The encounter between Rama and Parasurama! | Vana Parva - Section 99b| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பரசுராமன் தசரத ராமனைச் சந்தித்து தனது வில்லைக் கொடுத்துப் பரிசோதிப்பது; பரசுராமனின் கர்வத்தைப் பங்கப்படுத்திய ராமன்; சக்தியை இழந்த பரசுராமன் பிறகு வதூசரம் என்ற நதிக்குச் சென்று தனது இழந்த சக்தியை மீண்டும் பெறுவது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, லோமசரின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷடிரன் தனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்து அங்கே {கங்காத்துவாரத்தில்} நீராடி, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தினான். ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகு, அவனது உடல் அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து, எதிரிகளின் கண்களுக்கு அரூபமானான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "ஓ! சிறந்தவரே, ஏன் ராமனின் {பரசுராமனின்} சக்தியும் பலமும் எடுக்கப்பட்டது? அதன் பிறகு அவர் எப்படி அதை மீட்டெடுத்தார்? ஓ! மேன்மையானவரே, நான் உம்மிடம் கேட்கிறேன். அனைத்தையும் சொல்வீராக" என்றான்.
லோமசர் சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (தசரதன் மகனான) ராமன் மற்றும் பிருகு குலத்தின் புத்திகூர்மைகொண்ட ராமன் {பரசுராமன்} ஆகியோரின் வரலாறுகளைக் கூறுகிறேன் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராவணனின் அழிவிற்காக விஷ்ணு தனது சொந்த உடலுடன், சிறப்புமிக்கத் தசரதனிடத்தில் பிறந்தான். தசரதனின் மகன் {ராமன்} பிறந்ததும், அயோத்தியையில் நாம் அவனைக் கண்டோம். பிறகுதான் ரிசகரின் மகனான பிருகு குலத்தின் ரேணுகா மூலம் பிறந்த ராமன் {பரசுராமன்}, களங்கமற்ற செயல்கள் புரிந்த தசரதனின் மகனான ராமனைக் குறித்துக் கேள்விப்பட்டு அயோத்திக்குச் சென்றார். ஆர்வ மிகுதியால் அவர் க்ஷத்திரியர்களுக்கு மரணத்தைக் கொடுத்த தெய்வீக வில்லையும் தசரத மைந்தனின் பராக்கிரமத்தை உறுதி செய்ய எடுத்துச் சென்றார்.
பிருகு குலத்தின் ராமன் {பரசுராமன்} தனது நாட்டுக்குள் வந்ததை அறிந்த தசரதன், அந்த வீரரை உரிய மரியாதையுடன் அழைத்துவர தனது சொந்த மகனான ராமனை அனுப்பி வைத்தான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தசரதனின் மகன் தன்னை அணுகுவதையும், ஆயுதங்களுடன் தயாராக இருப்பதையும் கண்ட பிருகு குல ராமன் {பரசுராமன்} புன்னகையுடன் அவனிடம் {தசரத ராமனிடம்}, ஓ! மன்னா, ஓ! மேன்மையானவனே, க்ஷத்திரிய குலத்தை அழிக்க நான் பயன்படுத்திய கருவியான எனது கைகளில் இருக்கும் இந்த வில்லில், உன்னால் இயன்றால், உனது பலத்தையெல்லாம் பிரயோகித்து நாணேற்று" என்று சொன்னார். இப்படிச் சொல்லப்பட்ட தசரதன் மகன் {ராமன்}, "ஓ சிறப்புமிக்கவரே, என்னை இப்படி அவமதிப்பது உமக்குத் தகாது. நான் க்ஷத்திரிய வகையின் அறங்களுக்குத் தாழ்ந்த மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவனல்ல. குறிப்பாக இக்ஷவாகுவின் வழித்தோன்றல்கள் யாரும் தங்கள் கரங்களின் பராக்கிரமம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை" என்றான்.
பிறகு தசரதன் மகனிடம் {ராமனிடம்}, பிருகு குல ராமன் {பரசுராமன்}, "அனைத்துத் தந்திரப் பேச்சுகளையும் நிறுத்து. ஓ மன்னா! இந்த வில்லை எடு" என்றார். இதற்குத் தசரதனின் மகனான ராமன், பிருகு குல ராமனின் {பரசுராமனின்} கைகளில் இருந்த க்ஷத்திரியர்களுக்கு அழிவைக் கொடுத்த வில்லைக் கோபத்துடன் வாங்கினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {தசரத ராமன்} புன்னகையுடன் சிறு முயற்சியும் இல்லாமல், அந்த வில்லில் நாண்பூட்டி அனைத்து உயிரினங்களையும் பயங்கொள்ளச் செய்யும் நாணொலியை எழுப்பினான். தசரதனின் மகனான ராமன், பிருகுவின் ராமனிடம் {பரசுராமனிடம்}, "இதோ. இந்த வில்லுக்கு நாண் பூட்டிவிட்டேன். ஓ! அந்தணரே, நான் வேறு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமன்}, தசரதனின் சிறப்புமிக்க மகனிடம் {ராமனிடம்} ஒரு தெய்வீகக் கணையைக் கொடுத்து, "ஓ! வீரனே {தசரத ராமா}, இந்தக் கணையை வில்லின் நாணில் பொருத்தி, நாணை உனது காது வரை இழு" என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைக் கேட்ட தசரதனின் மகன் {ராமன்} கோபத்தில் எரிந்து, "நீர் சொன்னதை நான் கேட்டேன். மன்னித்தும் விட்டேன். ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமனே}, நீர் கர்வம் நிறைந்து இருக்கிறீர். பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} கருணையால் பெற்ற சக்தியைக் கொண்டே நீர் க்ஷத்திரியர்களுக்கு மேன்மையானவராக இருக்கிறீர். அதனால் தான் நீர் என்னை அவமதிக்கிறீர். எனது சுய உருவைப் பாரும். நான் உமக்குப் பார்வையைத் தருகிறேன்" என்றான்.
ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, பிறகு பிருகு குலத்தின் ராமன் தசரதன் மகனின் உடலில் வசுக்களுடன் கூடிய ஆதித்தியர்களையும், ருத்ரர்களையும், மருதர்களுடன் கூடிய சத்யஸ்களையும், பித்ருக்களையும், ஹூதாசனனையும், நட்சத்திரக் குவியல்களையும், கோள்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், யஹர்களையும், ஆறுகளையும், தீர்த்தங்களையும், பிரம்மனால் அடையாளங்காட்டப்பட்ட முனிவர்களில் நித்தியமான வாலகில்யர்களையும், தெய்வீக முனிவர்களையும், கடல்களையும், மலைகளையும், உபநிஷத்துகள், வசத்துகளுள், வேள்விகளுடன் கூடிய வேதங்களையும், சமன்களின் உயிர்த்தோற்றத்தையும், ஆயுத அறிவியலையும், மழையுடன் கூடிய மேகங்களையும், மின்னலையும் கண்டார்.
பிறகு சிறப்புமிக்க விஷ்ணு அந்தக் கணையை அடித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இடி மற்றும் எரிகற்களின் ஓசை உலகத்தை நிறைத்து வானத்தில் மின்னல் தோன்ற ஆரம்பித்தது. பூமியின் பரப்பு மீது தூசி மற்றும் மழை பொழிய ஆரம்பித்தது. சுழற்காற்றும், பயங்கரச் சத்தமும் அனைத்தையும் அதிரச் செய்தன. பூமி நடுங்க ஆரம்பித்தாள். ராமனின் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணை மற்ற ராமனின் {பரசுராமனின்} சக்தியைக் குழப்பி, {தசரத} ராமனின் கரங்களுக்கே திரும்ப வந்து சேர்ந்தது. இப்படி உணர்வை இழந்த பார்க்கவர் {பரசுராமன்}, மீண்டும் சுயநினைவை அடைந்து விஷ்ணு சக்தியின் வடிவமான {தசரத} ராமனைப் பணிந்தார்.
அந்த விஷ்ணுவின் கட்டளையின் பேரில் அவர் மகேந்திர மலைகளுக்குச் சென்றார். அதுமுதல் அந்தப் பெரும் தவசி அச்சத்துடனும் அவமானத்துடனும் அங்கே வசிக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு வருடம் கழிந்ததும் சக்தி இழந்து கர்வபங்கப்பட்டு, துயரத்தில் இருந்த ராமனைக் {பரசுராமனைக்} கண்ட பித்ருக்கள் அவரிடம், "ஓ! மகனே, விஷ்ணுவை அணுகிய நீ நடந்து கொண்ட முறை சரியானதல்ல. மூன்று உலகங்களிலும் அவன் உனது வழிபாட்டுக்குகந்தவன். ஓ! மகனே, போ. வதூசரம் என்ற பெயர் கொண்ட புண்ணிய நதிக்குச் செல். அந்த நதியில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி உனது இழந்த சக்தியை மீட்டெடு. ஓ! ராமா {பரசுராமா}, அந்த நதியில், தெய்வீகக் காலத்தில், உனது பெரும்பாட்டனான பிருகு தவம்பயின்று பெரும் பலனடைந்த தீப்தோத்தம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன" என்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி அவர்களால் சொல்லப்பட்ட ராமன் {பரசுராமன்}, தனது பித்ருகளுக்குப் பிரியாவிடை கொடுத்து அந்தத் தீர்த்தங்களுக்குச் சென்று தனது சக்தியை மீண்டும் அடைந்தார். இது பழங்காலத்தில் களங்கமற்ற ராமனுக்கு {பரசுராமனுக்கு}, (தசரதன் மகனின் {ராமனின்} உருவத்தில் இருந்த) விஷ்ணுவை சந்தித்த பிறகு ஏற்பட்ட நிலையாகும்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.