The Marriage of Lopamudra with Agastya! | Vana Parva - Section 97| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
விதரப்ப்ப நாட்டரசன் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு அளித்தது; அகஸ்தியர் லோபாமுத்திரையை விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடச் சொன்னது; பருவ காலத்தில் மனைவியை அணுகிய அகஸ்தியரிடம் விலையுயர்ந்த படுக்கை கோரிய லோபாமுத்திரை...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்தப் பெண் {லோபாமுத்திரை} குடும்பக் கடமைகளை ஆற்றத் தகுந்த பருவத்தை அடைந்துவிட்டாள் என்று அகஸ்தியர் கருதியபோது, அவர் பூமியின் தலைவனான விதரப்ப்ப ஆட்சியாளனிடம் சென்று அவனிடம், "ஓ! மன்னா, உனது மகளான லோபாமுத்திரையை எனக்கு அளிக்குமாறு கோருகிறேன்" என்றார். இப்படி அந்த முனிவரால் சொல்லப்பட்ட விதரப்ப்ப நாட்டு மன்னன் நினைவிழந்தான். அவனது மகளை அந்த முனிவருக்கு {அகஸ்தியருக்கு) கொடுக்க விருப்பமில்லையென்றாலும், மறுப்பதற்கு அவன் துணியவில்லை. பிறகு அந்தப் பூமியின் தலைவன் தனது ராணியிடம் சென்று, "இந்த முனிவர் {அகஸ்தியர்} பெரும் சக்தியுள்ளவராக இருக்கிறார். அவர் கோபப்பட்டால், அவரது சாபமெனும் நெருப்பால் என்னை உட்கொண்டுவிடுவார். ஓ! இனிய முகம் கொண்டவளே, உனது விருப்பம் என்னவென்று என்னிடம் சொல்" என்றான்.
மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவள் எவ்வார்த்தையையும் சொல்லவில்லை. துன்பத்துடன் ராணியுடன் இருக்கும் மன்னனைக் கண்ட லோபாமுத்திரை அவர்களைக் குறித்த நேரத்தில் அணுகி, "ஓ! ஏகாதிபதி, என்னைக் குறித்து நீர் வருத்தப்படலாகாது. ஓ! தந்தையே, என்னை அகஸ்தியருக்கு அளியும். அப்படி என்னை அளிப்பதால் உம்மைக் காத்துக் கொள்ளும்" என்றாள். தனது மகளின் இவ்வார்த்தைகளினால், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {விதரப்ப்ப மன்னன்}, லோபாமுத்திரையைச் சிறப்புமிக்க அகஸ்தியருக்கு உரிய சடங்குகளுடன் கொடுத்தான்.
அவளை மனைவியாக அடைந்த அகஸ்தியர் லோபாமுத்திரையிடம், "இந்த விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடு" என்றார். தனது தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட பெரிய கண்களையும், வாழைத்தண்டு போலச் சிறுத்துச் செல்லும் தொடைகளையும் கொண்ட அந்த மங்கை தனது அழகான விலையுயர்ந்த நுண்ணிய அமைப்புக் கொண்ட ஆடைகளைக் கைவிட்டாள். அவற்றைக் கைவிட்டு, கந்தலும் மரவுரியும், மான் தோலும் உடுத்தி நோன்பிலும் செயலிலும் தனது கணவனுக்கு இணையானவளாக ஆனாள். பிறகு கங்காத்துவாரத்தை {கங்கோத்ரியை} அடைந்த முனிவர்களில் சிறந்த ஒப்பற்றவர் {அகஸ்தியர்}, உதவிகரமாக இருந்த தனது மனைவியின் துணையுடன் கடும் தவம் இருந்தார். மிகவும் திருப்தியடைந்த லோபாமுத்திரையும், தனது கணவன் {அகஸ்தியர்} மீதிருந்து பெரும் மரியாதையால் அவருக்குச் சேவை செய்யத் தொடங்கினாள். மேன்மைமிக்க அகஸ்தியரும் தனது மனைவி மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கணிசமாகக் காலம் கடந்ததும், ஒரு நாள் அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்}, பருவகாலத்தில் நீராடி தவப் பிரகாசத்துடன் ஒளிர்ந்த லோபாமுத்திரையைக் கண்டார். அந்தப் பெண்ணின் சேவைகளையும், சுத்தத்தையும், சுயக்கட்டுப்பாட்டையும், அருளையும், அழகையும் கண்டு மிகவும் திருப்தி கொண்ட அவர் அவளை மண உறவு கொள்ள அழைத்தார். இருப்பினும் அந்தப் பெண் {லோபாமுத்திரை}, தனது கரங்களைக் கூப்பி, நாணத்துடனும் அன்புடனும், "ஒரு கணவன், சந்தேகமற வாரிசுக்காகவே ஒரு மனைவியை மணக்கிறான். ஆனால் ஓ! முனிவரே, நான் உம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல, நீர் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதே உமக்குத் தகும். ஓ மறுபிறப்பாளரே {அந்தணரே}, எனது தந்தையின் அரண்மனையில் நான் வைத்திருந்ததைப் போன்ற படுக்கையில் நீர் என்னை அணுகுவதே உமக்குத் தகும். நீர் மலர்மாலை மற்றும் பிற ஆபரணங்களின் அலங்காரத்துடனும் இருக்க வேண்டும் என்றும், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு கொண்டு நான் உம்மை அணுக வேண்டும் என்றும் விரும்புகிறேன். இல்லையெனில், சிவப்புக்கறைகூடிய இந்தக் கந்தலுடையுடன் நான் உம்மை அணுக முடியாது. ஓ மறுபிறப்பாள முனிவரே, (அத்தகு சமயத்தில்) ஆபரணங்கள் பூணுவது பாவமுமாகாது" என்றாள்.
தனது மனைவியின் {லோபமுத்திரையின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அகஸ்தியர் "ஓ! அருளப்பட்டவளே, ஓ! கொடியிடையாளே, ஓ! லோபாமுத்திரையே, உனது தந்தையிடம் இருப்பது போல என்னிடம் செல்வம் இல்லை" என்றார். அதற்கு அவள், "தவத்தைச் செல்வமாகக் கொண்ட நீர், உமது தவச் சக்தியால், மனிதர்களின் உலகில் கிடைக்கும் அத்தனையையும் நிச்சயம் ஒருக்கணத்தில் கொண்டவரக்கூடியவர்" என்றாள். அகஸ்தியர், "நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இருப்பினும் அஃது எனது தவப்பலனை வீணடித்துவிடும். எனது தவப்பலன்கள் தளராத வகையிலுள்ள காரியத்தை எனக்குச் சொல்" என்றார். பிறகு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எனது பருவ காலம் நீண்ட காலத்திற்கு நிலைக்காது. இருப்பினும், மற்றபடி {நான் கோரியது இல்லாமல்} நான் உம்மை அணுக விரும்பவில்லை. உமது (தவப்) பலன்களையும் எவ்வகையிலும் அழிக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், உமது அறத்திற்குப் பழுதேற்படாமல் நான் விரும்பியதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றாள்.
பிறகு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்டவளே {லோபமுத்திரையே}, இதுவே நீ உன் இதயத்தில் தீர்மானித்திருக்கும் உறுதியென்றால், நான் செல்வத்தைத் தேடி வெளியே செல்வேன். அதுவரை, நீ இவ்விடத்தில் உனது விருப்பப்படி இருந்துகொள்" என்றார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.