Saraswati disappeared and became visible! | Vana Parva - Section 130 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சரஸ்வதி நதி, சமசோபேசம், பிரபாசம், விபாசம், காஷ்மீரம், மானசசரோவரம், வாதிகண்டம், உஜ்ஜனகம், கௌசவம், பிருகுதுங்கம், விதஸ்தம், ஜலா, உபஜலா நதிகள், ஆகிவற்றின் பெருமைகளை லோமசர் யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; உசீநரன் கதையைச் சொல்லத் துவங்குவது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் மகனே! மனிதர்கள் தங்கள் கடைசி மூச்சை இங்கே விடும்போது, அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}! ஆயிரமாயிரம் மனிதர்கள் இந்த இடத்திற்கு இறப்பதற்காக வருகின்றனர். தக்ஷன் இங்கே வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனால் {தக்ஷனால்}, "இந்த இடத்தில் இறக்கும் மனிதர்கள் சொர்க்கத்தில் ஒரு இடத்தை வெல்வார்கள் {பெறுவார்கள்}" என்ற ஒரு அருள்வாக்குச் சொல்லப்பட்டது. நீர் நிறைந்த, அழகான, புனிதமான நதியான சரஸ்வதி இங்கேதான் இருக்கிறது; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இங்கேதான் சரஸ்வதி மறைந்த விநசனம் என்ற இடம் இருக்கிறது. இங்கேதான் நிஷாதர்களின் நாட்டு வாயில் இருக்கிறது. அவர்கள் மீதுள்ள வெறுப்பால்தான் சரஸ்வதி, நிஷாதர்கள் தன்னைக் காணாதவாறு பூமிக்குள் நுழைந்தாள்.
சரஸ்வதி மீண்டும் அவர்களுக்குக் {நிஷாதர்களுக்கு} காட்சி தந்த சமசோபேசம் என்ற புனிதமான இடமும் இங்குதான் இருக்கிறது. இங்கேதான் அவள் {சரஸ்வதி} கடலை நோக்கி ஓடும் புனிதமான நதிகளுடன் இணைகிறாள். ஓ! எதிரிகளை வீழ்த்துபவனே {யுதிஷ்டிரா}, இங்கேதான் பெருமுனிவரான அகஸ்தியரை லோபமுத்திரை தனது தலைவனாக ஏற்றுக் கொண்ட புனிதமான இடமான சிந்து இருக்கிறது. ஓ! சூரியனைப் போன்று பிரகாசிப்பவனே {யுதிஷ்டிரா}, இந்திரனுக்குப் பிடித்தமானதும், அனைத்துப் பாவங்களையும் விலக்கவல்லதுமான பிரபாசம் எனும் புனிதத் தீர்த்தம் இங்கே தான் இருக்கிறது. இதோ இங்குதான் விஷ்ணுபதம் என்ற பகுதி இருக்கிறது.
இங்குதான் காண்பதற்கினிய புண்ணிய நதியான விபாசம் இருக்கிறது. இந்த ஓடையில்தான் {விபாசத்தில்தான்} தனது மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாகப் பெருமுனிவரான வசிஷ்டர் தனது உறுப்புகளைக் கட்டிக் கொண்டு விழுந்தார். அவர் அந்நீரில் இருந்து கட்டுகளற்றவராக எழுந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தவசிகளால் அடிக்கடி தரிசிக்கப்படும் காஷ்மீரம் என்ற பகுதியை இதோ உனது தம்பிகளுடன் பார். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இங்கேதான் அக்னிக்கும் பெருமுனிவரான காசியபருக்கும், நகுஷனுக்கும், வடக்கு திசையின் தவசிகளுக்கு விவாதம் நடந்தது. ஓ! பெரும் இளவரசே {யுதிஷ்டிரா}, இதோ இங்கேதான் மானசசரோவரத்தின் வாசல் இருக்கிறது. இந்த மலையின் மத்தியில்தான், ராமர் {பரசுராமர்} ஒரு இடைவெளியைத் திறந்தார். ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்ட இளவரசே, இங்கேதான் நன்கறியப்பட்ட பகுதியான வாதிகண்டம் இருக்கிறது. இது விதேகத்திற்கு வடக்கில் இருக்கிறது. விதேகத்தின் வாயில் இதற்கு {வாதிகண்டத்திற்கு} அருகிலேயே இருக்கிறது.
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடம் தொடர்பாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க செய்தி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், விரும்பும் உரு கொள்ளும் தெய்வமான சிவன், உமையுடனும் தன்னைத் தொடர்பவர்களுடனும் காணப்படுகிறான். இந்தத் தடாகத்தில்தான், தங்கள் குடும்பத்தின் நன்மையை விரும்பும் மக்கள், பிநாகபாணிக்கு {பிநாகம் என்ற வில்லைத் தாங்கிய சிவனுக்கு} சித்திரை மாதத்தில் வேள்விகள் நடத்துவர். அர்ப்பணிப்புமிக்க மனிதர்கள், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, இந்தத் தடாகத்தில் நீராடி, பாவங்களில் இருந்து விடுபட்டு, சந்தேகமர புனிதமான இடங்களை அடைகின்றனர். புனிதத்தவசியான வசிஷ்டரும் அவரது மனைவி அருந்ததியும், தவசியான யவக்கிரியும் மன அமைதி அடைந்த உஜ்ஜனகம் என்ற புண்ணியத் தீர்த்தம் இங்கேதான் இருக்கிறது. இங்கே இருக்கும் கௌசவம் என்ற தடாகத்தில் கௌசேசயம் {நூறு இதழ் கொண்ட தாமரை} என்ற பெயர்கொண்ட தாமரைகள் வளர்கின்றன. இங்கேதான் ருக்மிணியின் புனிதமான ஆசிரமம் இருக்கிறது. இங்கே தான் அவள் {ருக்மிணி} கோபம் என்ற தீய ஆர்வத்தை {குணத்தை} வென்று அமைதியை அடைந்தாள்.
ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}! பிருகுதுங்கத்தில் இருக்கும் தியானங்களின் மனிதனைப் பற்றி நீ ஏதாவது கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே ஒரு உயர்ந்த சிகரம் இருக்கிறது. ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அங்கேதான் மனிதர்களின் பாவங்களைக் கரைக்கும் புனிதமான ஓடையான விதஸ்தம் இருக்கிறது. அந்த ஓடை மிகுந்த குளுமையுடன் தெளிந்த நீரை உடையது. அது பெரும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓ இளவரசே {யுதிஷ்டிரா}, யமுனையின் இருமருங்கிலும் பாயும் ஜலா மற்றும் உபஜலா என்ற புனிதமான நதிகளைப் பார். இங்கே வேள்வி செய்ததன் மூலம் மன்னன் உசீநரன் {உசீநரனின் மகன் சிபி என்று நினைக்கிறேன்} இந்திரனின் பெருமைகளைக் கடந்தான். ஓ! பாரதக் குல வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, உசீநரனின் தகுதியைச் சோதிப்பதற்காகவும் அவனுக்கு வரங்களை அளிப்பதற்காகவும் இந்திரனும் அக்னியும் சேர்ந்து, அந்த வேள்விக்களதில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்திரன் பருந்தின் உருவத்தையும், அக்னி புறாவின் உருவத்தை எடுத்து அந்த மன்னனிடம் வந்தனர். பருந்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகப் புறா, பாதுகாப்பு கோரி அம்மன்னனின் தொடையில் அமர்ந்தது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.