Bharata performed horse sacrifice! | Vana Parva - Section 129 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ மன்னா! பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம் எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.
பரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ! குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), "யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.
ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் சடங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ! மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்" என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.