Agastya's quest for wealth! | Vana Parva - Section 98| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியர், மன்னர்கள் சுருதர்வான், பிரத்னஸ்வன் மற்றும் திரஸதஸ்யு ஆகியோரிடம் சென்று செல்வம் வேண்டுதல்; அவர்களது வரவு செலவுகள் சமமாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் இருந்து எதையும் பெறாமல், அவர்களது ஆலோசனையின் பேரில் இல்வலனிடம் செல்ல உத்தேசிப்பது...
லோமசர் தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அகஸ்தியர் பிறகு, மற்ற மன்னர்களை விடச் செல்வந்தனாகக் கருதப்பட்ட மன்னன் சுருதர்வானிடம் செல்வத்தை இரந்து கேட்கச் சென்றார். அந்த ஏகாதிபதி, குடத்தில் பிறந்த முனிவர் {அகஸ்தியர்} தனது நாட்டின் எல்லைக்கு வந்திருப்பதை அறிந்து, தனது அமைச்சர்களுடன் சென்று அந்தப் புனிதமான மனிதரை மரியாதையுடன் வரவேற்றான். மன்னன், முதலில் அர்க்கியத்தைக் (நறுமணமூட்டப்பட்ட குடிநீர்) கொடுத்து, பணிவுடன் கரங்கள் கூப்பி வணங்கி, அம்முனிவரின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்ற பங்கை எனக்குக் கொடு" என்று கேட்டார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வரவும் செலவும் சமமாக இருப்பதை அம்முனிவரிடம் தெரிவித்த மன்னன் {சுருதர்வான்}, "ஓ கற்றவரே, எனது உடைமைகளில் இருந்து நீர் விரும்பிய செல்வத்தை எடுத்துக் கொள்ளும்" என்று சொன்னான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் ஏதாவது ஓர் உயிரினம் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். ஆகையால், அம்முனிவர் சுருதர்வானையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரத்னஸ்வனிடம் சென்றார். பின்னவனும், தனது நாட்டின் எல்லையில் அவரது வருகையை அறிந்து உரிய முறையில் வரவேற்றான். பிரத்னஸ்வனும் அர்க்கியம் மற்றும் பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்தான். பிறகு அந்த ஏகாதிபதி, அவர்களின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு" என்று கேட்டார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, "இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்" என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு அகஸ்தியர், சுருதர்வான் மற்றும் மன்னன் பிரத்னஸ்வன் ஆகியோர் புருகுத்சன் மகனான பெரும் செல்வம் படைத்த திரஸதஸ்யுவிடம் சென்றனர். அந்த உயர் ஆன்ம திரஸதஸ்யு தனது நாட்டின் எல்லையில் அவர்களது வருகையை அறிந்து, அங்குச் சென்று அவர்களை உரிய முறையில் வரவேற்றான். இக்ஷவாகு குலத்தில் வந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான அவன், அவர்கள் அனைவரையும் உரிய முறையில் வணங்கி, அவர்கள் வருகையின் காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு" என்று கேட்டார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, "இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்" என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அம்முனிவரிடம் ஒன்றாக, "ஓ அந்தணரே {அகஸ்தியரே}, இந்தப் பூமியில் உள்ளவர்களிலேயே அதிகச் செல்வமுடைய இல்வலன் என்ற தானவன் ஒருவன் இருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து இன்று அவனை அணுகி, செல்வத்தை இரந்து கேட்போம்" என்றனர்.
லோமசர் தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் பரிந்துரை அவர்கள் அனைவருக்கும் சரியானதாகத் தோன்றியது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக இல்வலனிடம் சென்றார்கள்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.