Usinara gave his flesh for the pigeon! | Vana Parva - Section 131 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் உருவம் கொண்டு மன்னன் உசீநரனிடம் வருதல்; மன்னன் புறாவைப் பாதுகாத்தல்; புறாவுக்கீடாக மன்னனின் தசையைப் பருந்து கேட்டல்; மன்னனுன் உவகையுடன் தனது தசையை அறுத்துத் துலாக்கோலில் வைத்தல்; புறாவின் எடை கூட இருந்ததால் மன்னன் முழுமையாகத் தன்னைக் கொடுத்தல்...
பருந்து{இந்திரன்} {உசீநராவிடம்}, "பூமியின் அனைத்து மன்னர்களும் உன்னைப் பக்தியுள்ள ஆட்சியாளன் என்று சொல்கின்றனர். ஓ! இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய்? நான் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அறத்திற்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு தெய்வத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரையைப் {எனக்குக் கொடுக்காமல்} பறிக்காதே. அப்படிச் செய்தால் நீ அறத்தைக் கைவிட்டவனாவாய்" என்று சொன்னது.
அதற்கு அந்த மன்னன் {உசீநரன்}, "ஓ! இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை? இப்புறா, பயத்தால் நடுங்கி, துயரத்துடன், என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டிருக்கிறது. ஆகையால் இதைக் {புறாவைக்} கைவிடுவது நிச்சயமாகப் பழியையே கொடுக்கும். அந்தணனைக் கொல்பவனும், அனைத்து உலகங்களுக்கும் தாயான பசுவைக் கொல்பவனும், தன்னிடம் பாதுகாப்பு கோரியவனைக் கைவிடுபவனும் சம பங்கு பாவிகளே" என்றான் {உசீநரன்}.
அதற்கு அந்தப் பருந்து {இந்திரன்}, "ஓ! பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்து விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ! பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே! அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ! பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! மன்னா, ஆகையால், அறங்களைத் துலாக்கோலில் ஏற்றி, முதன்மையானதை {நல்லறத்தை} ஏற்றுக் கொள்" என்றது {பருந்து-இந்திரன்}.
இதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "ஓ பறவைகளில் சிறந்தவனே, நீ மிகவும் நன்மை நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதால், நீ பறவைகளின் ஏகாதிபதியான சுபர்ணன் {கருடன்} என்று நினைக்கிறேன். நீ அறத்தின் வழிகளைக் குறித்து முழுதும் அறிந்தவன் என்பதைத் தீர்மானிக்க நான் சிறிதும் தயக்கப்பட வேண்டியதில்லை. நீ அறம் குறித்து ஆச்சரியப்படும் வகையில் பேசுவதால், நீ அறியாத எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உதவி நாடி வந்தவனைக் கைவிடும் ஒருவனை எப்படி அறம்சார்ந்தவன் என்று நீ கருத முடியும்? ஓ! விண்ணதிகாரியே, இக்காரியத்தில் உனது முயற்சி உணவைத் தேடுவதுதானே. உன்னால் வேறு உணவையோ, வேறு அதிகமான உணவையோ உண்டு உனது பசியைப் போக்கிக் கொள்ள முடியுமே. மாடு, பன்றி, மான் அல்லது எருமை என இன்னும் சுவைநிறைந்த வேறு எந்த உணவைக் கேட்டாலும் நான் அதை உனக்காகப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்" என்றான்.
அதற்கு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ! பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன்? ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ! பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ! இளவரசே, வாழைமரத்தின் பலத்தை அறியாமல், ஆதரவுக்காக அதைக் {வாழைமரத்தைக்} கட்டிப்பிடிக்காதே.
அதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "விண்ணதிகாரியே, நான் எனது குலத்துக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை உனக்கு அளிக்க விரும்புகிறேன். அல்லது நீ விரும்பும் எதையும் கொடுக்கச் சித்தமாகி இருக்கிறேன். எனது பாதுகாப்பை நாடி வந்திருக்கும் இந்தப் புறாவை மட்டும் விட்டுவிட்டு, நீ எதைக்கேட்டாலும் நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். இந்தப் பறவையின் {புறாவின்} விடுதலைக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரிவி. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இதை {இப்புறாவை} நான் உனக்கு அளிக்க மாட்டேன்" என்றான்.
அதற்கு அந்தப் பருந்து , "ஓ மனிதர்களின் பெரும் ஆட்சியாளா, உனக்கு இந்தப் புறாவின் மீது அவ்வளவு ஆசை இருந்தால், உனது தசையின் ஒரு பகுதியை அறுத்து, அந்தப் புறாவின் எடைக்கேற்ப துலாக்கோலில் நிறுத்து. புறாவின் எடைக்குத் தக்க துலாக்கோல் நிற்பதாக நீ கருதினால் அதுவே எனக்குத் திருப்தியைக் கொடுத்துவிடும்" என்றது. அதற்கு அந்த மன்னன், "ஓ! பருந்தே, இந்த உனது கோரிக்கையை, எனக்கான உதவியாக நான் கருதுகிறேன். ஆகையால், துலாக்கோலில் நிறுத்திய பிறகு நான் எனது தசையை உனக்குக் கொடுப்பேன்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன பிறகு, உயர்ந்த அறம் சார்ந்த அந்த மன்னன் {உசிநரன்} தனது தசைப்பகுதியை வெட்டியெடுத்து, புறாவின் எடைக்கெதிராகத் துலாக்கோலில் நிறுத்தினான். தனது தசையை விடப் புறவின் எடை அதிகமாக இருப்பதாகக் கண்டான். பிறகு மேலும் தனது தசை அறுத்து, ஏற்கனவே இருப்பதோடு வைத்தான். பகுதிக்குப் பின் பகுதியாக அவன் வைத்தாலும் புறாவே எடை கூடியதாக இருந்தது. அவனது உடலில் வேறு தசையும் இல்லை. ஆகையால் தசைகளற்ற அவன் தானே அந்தத் துலாக்கோலில் ஏறி அமர்ந்து கொண்டான்.
பிறகு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ அறம்சார்ந்த மன்னா, நான் இந்திரன். தெளிந்த வேள்வி நெய்யைச் சுமப்பவனான அக்னியே இந்தப் புறா. உனது தகுதியைச் சோதிப்பதற்காகவே நாங்கள் இந்த வேள்விக்களத்திற்கு வந்தோம். நீ உனது உடலில் இருந்து உனது தசையை அறுத்துக் கொடுத்ததால், உனது புகழ் எப்போதும் நிலைத்திருப்பதோடு மட்டுமின்றி, இந்த உலகத்தில் மற்ற அனைவரின் புகழை விடவும் விஞ்சியே நிற்கும். ஓ மன்னா, மனிதர்கள் உன்னைக் குறித்துப் பேசும் காலம் வரை, உனது புகழும் ஓங்கி உயர்ந்து நிற்கும். நீ உயர்ந்த புனிதமான உலகங்களில் வசிப்பாய்" என்றான். மன்னனிடம் இதைச் சொன்ன இந்திரன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அந்த அறம்சார்ந்த மன்னன் உசீநரன், தனது பக்தி நிறைந்த செயல்களால் சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து, ஒளிரும் உடலுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த உன்னத இதயம் கொண்ட ஏகாதிபதியின் {உசீநரனின்} வசிப்பிடத்தைப் பார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கே புனிதமான தவசிகளும், தேவர்களும் ஒன்றாக அறம்சார்ந்த உயர் ஆன்ம அந்தணர்களுடன் காணப்படுவார்கள்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.