Gust and torrential rain! | Vana Parva - Section 142 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள் நடுவழியில் வன்காற்றிலும், பெருமழையிலும் சிக்கிக் கொண்டு தனித்தனியாகப் பதுங்கியிருந்ததும், காற்றும் மழையும் ஓயந்த பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியதும்....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, அளவிடமுடியாத சக்தி கொண்ட, வில்லாளிகளில் முதன்மையானவர்களான அவர்கள் {பாண்டவர்கள்}, முழுவதும் நீட்டி இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட விற்களைத் தாங்கிக் கொண்டும், அம்பறாத்தூணிகள் மற்றும் கணைகளைத் தாங்கிக் கொண்டும், உடும்புத்தோலாலான விரலுறைகளைத் தரித்துக் கொண்டும், வாட்களோடும், அந்தணர்களில் சிறந்தவர்களை உடனழைத்துக் கொண்டு, பாஞ்சாலியுடன் {திரௌபதியுடன்} கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் தங்கள் வழியில், தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போகும், பல தடாகங்களையும், நதிகளையும், மலைகளையும், கானகங்களையும், மலையுச்சிகளில் அகன்று விரிந்த தங்கள் நிழல்களைப் பரப்பும் மரங்களையும், அனைத்துக் காலங்களின் கனிகளுடன் பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த இடங்களையும் கண்டனர். தங்கள் மனங்களை உள்ளடக்கி, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்ட அந்த வீரர்கள், பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டு கொண்டே கொடும்பாறைகள் நிறைந்த கடினமான, முரட்டுத்தனமான பாதைகளைக் கடந்து சென்றனர். இப்படியே அந்த உயர் ஆன்மா உடையவர்கள், கின்னரர்கள் மற்றும் அப்சரசுகள் அடிக்கடி வந்து போகும் இடமும் முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வசிக்கும் இடமுமான அந்த மலையின் {கந்தமாதனம்} சமீபத்தை அடைந்தனர்.
ஓ! மனிதர்களின் தலைவா, அந்த வலிமைமிக்க வீரர்கள் அந்தக் கந்தமாதன மலையை அடைந்த போது, அங்கே ஆவேசமான காற்று எழுந்து கனமான மழை பொழிந்தது. இதன் காரணமாக உலர்ந்த இலைகளுடன் கூடிய தூசிப்படலம் மேகமாகத் திடீரென எழுந்து பூமியையும், காற்றையும் வானத்தையும் மூடியது. ஆகாயம் இப்படிப் புழுதியால் மூடிய போது, (பாண்டவர்கள்) யாரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ இயலவில்லை. இருளால் அடைபட்ட கண்களுடனும், பாறைகளைத் தூக்கிய காற்றால் தள்ளப்பட்டும், இருந்த அவர்களால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பிறகு காற்றினால் முறிக்கப்பட்டுத் தரையில் விழும் மரங்களால் பெரும் சத்தம் உண்டாயிற்று. வன்காற்றால் திசைதிருப்பப்பட்ட அவர்கள், "வானமே இடிந்து விழுகிறதோ; அல்லது பூமியோ மலைகளோ வெடிக்கின்றனவோ" என்று நினைத்தார்கள்.
அந்த வன்காற்றுக்குப் பயந்த அவர்கள் வழியோரத்தில் இருக்கும் மரங்களையும், எறும்புப் புற்றுகளையும், நிலக்குடைவுகளையும் {மேடு பள்ளங்களையும்} கைகளால் தேடி உணர்ந்து ஆங்காங்கு பதுங்கினார்கள். வலிமைமிக்கப் பீமசேனன் கைகளில் வில்லுடன் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தாங்கிப் பிடித்தபடி ஒரு மரத்தினடியில் நின்றான். நீதிமானான யுதிஷ்டிரன் தௌமியருடன் சேர்ந்து பெருங்காட்டில் பதுங்கினான். புனித நெருப்பைச் சுமந்த சகாதேவன் பாறைக்கிடையில் பதுங்கினான். நகுலனுடன் சேர்ந்து லோமசர் மற்றும் பெரும் தவம் பயின்ற பிற அந்தணர்கள் பயத்தில் ஆளுக்கொரு மரத்திற்கடியில் நின்றனர். காற்றுத் தணிந்து, புழுதி அடங்கியதும் அங்கே அடர்த்தியான நீர் {பெரிய நீர்த்திவலை} கொண்ட பெருமழை பொழிந்தது. தொடர்ந்து வஜ்ரம் வீசப்பட்டது போன்ற ஒரு பேரோலி சடசடவெனக் கேட்டது. விரைவாக மின்னிய மின்னல் அருள் நிறைந்த மேகங்களுடன் தனது விளையாட்டை ஆரம்பித்தது. வேகமான காற்றின் துணையுடன் மழை இடைவெளியில்லாமல் எல்லாப்புறங்களையும் நிரப்பியபடி பொழிந்தது.
ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அங்கே சுற்றிலும் சேறுடன் கலங்கலாக நுரை பொங்கும் பெரும் ஆறுகள் ஓடத் தொடங்கின. அவை {அந்நதிகள்} மிகப்பெரும் நீர்த்தொகுதிகளாகப் பரந்து விரிந்து நுரை தள்ளியபடி பயங்கர ஒலியுடன் மரங்களை வேருடன் அகற்றி விரைந்து சென்றன. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா} அந்தப் பேரொலி நின்று, காற்றும் தணிந்த பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் பதுங்கிடங்களில் இருந்து எச்சரிக்கையுடன் வெளிவந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்டனர்.