Agastya digested Vatapi! | Vana Parva - Section 99a| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியருக்கு வாதாபியின் இறைச்சியை இல்வலன் படைப்பது; வாதாபியை உண்ட அகஸ்தியர் அவனைச் செரித்தது; அகஸ்தியருக்கும், மூன்று மன்னர்களுக்கும் இல்வலன் செல்வங்களைக் கொடுத்து அனுப்பியது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த மன்னர்களும், பெரும் முனிவரும் {அகஸ்தியரும்} அவனது ஆட்சிப் பகுதிக்குள் வந்ததை அறிந்து இல்வலன் தனது அமைச்சர்களுடன் சென்று அவர்களை முறைப்படி வழிபட்டான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} அந்த அசுரர்களின் இளவரசன் {இல்வலன்} அவர்களை விருந்தோம்பலுடன் வரவேற்று உற்சாகப்படுத்தி, (ஆடாக மாறிய) தனது தம்பியின் {வாதாபியின்} சுத்திகரிக்கப்பட்ட இறைச்சியைக் கொடுத்தான். பெரும் பலம் வாய்ந்த அசுரனான வாதாபி ஆட்டிறைச்சியாகி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அரச முனிகள் துயரமடைந்து உற்சாகமிழந்து, தங்களை இழந்தனர். ஆனால் முனிவர்களில் சிறந்த அகஸ்தியர் அந்த அரச முனிகளிடம், "வருத்தத்தை வளர்க்காதீர்கள். நான் அந்தப் பெரும் அசுரனை உண்பேன்" என்றார்.
பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த முனிவர் {அகஸ்தியர்} அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். அசுரர்களின் இளவரசனான இல்வலன் உணவைப் புன்னகையுடன் பரிமாறினான். அகஸ்தியர் (ஆடாக மாறிய) வாதாபியின் அந்த முழு இறைச்சியையும் உண்டார். இரவு உணவு முடிந்ததும் இல்வலன் தனது தம்பியை அழைத்தான். ஆனால், ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப "ஓ! வாதாபியே, வெளியே வா" என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, "அவனால் எப்படி வெளிவர முடியும்? நான் ஏற்கனவே அந்தப் பெரும் அசுரனைச் செரித்து விட்டேன்" என்றார்.
தனது தம்பி செரிக்கப்பட்டதைக் கண்ட இல்வலன் துயரமடைந்து, உற்சாகமிழந்து, தனது அமைச்சர்களுடன் கரங்கள் கூப்பி அந்த முனிவரிடம், "நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், "ஓ! அசுரா, நீ பெரும் பலசாலி என்றும், அபரிமிதமான செல்வம் படைத்தவன் என்றும் நாங்கள் அறிவோம். இந்த மன்னர்கள் அவ்வளவு செழிப்பாக இல்லை. எனக்கும் செல்வத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு" என்றார். இப்படிக் கேட்கப்பட்ட இல்வலன் முனிவரை வணங்கி, "நான் கொடுக்க எண்ணியிருப்பதை நீர் சொன்னால், பிறகு நான் உமக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்" என்றான்.
இதைக் கேட்ட அகஸ்தியர், "ஓ! பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்" என்றார். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ !பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புரவிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மன்னர்களையும் அகஸ்தியரையும் அனைத்துச் செல்வங்களுடன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றன. பிறகு அந்த அரச முனிகள் அகத்தியரிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பினர்.
அகஸ்தியர் (அந்தச் செல்வத்தை வைத்து) தனது மனைவி லோபாமுத்திரை விரும்பிய அனைத்தையும் செய்தார். பிறகு லோபாமுத்திரை, "ஓ! சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்" என்றாள். அதற்கு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா? அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா? அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா? அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா?" என்று கேட்டார். அதற்கு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே ஆயிரம் பேருக்குச் சமமான ஒரு பிள்ளை பெற என்னை அனுமதியும். பல தீயவர்களைவிட ஒரு நல்ல கற்ற மகனே விரும்பத்தகுந்தவன்" என்றாள்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தப் பக்திமானான முனிவர் தனக்குச் சமமான நடத்தையும், தனக்கு அர்ப்பணிப்புள்ளவளுமான தனது மனைவியை அறிந்தார். அவள் கருவுற்றதும், அவர் கானகத்திற்குச் சென்றார். அந்த முனிவர் சென்றதும், அந்தக்கரு ஏழு வருடங்களாக வளர ஆரம்பித்தது. ஏழாம் ஆண்டு முடிந்ததும், பெரும் கல்வி கற்றவரான திரிதஸ்யு தன்னொளிப் பிரகாசத்துடன் கருவறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் பெரும் அந்தணர், பெரும் சக்தி கொண்ட சிறப்புமிக்கத் துறவி ஒரு முனிவரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்து, கருவறையில் இருந்து வெளியே வந்ததும் வேதங்களையும், உபநிஷத்துகளையும், அங்கங்களையும் உரைக்க ஆரம்பித்தார். குழந்தையாக இருக்கும்போதே பெரும் சக்தி பெற்ற அவர் வேள்விக்கான எரிபொருளைத் தனது தந்தையின் ஆசிரமத்திற்குச் சுமந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் இத்மவாஹன் (வேள்வி விறகைச் சும்பபவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தனது மகனை இத்தகு அறங்களுடன் கண்ட முனிவர் {அகஸ்தியர்} பெரிதும் மகிழ்ந்தார்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படியே அகஸ்தியர் தனது மூதாதையர்கள் நிமித்தமாக அற்புதமான மகனைப் பெற்றெடுத்து அவர்கள் {மூதாதையர்கள்} விரும்பிய அற்புதமான உலகங்களை அடைய வைத்தார். அந்தக் காலத்தில் இருந்தே இந்த இடம் அகஸ்தியரின் ஆசிரமமாக அறியப்படுகிறது. ஓ! மன்னா, உண்மையில் இது பிரஹ்ரதக் குலத்தைச் சார்ந்த வாதாபியைக் கொன்ற அகஸ்தியரின் பல அழகுகளைக் கொண்ட அருளப்பட்ட ஆசிரமமே.
தேவர்களாலும் கந்தர்வர்களாலும் வழிபடப்படும் இந்தப் புனிதமான பாகீரதி நதி, ஆகாயத்தில் காற்றால் ஆட்டம்போடும் நீண்ட முக்கோண வடிவக் கொடியைப் போல விரைவாக ஓடுகிறது. அங்கே பாறைகள் நிறைந்த மலை உச்சிகளில் ஓடி, கீழ்நோக்கி இறங்கி, பயந்த பெண்பாம்பு போல மலைகளின் இறக்கத்தில் ஓடி, மகாதேவனின் சடாமுடியில் இருந்து வெளியேறும் அவள், தென்னாட்டிற்குள் பிரவாகமாக ஓடி, தாயைப் போல நன்மை செய்து, விருப்பமான மனைவியைப் போலக் கடலுக்கு விரைந்தோடி அதனுடன் கலக்கிறாள். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விரும்பியவாறு அந்தப் புனித நதியில் நீராடு. ஓ! யுதிஷ்டிரா, அங்கே முனிவர்களால் வழிபடப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் பிருகு தீர்த்தத்தைப் பார். அங்கே நீராடிய (பிருகு குல) ராமன் {பரசுராமன்} (தசரதனின் மகனான) ராமனால் இழந்த சக்தியை மீண்டும் பெற்றான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இங்கே உனது தம்பிகளுடனும் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடனும்} நீராடினால், தசரதனின் மகனுடன் பகை கொண்ட நடந்த போரில் ராமனின் {பரசுராமனின்} சக்தி இழந்து போய் மீண்டும் இங்கே அடைந்ததைப் போலத் துரியோதனனால் எடுக்கப்பட்ட உனது சக்தியை நீ மீண்டும் அடைவாய்." என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.