Rishyashringa know nothing of women! | Vana Parva - Section 110b| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
விபாண்டகருக்கும் பெண்மானுக்கும் ரிஷ்யசிருங்கர் பிறப்பது; அங்கதேசத்தின் மழையின்மை; லோமபாதன் ஆலோசனை; ரிஷ்யசிருங்கரைத் தன் நாட்டுக்கு வரவழைக்க லோமபாதன் திட்டம்; விலைமாதர்களிடம் பேசுதல்; திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதிய மங்கை...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "காசியபரின் மகனான {பேரனான} ரிஷ்யசிருங்கர் எப்படிப் பெண்மானுக்குப் பிறந்தார்? வெறுக்கத்தக்க பாலியல் உறவில் பிறந்த அவர் புனிதத்தன்மையை எப்படி அடைந்தார்? {அசுரர்கள்} பலனையும் விருத்திரனையும் கொன்ற இந்திரன்
எக்காரணத்தால் அவ்விளம் பிள்ளைக்குப் பயந்து, பஞ்ச காலத்தில் மழையைப்
பொழிந்தான்? மானாக இருந்தவரின் மனதை ஆசைப்படும்படி செய்த புனித வாழ்வு
வாழ்ந்த இளவரசி சாந்தை எவ்வளவு அழகாக இருந்தாள்? அரசமுனியான லோமபாதன்
அறம்சார்ந்தவனாகச் சொல்லப்படுகிறானே, அவ்வாறிருக்க, பகனைத் தண்டித்தவனான
இந்திரன் அவனது நாட்டில் ஏன் மழையைப் பொழியவில்லை? ஓ! புனிதமான தவசியே!
{லோமசரே} இவை அனைத்தையும் விவரமாக, நடந்த படியே எனக்கு உரைக்க வேண்டும்.
ரிஷ்யசிருங்கரின் வாழ்வில் நடந்த சாதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்"
என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தண சாதியைச் சார்ந்த தவசியும், ஆன்மசாதனைகளால் தனது ஆன்மாவை
பக்குவப்படுத்தியிருந்தவரும், பிறப்பைக் கொடுக்கத்தவறாத வித்துடையவரும்,
கற்றவரும், உயிரினங்களின் தலைவர் போலப் பிரகாசிப்பவருமான விபாண்டகருக்கு, அச்சமூட்டும் பெயர் கொண்ட ரிஷ்யசிருங்கர் எப்படிப் பிறந்தார்
என்பதைக் கேள். தந்தை {விபாண்டகர்} உயர்ந்த மதிப்புக்குரியவர். அதே போல
மகனும் {ரிஷ்யசிருங்கர்} பெரும் பலம்வாய்ந்த ஆவி கொண்டவர். ஆகையால் அவர்
சிறியவனாக இருந்த போதிலும் முதிர்ந்தவர்களால் மதிக்கப்பட்டார்.
காசியபரின் மகனான விபாண்டகர்
ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக்
கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம்
நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி
கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக்
கண்டார். அதன்காரணமாக அவரது {விபாண்டகரின்} உயிர்நீர் வெளியேறியது. ஓ!
மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த
ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது.
அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான்
உண்மையில் தேவர்களின் மகளாவாள். உலகங்களைப் படைத்த புனிதமான பிரம்மன்
பழங்காலத்தில் அவளிடம், "நீ ஒரு பெண் மானாவாய். அந்த உருவத்தில்
இருக்கும்போது, நீ ஒரு தவசியைப் பெற்றெடுப்பாய். அன்றே நீ விடுதலை அடைவாய்"
என்றான்.
உலகப் படைப்பாளனின் வார்த்தைப் பொய்யாகாது;
ஆகையால் விதியும் அவ்வாறே ஆயிற்று. அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான
அவரது {விபாண்டகரின்} மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார். தவத்திற்குத் தன்னை
அர்ப்பணித்த ரிஷ்யசிருங்கர், தனது நாட்களைக் கானகத்திலேயே கழித்தார். ஓ
மன்னா {யுதிஷ்டிரா}! அந்தப் பெருமைமிக்கத் தவசியின் {ரிஷ்யசிருங்கரின்} தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதன் காரணமாகவே, அந்தக் காலத்தில் அவர் ரிஷ்யசிருங்கர் {தலையில் கொம்புடையவர்} என்று
அழைக்கப்பட்டார். தனது தந்தையைத் தவிர வேறு யாரையும் அவர்
{ரிஷ்யசிருங்கர்} கண்டதில்லை ஆகையால், அவரது மனம் எப்போதும் கடமையிலேயே
முழுதும் லயித்திருந்தது.
இதே காலத்தில் அங்கம் என்ற நாட்டின் {அங்கதேசத்தின்} ஆட்சியாளனாக, தசரதனின் {ரகுராமனின் தந்தையின்} நண்பனான லோமபாதன்
என்ற பெயர் கொண்ட மன்னன் இருந்தான். இன்பத்தின் மீதிருந்த நாட்டத்தால்
அவன் பொய்யுரைத்த குற்றத்தை அந்தணர்களுக்கு இழைத்தான் என்று நாம்
கேள்விப்படுகிறோம். அந்தக் காலத்தில் உலகத்தின் ஆட்சியாளனான அவனை {லோமபாதனை} புரோகித வகுப்பில் {அந்தணர்கள்} அனைவரும் புறக்கணித்தனர். அவன் {அறச்சடங்குகளில் துணை புரிந்து} ஆலோசனை கூறும் புரோகிதர் இல்லாமல் இருந்தான். ஆயிரம் கண்கள் கொண்ட தேவனும் {இந்திரனும்} அவனது நாட்டில் {லோமபாதன் நாடான அங்கதேசத்தில்} மழை பொழிவதைத் திடீரென நிறுத்தினான்.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அவனது மக்கள் {குடிமக்கள்} பாதிப்படையத்
தொடங்கினர். தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்த மதிப்பும் திறனும்
மிக்க, பண்பட்ட மனதுடைய பல அந்தணர்களிடம் சென்று, தேவர்கள் மழையைப்
பொழியும்படியான உதவிக்காக, "வானம் நமக்கு எப்படி மழையை அருளும்?
(இக்காரியத்துக்கு} உகந்த ஒன்றைச் சிந்தியுங்கள்" என்று கேட்டான்
{லோமபாதன்}.
இப்படிக் கேட்கப்பட்ட அந்தப் பண்பட்ட
மனிதர்கள் தாங்கள் கருதியதைச் சொன்னார்கள். அந்தத் தவசிகளில் ஒருவர்
அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, "ஓ! மன்னர்களின் தலைவா (லோமபாதா}, அந்தணர்கள்
உன்னிடம் கோபமாக இருக்கின்றனர். (ஆகையால்) அவர்களைச் சாந்தப்படுத்த ஏதாவது
செய். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பெண்களைப் பற்றியே அறியாது, எளிமையில் இனிமை
கண்டு, கானகத்தில் வசிக்கும் தவசியின் மைந்தனான ரிஷ்யசிருங்கருக்கு ஆள்
அனுப்பு. ஓ! மன்னா {லோமபாதா}, தவப்பயிற்சிகளில் பெருமைவாய்ந்த அவர் {ரிஷ்யசிருங்கர்}, உனது நாட்டுக்கு {அங்கதேசத்திற்கு} வந்தால், வானம் உடனே மழையை அருளும். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை" என்றார்.
ஓ!
மன்னா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட லோமபாதன், தனது
பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தான். அந்தணர்களைச் சமாதானப்படுத்திய
பிறகு அவன் நாடு திரும்பினான். மன்னன் திரும்பி வந்ததைக் கண்ட மக்கள்
இதயத்தில் மகிழ்ந்தனர். பிறகு அந்த அங்க மன்னன் {லோமபாதன்}, ஆழ்ந்த
ஆலோசனைகள் வழங்கும் தனது அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினான்.
ரிஷ்யசிருங்கரைச் சந்திப்பதற்கான திட்டத்தை வகுக்க அவன் பெரும் வலிகளைச்
சந்தித்தான்.
ஓ! வழிதப்பாதவனே (இளவரசனே) {யுதிஷ்டிரனே}!
அனைத்து கிளைகளிலும் ஞானம் கொண்டு, உலகக் காரியங்களில் பெரும் நிபுணத்துவம்
வாய்ந்த அவனது அமைச்சர்களுடன் விவாதித்து, சாத்தியங்களை ஆராய்ந்து,
கடைசியாக (தனது நோக்கம் வெற்றியடைய) ஒரு திட்டத்தை வகுத்தான். பிறகு அவன் {லோமபாதன்} நகரத்தில் இருந்த அனைத்திலும் புத்திசாலித்தனத்துடன் இருந்த விலைமகள்கள் பலருக்குச் சொல்லி அனுப்பினான்.
அவர்கள் வந்ததும், அந்தப் பூமியின் ஆட்சியாளன் அவர்களிடம், "அழகான
பெண்களே! தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரின் நம்பிக்கையைப் பெற நீங்கள்
ஏதாவது மயக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரை நீங்கள் எனது
நாட்டிற்கு அழைத்துவர வேண்டும்" என்றான். மன்னனின் கோபம் ஒரு புறம்,
தவசியின் சாபம் ஒரு புறம் எனக் கண்ட அப்பெண்கள் மிகவும் துக்கத்துடன்
குழம்பி, இது தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தீர்மானித்தனர்.
இருப்பினும்,
அவர்களில் ஒருத்தியான ஒரு கிழட்டுப் பெண் {நரைத்த தலை கொண்டவள் என்றும்
கொள்ளலாம்}, அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, தவத்தையே செல்வமாகக் கொண்டவரை,
இங்குக் கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். எனினும், அந்தத் திட்டத்திற்காக
எனக்கு நீர் சில குறிப்பிட்ட {நான் விரும்பும்} பொருட்களைக் கொடுக்க
வேண்டும். அப்படியென்றால்தான், தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரை என்னால்
அழைத்துவர முடியும்" என்றாள். அதன்காரணமாக மன்னன் அவள் கேட்ட அனைத்தையும்
கொடுத்தான். மேலும் அவன் {லோமபாதன்} ஏராளமான செல்வங்களையும், விதவிதமான
ரத்தினங்களையும் கொடுத்தான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அவள்
மேலும் தாமதிக்கமால், தன்னுடன் அழகும் இளமையும் நிறைந்த பல பெண்களைக்
காட்டுக்கு அழைத்துச் சென்றாள்" என்றார் {லோமசர்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.