Naraka's slaughter and Varaha avatar! | Vana Parva - Section 141 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
லோமசர் பாண்டவர்களுக்கு நரகாசுரன் கதையையும், பூமி பாதாளத்துக்குள் மூழ்கியதையும், அதை விஷ்ணு பன்றி உரு கொண்டு மீட்ட கதையையும் சொல்வது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாண்டுவின் மகன்களே, பல மலைகளையும், நதிகளையும், நகரங்களையும், கானகங்களையும், அழகிய தீர்த்தங்களையும் நீங்கள் கண்டீர்கள். புனிதமான நீர்நிலைகளையும் உங்கள் கரங்களால் தொட்டிருக்கிறீர்கள். இப்போது இந்த வழி தெய்வீக மலையான மந்தரத்திற்குச் செல்கிறது. ஆகையால் கவனத்துடனும், உள் அடக்கத்துடனும் இருங்கள். தகுதியான செயல்கள் புரிந்த தெய்வீக முனிவர்கள் மற்றும் தேவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இருக்கிறீர்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் தேவர்கள் மற்றும் தவசிகளின் கூட்டத்தால் போற்றப்படும் அழகான பெரும் நதி {நதியான அலகாநந்தை [அலகை]} இலந்தை மரம் இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்கிறது. உயர் ஆன்மா கொண்டவர்களான வைஹாயசர்கள், வாலஹில்யர்கள் மற்றும் வலிமைமிக்க ஆன்மா கொண்ட கந்தர்வர்கள் ஆகியோர் அடிக்கடி அந்த இடத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சாமம் பாடும் தவசிகளான மரீசி, புலகஹர், பிருகு மற்றும் அங்கீரஸ் ஆகியோர் இந்த இடத்தில் தான் சாம வேதத்தை முழங்கினர். இங்கேதான் மருதர்களுடன் கூடிய தேவர்களின் தலைவன் {இந்திரன்} தனது தினசரி வழிபாடுகளைச் செய்கிறான். சத்யஸ்களும், அசுவினிகளும் அவனுக்குச் {இந்திரனுக்குச்} சேவை செய்கின்றனர். சூரியனும், சந்திரனும், கோள்களும், மற்ற ஒளிரும் தேவர்களும் இரவும் பகலும் இந்நதியை நாடுகின்றனர். ஓ! பெரும்நற்பேறு பெற்ற ஏகாதிபதியே, காளையைத் தனது குறியாகக் கொண்ட இந்த உலகத்தைக் காக்கும் மகாதேவன், கங்கையின் தோற்றுவாயில் {கங்கா துவாரத்தில்} இந்நதியின் பெரும் வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கினான். ஓ! குழந்தைகளே, ஆறு பண்புகளைக் கொண்ட இந்தத் தேவியை {கங்கையை} அணுகி, மனச்செறிவுடன் இவளைத் தொழுது கொள்ளுங்கள்"
உயர் ஆன்மா கொண்ட லோமசரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டுவின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் பாய்ந்தோடிய அந்நதியை {கங்கையை} மரியாதையுடன் வழிபட்டான். பாண்டுவின் பக்திமிக்க மகன்கள் அவளை {கங்கையைப்} போற்றி வழிபட்ட பிறகு முனிவர்களுடன் சேர்ந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்கள் தொலைவில் மேரு மலையைப் போன்று பரந்த அளவிலான வெள்ளைப் பொருட்கள், எல்லாப் பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதைக் காண நேரந்தது. பாண்டுவின் மகன்கள் தன்னை இது குறித்துக் கேட்பார்கள் என்று உணர்ந்த தர்க்கமறிந்த லோமசர், "ஓ! பாண்டுவின் மகன்களே, ஓ! மனிதர்களில் சிறந்தவர்களே, உங்களுக்கு முன்பாக, பரந்த அளவில் ஒரு மலையைப் போலவும், அழகிய கைலாசக் குன்று போலவும் நீங்கள் காணும் இவை வலிமைமிக்கத் தைத்தியனான நரகனின் {நரகாசுரனின்} எலும்பு குவியலாகும். இவை இம்மலையை அடைந்ததால் இம்மலையைப் போலவே காணப்படுகிறது. தேவர்களின் நன்மைக்காக நித்திய தெய்வமும், பரமாத்மாவுமான விஷ்ணுவால் அந்தத் தைத்தியன் {நரகாசுரன்} கொல்லப்பட்டான். இந்திரனின் இடத்தை, கடும் தவத்தின் மூலமும் வேத ஞானத்தின் மூலமும் அடைவதற்காக, அந்த வலிமைமிக்க மனம் கொண்டவன் (அந்தப் பேய் {அசுரன் நரகாசுரன்}) பத்தாயிரம் {10,000} வருடங்களுக்குக் கடும் தவமிருந்தான். அவனது துறவினாலும், கரங்களின் பலம் மற்றும் வலிமையாலும் அவன் வெல்லப்பட இயலாத அளவு வளர்ந்து, எப்போதும் (இந்திரனுக்கு) தொல்லை கொடுத்தான்.
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, அவனது {நரகனின்} பலத்தையும், தவத்தையும், ஆன்ம நோன்புகளையும் கண்ட இந்திரன் பயத்தில் மூழ்கினான். {ஆகையால்}, அவன் நித்திய தெய்வமான விஷ்ணுவை மனதால் நினைத்தான். எங்குமிருக்கும் அந்த அருள் நிறைந்த அண்டத் தலைவன் {விஷ்ணு}, அவன் {இந்திரன்} முன்பாகத் தோன்றினான். தவசிகளும் தேவர்களும் விஷ்ணுவைத் தங்கள் வழிபாடுகளால் துதி செய்தனர். அழகிய சுடரால் ஒளியூட்டப்பட்ட ஆறு பண்புகள் கொண்ட அக்னியும் அவனது {விஷ்ணுவின்} முன்னிலையில் தனது பிரகாசத்தை இழந்தான். தனது முன்னிலையில் தெய்வமான விஷ்ணுவைக் கண்ட, வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உடனடியாகத் தனது தலையைத் தாழ்த்தி வணங்கி, தனது பயத்திற்குக் காரணத்தை விஷ்ணுவிடம் உரைத்தான். அதற்கு விஷ்ணு, "ஓ! சக்ரா {இந்திரா}, தைத்தியர்களின் தலைவனான நரகனைக் குறித்து நீ அஞ்சுகிறாய் என்பதை நான் அறிவேன். தனது தவ வெற்றியின் மூலம் அவன் இந்தப் பதவிக்குக் குறி வைக்கிறான். ஆகையால், அவன் தவத்தில் வெற்றிக் கண்டிருந்தாலும், நீ நிம்மதி கொள்ளும்படிக்கு, நிச்சயமாக நான் அவனது உடலில் இருந்து ஆன்மாவைக் கொய்வேன். தேவர்களின் தலைவா {இந்திரா} சற்று நேரம் பொறுப்பாயாக" என்றான். பிறகு வலிமையின் எல்லையான விஷ்ணு தனது கரத்தால் (தாக்கி) அவனது (நரகனின்) புலன்களை இழக்கச் செய்தான். அவன் {நரகாசுரன்} இந்தப் பூமியின் மீது மலைகளின் ஏகாதிபதி (இடியால்) அடிபட்டு விழுவது போல விழுந்தான். இந்த அற்புதத்தால் கொல்லப்பட்ட அவனது எலும்புகள் இந்த இடத்தில் குவிந்திருக்கின்றன. விஷ்ணுவின் மற்றொரு செயலும் இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு முறை இந்த முழு உலகமும் பாதாளப் பகுதிகளுக்குள் {கடலுக்குள்} மூழ்கித் தொலைந்து போனது. பிறகு அவள் {பூமி}, ஒற்றைக் கொம்பு {தந்தம் = tusk} கொண்ட பன்றியின் உருவில் {வராக அவதாரம்} இருந்த அவனால் {விஷ்ணுவால்} மேலே உயர்த்தப்பட்டாள்" என்று சொன்னார் {லோமசர்}.
யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே, தேவர்களுக்குத் தலைவனான விஷ்ணு நூறு யோஜனைகள் ஆழம் மூழ்கிப் போன பூமியை எப்படி உயர்த்தினார் என்பதைக் குறிப்பாக உரைப்பீராக. படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தாங்கும் பெரும் நற்பேறு பெற்ற பூமாதேவி, நிலையாக நின்று அனைத்து வகையான பயிர்களையும் விளையச் செய்பவள் ஆயிற்றே. அப்படிப்பட்ட அவள், யாருடைய சக்தியால் நூறு யோஜனைகளுக்குக் கீழே மூழ்கடிக்கப்பட்டாள்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட பெருஞ்செயல் பரமாத்மாவல் நிகழ்த்தப்பட்டது? ஓ! இரு பிறப்புக் கொண்ட குலத்தின் {அந்தணர்களின்} தலைவரே {லோமசரே}, நடந்தவாறே அவை முழுமையும் அறிய விரும்புகிறேன். நிச்சயமாக அது உம்மால் அறியப்பட்டிருக்கிறது" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, நீ (உரைக்குமாறு) என்னைக் கேட்டுக் கொண்ட கதையை நான் முழு நீளத்தில் சொல்கிறேன் கேள். ஓ! குழந்தாய், பழங்காலத்தில், கிருத யுகத்தில் ஒரு பயங்கரமான காலத்தில், யமனின் கடமைகளை நித்தியமான ஆதி தேவனே மேற்கொண்டான். ஓ! வீழாதவனே, தேவர்களுக்குத் தேவன் யமனின் வேலைகளைச் செய்தபோது, பிறப்புகள் எப்போதும் போல இருந்தாலும் இறப்புகள் நேரவில்லை. பிறகு பறவைகளும் விலங்குகளும், பசுக்களும், ஆடுகளும், மான்களும், அனைத்து ஊனுண்ணும் விலங்குகளும் பல்கிப் பெருகின. ஓ! மனிதர்களில் புலியே, எதிரிகளை வீழ்த்துபவனே, மனிதகுலமும் நீரூற்று போல ஆயிரக்கணக்கில் பெருகியது. ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, உயிரினங்களின் எண்ணிக்கை பயங்கரமாகப் பெருகி, அதிக பாரத்தால் தள்ளாடிய பூமி, நூறு யோஜனைகள் ஆழத்திற்கு மூழ்கியது. அவளது அங்கங்கள் அனைத்தும் வலியால் துன்பப்பட்டு, தீவிர அழுத்தத்தால் புலன்கள் இழந்து துயரத்தில் இருந்த பூமா தேவி, தேவர்களில் முதன்மையான நாராயணனின் பாதுகாப்பை நாடினாள். பூமி, ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே {நாராயணரே}, உமது அருளாலேயே, நான் இவ்வளவு நீண்ட நெடுங்காலத்திற்கு நிலையாக இருந்தேன். ஆனால் இப்போது எனக்குச் சுமை அதிகமாகிவிட்டது. என்னால் இனிமேலும் தாங்க முடியாது. ஓ! புகழத்தக்கவரே, எனது பாரத்தைக் குறைப்பதே உமக்குத் தகும். நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன். ஓ! தலைவா, எனக்கு அருள் செய்யும்" என்று கேட்டாள். அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட, ஆறு பண்புகள் கொண்ட அந்த நித்திய தலைவன் அன்பாதரவும் பரிவும் கொண்ட தெளிவான எழுத்துகளாலான வார்த்தைகளை உரைத்தான். விஷ்ணு, "ஓ! அனைத்து வளங்களையும் தாங்கும் பாதிக்கப்பட்ட பூமியே {பூமாதேவியை}, அஞ்சாதே. உனது பாரம் குறையும்படி நான் செயல்புரிவேன்" என்றான்."
"லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படி மலைகளைக் காது வளையங்களாகக் கொண்ட பூமியை {பூமாதேவியை} அனுப்பிய அவன் {விஷ்ணு}, திடீரென அதிகப் பிரகாசத்துடன் கூடிய ஒற்றைக் கொம்பு கொண்ட பன்றியுரு கொண்டான். தனது சிவந்த விழிகளால் பயங்கரத்தை உண்டாக்கி, சுடரும் தனது மேனியில் இருந்து நெருப்பை வெளியிட்டுக் கொண்டு, அந்தப் பகுதியில் பெரும் உருவம் கொண்டான். ஓ! வீரனே {யுதிஷ்டிரா}, பிறகு வேதங்களில் நிறைந்திருப்பவன் {விஷ்ணு} பிரகாசிக்கும் தனது ஒற்றைத் தந்தத்தால் பூமியைத் தாங்கிக் கொண்டு, அவளை நூறு யோஜனைகள் உயர்த்தினான். அவளை {பூமியை} அப்படி உயர்த்திய போது பெரும் அதிர்வு ஏற்பட்டது, அனைத்து தேவர்களும், துறவு பூண்ட தவசிகளும் கூட அதனால் நடுங்கினர். சொர்க்கமும், வானமும், ஏன் பூமியும் கூட ஓ! ஐயோ! என்ற ஆச்சரியக் குறிகளால் நிரம்பின. தேவர்களோ அல்லது மனிதர்களோ யாரும் அமைதியாக இருக்க இயலவில்லை. எண்ணிலடங்கா தேவர்கள் முனிவர்களுடன் சேர்ந்து, சுய ஒளியில் எரிந்து கொண்டிருந்த பிரம்மனிடம் சென்றனர். பிறகு அனைத்துயிர்களின் செயலுக்கும் சாட்சியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிரம்மனை அணுகி, "ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மாவே}, அசையும் மற்றும் அசையாத உயிர்களும் அடங்கிய படைக்கப்பட்ட அனைத்துயிர்களும் நடுங்கிப் போயுள்ளன. அவர்கள் அமைதியற்றிருக்கின்றனர். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மனே}, கடல்களும் அமைதியாக இல்லை. முழுப் பூமியும் நூறு யோஜனைகள் கீழ் சென்றுள்ளது. இதற்கு யாது காரணம்? யாருடைய ஆதிக்கத்தால் மொத்த அண்ட மும் கொந்தளித்திருக்கிறது? தயைகூர்ந்து இவை அனைத்தையும் எங்களுக்கு விளக்கும். நாங்கள் அனைவரும் குழம்பிப் போயுள்ளோம்" என்று கேட்டான் {இந்திரன்}.
அதற்குப் பிரம்மன் {இந்திரனிடம்}, "இறவாதவர்களே {தேவர்களே}, எக்காரணத்திற்காகவும், இடத்திற்காகவும் அசுரர்களின் மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்கள். சொர்க்கத்தின் இந்த நடுக்கும், எங்கும் நிறைந்த, அழியா ஆன்மாக் கொண்ட நித்தியமான பரமாத்மாவின் ஆதிக்கத்தால் நிகழ்த்தப்பட்டது. அந்தப் பரமாத்மாவான விஷ்ணு நூறு யோஜனைகளுக்கு மூழ்கிப் போன பூமியை உயர்த்தினான். இந்த நடுக்கம், பூமி உயர்வதால் ஏற்படுகிறது. இதை அறிந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை விலக்கிக் கொள்ளுங்கள்" என்றான். தேவர்கள், "பூமியை உயர்த்திய அவர் {விஷ்ணு} எங்கே? ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே, அந்த இடத்தை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அங்கே செல்வோம்" என்றனர். பிரம்மன், "நீங்கள் செல்லுங்கள், உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். நீங்கள் நந்தனத்தில் ஓய்வெடுக்கும் அவனை {விஷ்ணுவைக்} காண்பீர்கள். அங்கே வழிபடத்தக்க சுபர்ணன் {கருடன்} உங்களுக்குத் தெரிவான். பூமி உயர்த்தப்பட்ட பிறகு, யாரால் பூமி வெளிப்பட்டதோ, அந்தப் பரம்பொருள், அனைத்தையும் உட்கொள்ளும் பிரளய கால நெருப்பு போல எரிந்து கொண்டு பன்றியின் உருவில் இருக்கிறான். அவனது {விஷ்ணுவின்} மார்பில் ஸ்ரீவத்சம் என்ற ரத்தினம் காணப்படும், அழிவறியா அப்பரம்பொருளைக் காணுங்கள்" என்றான் {பிரம்மன்}."
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு தேவர்கள், பெருந்தகப்பனைத் {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்டு, எல்லையற்ற அப்பரம்பொருளிடம் வந்தனர். பின் அவனது புகழைக் கேட்ட பிறகு, அவனிடம் பிரியாவிடை பெற்று, எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, இந்தக் கதையைக் கேட்ட அனைத்துப் பாண்டவர்களும், காலந்தாழ்த்தாமல் விரைவாக லோமசர் காட்டிய வழியில் முன்னேறினர்".