Arrival of Lomasa! | Vana Parva - Section 91| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனிடம் லோமசர் வருகை; இந்திரலோகத்தில் அர்ஜுனன் பெற்ற ஆயுதங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு லோமசர் சொல்லுதல்; யுதிஷ்டிரனுக்கு இந்திரன் சொல்லியனுப்பிய செய்தியையும் சொல்லல்…
வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {ஜனமேஜயா}, தௌமியர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே அந்த இடத்துக்கு பெரும் சக்தி படைத்த லோமசர் வந்தார். பாண்டு மகன்களின் மூத்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தேவலோகத்தில் சக்ரனைச் {இந்திரனைச்} சூழ்ந்த தேவர்களைப் போல தன்னைத் தொடர்பவர்களாலும், உயரிய நேர்மை கொண்ட அந்தணர்களாலும் சூழப்பட்டு இருந்தான். அவரை {லோமசரை} முறைப்படி வரவேற்ற நீதிமானான யுதிஷ்டிரன், அவரது வருகைக்கான காரணத்தையும், அவரது பயணத்தின் நோக்கத்தையும் குறித்து விசாரித்தான்.
இப்படி பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட அந்த சிறப்புமிக்க தவசி {லோமசர்}, மிகவும் திருப்தியடைந்து, பாண்டவர்களுக்கு மகிழ்வூட்டும்படி இனிமையான மொழியில், "ஓ கௌந்தேயா {குந்தியின் மகனே}, நான் எனது விருப்பத்தின்படி அனைத்துப் பகுதிகளுக்கும் பயணித்துக் கொண்டிருந்தபோது, சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு {இந்திரலோகத்திற்குச்} சென்று, அங்கே அந்தத் தேவர்கள் தலைவனைக் கண்டேன். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் உனது வீரமிகுந்த தம்பி {அர்ஜுனன்}, சக்ரனின் பாதி ஆசனத்தில் அவனுடன் அமர்ந்திருப்பதை அங்கே கண்டேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த ஆசனத்தில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட நான் வியந்தேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} என்னிடம், "பாண்டுவின் மகன்களிடம் செல்லும்" என்று சொன்னான்.
இந்திரனின் வேண்டுதலாலும், பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனின் {அர்ஜுனனின்} வேண்டுதலாலும், உன்னையும், உனது தம்பிகளையும் காண, நான் இங்கே விரைவாக வந்தேன். ஓ குழந்தாய், உன்னைத் திருப்தியடையச் செய்யும் காரியத்தை உரைக்கப்போகிறேன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ மன்னா, அதை கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்}, உன்னுடன் இருக்கும் முனிவர்களுடனும் கேள். ஓ பாரத குலத்தின் காளையே, ஒப்பிலா ஆயுதத்தை அடைய உன்னால் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ருத்திரனிடம் {சிவனிடம்} அதை அடைந்தான். அமுதத்துக்குப் பின்பு எழுந்த பிரம்மசிரம் என்று அழைக்கப்படும் அந்தக் கடும் ஆயுதத்தை ருத்திரன் கடும் தவப்பயன்களால் அடைந்தான். அந்த ஆயுதத்தை, அதை விடுக்கும் மற்றும் திரும்பப்பெறும் மந்திரங்களுடன் அர்ஜுனன் பெற்றுக் கொண்டான்.
ஓ யுதிஷ்டிரா, அளவிடமுடியாத சக்தி கொண்ட அர்ஜுனன், வஜ்ரங்களையும், தண்டங்களையும், மற்ற தெய்வீக ஆயுதங்களையும், யமன், குபேரன், வருணன் மற்றும் இந்திரனிடம் இருந்தும் அடைந்தான். ஓ குரு குலத்தின் மகனே! அவன் குரல் மற்றும் கருவி இசையையும், நடனத்தையும், சாமத்தை {சாம வேதத்தை} முறைப்படி உரைத்தலையும் விஸ்வவசுவின் மகனிடம் முழுவதுமாகக் கற்றிருக்கிறான். இப்படி ஆயுதங்களையும் அடைந்து, கந்தர்வ வேதத்தில் நிபுணத்துவம் அடைந்த உனது மூன்றாவது தம்பியான பீபத்சு {பீபத்சு} (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது தேவர்களில் முதன்மையானவன் {இந்திரன்} அனுப்பிய செய்தியை உனக்குச் சொல்கிறேன் கேள்.
``அவன் {இந்திரன்} என்னிடம், "நீர் நிச்சயம் மனிதர்களின் உலகுக்குச் செல்வீர் என்பதில் சந்தேகமில்லை. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {லோமசரே}, எனது இந்த வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொல்லக்கடவீர். உனது தம்பியான அர்ஜுனன் ஆயுதங்களை அடைந்து, தேவர்களுகளால் செய்ய முடியாத பெரும் சாதனைகளை அவர்களுக்காகச் செய்து விரைவில் உன்னிடம் திரும்புவான். அதே வேளையில், நீ உனது சகோதரர்களுடன் சேர்ந்து உன்னைத் தவச்சாதனைகளுக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தவத்தை விட மேன்மையானது எதுவும் கிடையாது. தவப்பயன்களாலேயே ஒரு மனிதன் பெரும் பயன்களை அடைகிறான்.
ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ஆற்றல், வலிமை மற்றும் பராக்கிரமத்தில் பெரும் தீவிரம் கொண்ட கர்ணன் கலங்கடிக்கப்பட முடியாதவன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் கடும் போரில் நிபுணத்துவம் வாய்ந்தவன் என்றும், அவன் போர்க்களத்தில் எதிரிகளற்றவன் என்றும், அவன் பெரும் வில்லாளி என்றும், அவன் கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தும் செயல்திறம் மிக்க ஒரு வீரன் என்றும் சிறந்த கவசத்தால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆதித்தியனின் அந்த மேன்மைமிக்க மகன் {கர்ணன்} மகேஸ்வரனின் மகனுக்கு {முருகனுக்கு} நிகரானவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். அகன்ற தோள்கள் கொண்ட அர்ஜுனனின் உயர்ந்த இயற்கையான பராக்கிரமத்தைக் குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும்.
போரில், கர்ணன் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} பதினாறில் ஒரு பாகம் கூட நிகரானவன் கிடையாது. ஓ எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, சவ்யசாசின் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் இருந்து கிளம்பியதும், நான் உனது இதயத்தில் இருக்கும் கர்ணன் குறித்த பயத்தைப் போக்குகிறேன். ஓ வீரனே, உனது காரியத்தைப் பொறுத்தவரை தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தை உடனே துவங்குவது குறித்து லோமசப் பெருமுனிவர் சந்தேகமற உன்னிடம் பேசுவார். அந்த மறுபிறப்பாளரான முனிவர், தவத்தின் பயன்களைக் குறித்தும், தீர்த்தங்களைக் குறித்தும் உரைக்கும்போது, அதை நீ மதிப்புடன் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டான் {இந்திரன்}" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.