Agastya created Lopamudra! | Vana Parva - Section 96| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
இல்வலன், வாதாபி அறிமுகம்; அகஸ்தியர் தனது மூதாதையர்கள் குழிக்குள் தொங்குவதைக் காண்பது; அகஸ்தியர் லோபாமுத்திரையை உருவாக்கி விதரப்ப்ப மன்னனுக்குக் கொடுப்பது; லோபாமுத்திரை விதரப்ப்ப அரச பரம்பரையில் பிறப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன் பிறகு, அந்தணர்களுக்குப் பெரும் பரிசுகளைக் கொடுத்து எப்போதும் தனித்துத் தெரியும் குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்து, துர்ஜயத்தில் {வாதாபியின் மணிமதி நகரம்} வசித்தான். இங்கேதான், பேசுபவர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், லோமசரிடம், அகஸ்தியர் வாதாபியை ஏன் கொன்றார் என்று கேட்டான். மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களை அழிக்கும் தைத்திய {வாதாபி} பராக்கிரமத்தையும், அந்த அசுரன் {வாதாபி} மீது அகஸ்தியருக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணத்தையும் கேட்டான்.
இப்படிக் கேட்கப்பட்ட லோமசர், "ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மணிமதி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரத்தில் இல்வலன் என்ற ஒரு தைத்தியன் {அசுரன்} இருந்தான். அவனுக்கு வாதாபி என்ற ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அந்தத் திதியின் மகன் {இல்வலன்}, தவப்பலன் மிக்க ஓர் அந்தணனிடம் "ஓ புனிதமானவரே, எனக்கு இந்திரனுக்கு நிகரான மகனை அருளும்" என்று கேட்டான். இருப்பினும், அந்த அந்தணன் அவ்வசுரனுக்கு இந்திரனைப் போன்ற மகனை அருளவில்லை. இதனால் அவ்வசுரன் அந்தணன் மீது பெரும் கோபம் கொண்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்நாளில் இருந்து, அசுரன் இல்வலன் அந்தணர்களை அழிப்பவனானான். மாயச்சக்தி கொண்ட கோபம் நிறைந்த அவ்வசுரன் {இல்வலன்}, தனது தம்பியை செம்மறி ஆட்டுக்கடாவாக மாற்றினான். நினைத்த உரு அடையக்கூடிய வாதாபியும் உடனடியாக ஆட்டுக்கடாவின் உருவத்தை அடைந்தான். சரியாகச் சுத்தம் செய்யப்பட்ட அந்த ஆட்டின் இறைச்சி அந்தணர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அதை உண்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டனர். இல்வலன், தனது குரலால் யாரொருவனைக் கட்டளையிட்டு அழைத்தாலும், அவன் யமனின் வசிப்பிடத்தில் இருந்தாலும், மீண்டும் உயிருடன் கூடிய தனது உடலை அடைந்து இல்வலனிடம் வந்து விடுவான்.
இப்படிச் செம்மறி ஆட்டுக்கடாவாக அசுரன் வாதாபியை மாற்றி, அவனது இறைச்சியை முறைப்படி சமைத்து, அந்தணர்களுக்கு ஊட்டிய பிறகு, அவன் வாதாபியை கட்டளையிட்டு அழைப்பான் {இல்வலன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பூமியின் தலைவா, அந்தணர்களின் எதிரியான பெரிய உருவமும், பெரும் பலமும், மாயச்சக்தியும் கொண்ட அசுரன் வாதாபி, இல்வனின் உரத்தக் குரலைக் கேட்டு, {தனது இறைச்சியை உண்ட} அந்த அந்தணனின் விலாவைக் கிழித்துத் திறந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படியாக அந்தத் தீய இதயம் கொண்ட தைத்தியன் இல்வலன், அந்தணர்களுக்கு உணவு படைத்து, தொடர்ச்சியாக அவர்களது உயிரை எடுத்து வந்தான்.
அதேவேளையில், சிறப்புமிக்க அகஸ்தியர், இறந்து போன தனது மூதாதையர்கள், தலைகீழாக ஒரு குழிக்குள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம் அவர், "உங்களது காரியம் என்ன?" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, "வாரிசுக்காக" என்றனர். மேலும் அவர்கள், "நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ! அகஸ்தியா, நீ எங்களுக்காக ஒரு நல்ல மகனைப் பெற்றால், நாங்கள் இந்த நரகத்தில் இருந்து காக்கப்படுவோம். நீயும் அந்த வாரிசினால் உனது உன்னத நிலையை அடையலாம்" என்றர்.
பெரும் சக்தியும், உண்மையும், அறநெறியும் கொண்ட அகஸ்தியர், "பித்ருக்களே, நான் உங்கள் விருப்பதை நிறைவேற்றுவேன். இந்தத் துயரம் உங்களை விட்டு அகலட்டும்" என்றார். பிறகு அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்} தனது குலத்தைத் தழைக்க வைப்பது குறித்துச் சிந்தித்தார். ஆனால் தானே தனது மகனாகப் பிறக்க, தனக்குத் தகுதியான மனைவியை அவர் காணவில்லை. ஆகையால் அந்த முனிவர் {அகஸ்தியர்}, ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் மிக அழகான அங்கங்களை எடுத்து ஓர் அற்புதமான பெண்ணைப் படைத்தார். பிறகு அந்த முனிவர், வாரிசுக்காகத் தவநோன்புகளில் இருந்த விதரப்ப்ப நாட்டு மன்னனிடம் தனக்காகப் படைத்த அந்தப் பெண்ணைக் கொடுத்தார்.
(இப்படிக் கொடுக்கப்பட்ட) இனிமையான முகம் கொண்ட அந்த அருளப்பட்ட மங்கை (விதரப்ப்ப அரச பரம்பரையில்) தனது பிறப்பை அடைந்தாள். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் அவளது அங்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தன. ஓ பூமியின் தலைவா, விதரப்ப்பத்தின் ஆட்சியாளனான அந்தப் பூமியின் தலைவனின் வாழ்வில் அவள் நுழைந்தவுடன், அவன் {விதரப்ப்ப அரசன்} இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் அந்தணர்களுக்குச் சொல்லி அனுப்பினான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களும் அந்த அருளப்பட்ட பெண்ணுக்கு லோபாமுத்திரை (லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள்} என்ற பெயரை அளித்தனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீருக்கு மத்தியில் இருக்கும் தாமரை போல அல்லது நெருப்பில் இருக்கும் சுடரைப் போல அவள் பெரும் அழகுடன் விரைவாக வளர்ந்தாள்.
அந்தப் பெண் {லோபமுத்திரை} வளர்ந்து, பருவமடைந்தவுடன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு கன்னிகளும், நூறு பணிப்பெண்களும் அவளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யக் காத்திருந்தனர். அந்த நூறு பணிப்பெண்கள் மற்றும் கன்னியர்களால் சூழப்பட்ட அவள், பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் ரோகிணியைப் போலப் பிரகாசித்தாள். அவள் {லோபமுத்திரை} பருவம் அடைந்த பின்னரும், அவளது நன்னடத்தைகளையும், அற்புதமான குணங்களையும் கண்ட எவரும், அவளது தந்தையான விதரப்ப்ப மன்னனின் மீதிருந்த பயத்தால், அவளது கரத்தைக் கேட்கத் துணியவில்லை. உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த லோபாமுத்திரை, அழகில் அப்சரசுகளையும் விஞ்சி, தனது நடத்தையால், தன் தந்தையையும், தனது உறவினர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். விதரப்ப்ப இளவரசியான தனது மகள் பருவமடைந்ததைக் கண்ட தந்தை {விதரப்ப்ப மன்னன்}, தனது மனதிற்குள், "இந்த எனது மகளை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்?" என்று நினைத்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.