையை அடைந்து, மீண்டும் மீண்டும் ஆச்சரியமான வகையில் வானத்திற்கு எழுகிறது. அவர் அதை அடித்து, தன்னைத் தானே சுற்றி, தென்றலால் நகர்த்தப்படும் மரம் போலச் சுழன்றார். ஓ! தந்தையே, நான் அவரைக் கண்ட போது, தேவர்களின் குமாரன் என நினைத்தேன். எனது இன்பமும் மகிழ்ச்சியும் அளவற்றதாக இருந்தது.
அவர் எனது உடலை அணைத்துக் கொண்டு, எனது சடா முடியைப் பிடித்து, எனது வாயை நோக்கிக் குனிந்து, அவரது வாயுடன் எனது வாயையும் பொருத்தி, மிகவும் இனிமையான ஒரு சத்ததை உண்டாக்கினார். அவர் தனது கால்களைக் கழுவ நீருக்காகக் கவலை கொள்ளவில்லை. என்னால் கொடுக்கப்பட்ட கனிகளையும் அவர் மதிக்கவில்லை. தான் கடைப்பிடிக்கும் ஆன்மிக நோன்பு இதுதான் என்று அவர் என்னிடம் சொன்னார். உயர்ந்த மனிதரான அவர் நான் பருக மிகுந்த மனம் உள்ள பானம் ஒன்றைக் கொடுத்தார். நான் அதனால் பெரும் இன்பத்தை அனுபவித்தேன். எனது கால்களுக்கு அடியில் தரை நகர்வதைப் போல உணர்ந்தேன்.
தங்க இழையால் கட்டப்பட்ட இந்த அழகிய மாலை அவருக்கே சொந்தமானது. அவர் ஆர்வத்துடனும் பக்தியுடனும் மாலைகளைப் பிரித்துப் போட்டு அவரது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவருடைய பிரிவு எனது இதயத்துக்குச் சோகத்தைக் கொடுக்கிறது. எனது உணர்வுகள் எரிச்சலைக் கொடுக்கின்றன. அவரிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். என்னுடன் இங்கே நடந்து திரிய எனக்கு அவர் வேண்டும். ஓ தந்தையே, இந்தக் கணமே என்னை அவரிடம் செல்ல விடுங்கள். அவர் பயிலும் ஆன்மிகப் பயிற்சி என்ன வகையானது? உயர்ந்த பக்தியுடைய அவருடன் அதே போன்ற வாழ்வு வாழ விரும்புகிறேன்.
அவர் எவ்வகைத் தவம் புரிகிறாரோ அவ்வண்ணமே தவம் புரிய எனக்கு விருப்பமிருக்கிறது. அவரைக் காணாமல் இருப்பதனால் எனது மனம் துன்பமடைகிறது" என்றார் {ரிஷ்யசிருங்கர்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.