Nivata Kavachas! | Vana Parva - Section 168 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
மாதலி செலுத்திய இந்திரனின் தேரில் சென்ற அர்ஜுனன் நிவாதகவசர்களின் நகரத்தை அடைந்தது; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தில் பயந்திருந்த நிவாதகவசர்களோடு அவன் போர் புரியத் தொடங்கியது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "சில இடங்களில் நடைபெற்ற பெருமுனிவர்களின் துதிகளுக்குப் பிறகு நான், (ஒரே நீளமாகத் தொடர்ந்து சென்று) வற்றாத நீர்த் தலைவனான கடலைக் கண்டேன். பாயும் பாறைகள் இடம் பெயர்வது போலவும், ஒன்றாகச் சந்தித்து உருண்டு செல்வது போலவும் அலைகள் எழும்பின. அங்கே ரத்தினங்கள் நிறைந்த மரப்பட்டைகள் சுற்றிலும் (காணப்பட்டது) இருந்தன. அங்கே திமிங்கலங்களும், ஆமைகளும், மகரங்களும் நீரில் பாதி மூழ்கியிருக்கும் பாறைகளைப் போலத் தெரிந்தன. சுற்றிலும் நீரில் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான உருளையான சங்குகள் இரவு நேர வானில் தெரியும் ஒளிபொருந்திய மேகங்களைப் போலத் தெரிந்தன. ஆயிரங்களுக்கு மேல் ஆயிரங்களாகக் குவியல் குவியலாக ரத்தினங்கள் மிதந்தன. சுழற்சியுடன் கூடிய வன்மையான காற்று வீசிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.
சக்திமிக்க அலைகள் கொண்ட அனைத்து நீர்நிலைகளின் தலைவனைக் {கடலைக்} கண்ட பிறகு, அங்கிருந்து குறைந்த தூரத்திலேயே தானவர்கள் நிறைந்த அந்தப் பேய் நகரத்தைக் கண்டேன். பூமிக்கு அடியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த தானவர்கள் இருந்த அங்கேயும் கூட, தேரைச் செலுத்துவதில் திறன்மிக்க மாதலி {இந்திரனின் தேரோட்டி}, அத்தேரில் உறுதியாக அமர்ந்து சக்தியுடன் அதைச் செலுத்தினான். சில இடங்களில் மோதி, அந்நகரத்தைத் தனது தேரின் சடசடப்பொலியில் நடுங்க வைத்தான் {மாதலி}. வானத்தில் ஏற்படும் மேக கர்ஜனை போன்று இருந்த அத்தேரின் சடசடப்பொலியைக் கேட்ட தானவர்கள் என்னைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்று எண்ணி அச்சமுற்றனர். பிறகு இதயத்தால் பயந்திருந்த அவர்கள் {தானவர்கள்} அனைவரும், தங்கள் கரங்களில் விற்களையும், கணைகளையும், வாள்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும், கதாயுதங்களையும், தண்டங்களையும் தாங்கியபடி நின்றனர்.
பிறகு தங்கள் நகரத்தைக் காக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அச்சம் நிறைந்த மனம் கொண்ட தானவர்கள், அங்கிருக்கும் எதையும் கண்டுபிடிக்காதவாறு {நகரத்தின்} வாயில்களை அடைத்தனர். அதன்பிறகு பயங்கர ஒலி கொண்ட தேவதத்தம் என்ற எனது சங்கை எடுத்து, மிகுந்த உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் எனது காற்றைச் செலுத்தினேன் {ஊதினேன்}. அந்த முழுச் சூழலையே நிறைத்த அவ்வொலி எதிரொலிகளை எழுப்பியது. இதனால் பெரும் உயிரினங்கள் பயந்து (தங்களை) ஒளித்துக் கொண்டன. பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, திதியின் வாரிசுகளான அந்த நிவாட கவசர்கள் ஆபரணங்கள் பூண்டபடி ஆயிரக்கணக்கில் தங்கள் தோற்றத்தைக் காட்டினர். வித்தியாசமான கவசங்களைப் பூண்டு, தங்கள் கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும், இரும்பு ஈட்டிகளும், கதாயுதங்களும், தண்டங்களும், சூலங்களும், பட்டாக்கத்திகளும், சக்கரங்களும், சதாக்னிகளும், பூசுண்டிகளும், பலதரப்பட்ட வாட்களையும் எடுத்துக் கொண்டனர்.
ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ரதம் செலுத்த வேண்டிய முறை குறித்து நிச்சயித்துக் கொண்ட மாதலி, தரை அளவில் தனது குதிரைகளைச் செலுத்தினான். விரைவாகச் செல்லும் அந்தக் குதிரைகளை அவன் செலுத்திய வேகத்தால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தானவர்கள் வித்தியாசமான தங்கள் இசைக்கருவிகள் மூலம் ஒலியெழுப்பினர். அவ்வொலியால் மதியிழந்த அச்சமுற்ற மீன்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் திடீரென விரைந்து ஓடின. ஒரு பெரும் படை எனக்கு எதிராகக் கிளம்பியது. அந்தப் பேய்கள் எனக்கெதிராக நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கூரிய கணைகளை அடித்தனர்.
பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நிவாதகவசர்களை அழிக்கும்படியாக அந்தப் பேய்களுக்கும் எனக்குமான பயங்கரப் போர் மூண்டது. அந்தப் பெரும்போருக்கு தேவ முனிவர்களும், தானவ முனிவர்களும், பிரம்ம முனிவர்களும், சித்தர்களும் வந்திருந்தனர். வெற்றியை விரும்பிய அம்முனிவர்கள், தாரைக்கான (நடைபெற்ற) போரில் இந்திரனுக்குச் செய்தது போல (துதி) என்னைத் துதித்து இனிய வார்த்தைகள் கூறினர்.