The assurance given by Sakuni! | Vana Parva - Section 237 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கர்ணன், துவைதவனம் செல்வதற்கு துரியோனனுக்கு அனுமதியளிக்குமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டியது; திருதராஷ்டிரன் முதலில் மறுத்து, பின்பு ஏற்றது; துரியோதனன் துவைதவனத்தை அடைந்தது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனைக் காணச் சென்றனர். ஓ! ஜனமேஜயா, அவனைக் கண்டு, அவனது நலம் விசாரித்து, பதிலுக்கு அவனால் {திருதராஷ்டிரனால்} அவர்களின் நலம் விசாரிக்கப்பட்டனர். பிறகு, ஏற்கனவே அவர்களால் ஏவப்பட்ட சமங்கன் {சங்கவன்} என்ற பெயர் படைத்த ஒரு மாட்டு இடையன் மன்னனை அணுகி கால்நடைகளைக் குறித்துப் பேசினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பின்பு ராதையின் மகனும் {கர்ணனும்}, சகுனியும் சேர்ந்து திருதராஷ்டிரனிடம், "ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, நமது கால்நடை நிலையங்கள் இப்போது இனிமையான இடத்தில் இருக்கின்றன. அவற்றை எண்ணுவதற்கும், குட்டிகளைக் குறித்துக் கொள்வதற்கும் நேரம் வந்துவிட்டது {கணக்கெடுப்பு எடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதுவே உமது மகன் வேட்டைக்குச் செல்வதற்கு அற்புதமான காலமாகும். எனவே, துரியோதனன் அங்குச் செல்வதற்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றனர்.
வலிமையான கரங்கள் கொண்ட அர்ஜுனனும் கானகம் திரும்பிவிட்டான். ஆயுதங்கள் பெற்றிருக்காத போதே பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} முழு உலகையும் வென்றிருக்கிறான். இப்போது ஆயுதங்களைப் பெற்றிருக்கிற பலமிக்க வீரனான அவனால் {அர்ஜுனனால்}, உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதா? அல்லது எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் கவனமாக அங்குச் சென்றாலும், தொடர்ந்து உண்மையற்றவர்களாக இருந்த காரணத்தால் மனக்கலக்கம் அடையும் உங்களால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அல்லது உங்களுடைய ஏதாவது ஒரு படைவீரன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கு செய்தால், அது முன்பே திட்டமிடப்படாத செயலாக இருந்தாலும், அக்குற்றம் உங்களையே சாரும். எனவே, கணக்கெடுக்கும் வேலைக்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது மனிதன் செல்லட்டும். பாரதா {இங்கு துரியோதனா என்ற பொருள் வரும் என நினைக்கிறேன். ஆனால் திருதராஷ்டிரன் கர்ணனிடம்தான் பேச ஆரம்பிக்கிறான்}, நீயே அங்குச் செல்வதை நான் முறையாக எண்ணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
சகுனி, "பாண்டு மகன்களின் மூத்தவன் {யுதிஷ்டிரன்} அறநெறிகளை அறிந்தவன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சபைக்கு மத்தியில், பனிரெண்டு வருடங்கள் தான் கானகவாசம் செய்வதாக அவனே சூளுரைத்திருக்கிறான். பாண்டுவின் மற்ற மகன்கள் அனைவரும் அறம் சார்ந்தவர்களும், யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்தவர்களும் ஆவர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நம்மிடம் எப்போதும் கோபம் கொள்ள மாட்டான். உண்மையில், வேட்டைப் பயணம் செல்லவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அப்படிச் செல்லும் போது, நமது கால்நடைகளைக் கணக்கிடுவதை மேற்பார்வையிடும் வாய்ப்பையும் பெறுவோம். பாண்டுவின் மகன்களைக் காண எங்களுக்கு எண்ணமில்லை. பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். அதே போல எங்கள் தரப்பில் இருந்து எந்தத் தவறான நடவடிக்கையும் எழாது" என்றான் {சகுனி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் தலைவனான திருதராஷ்டிரன், தனக்கு அதில் அதிக விருப்பம் இல்லாவிட்டாலும், துரியோதனனும் அவனது ஆலோசகர்களும் {அமைச்சர்களும், கர்ணனும், சகுனியும்} அங்குச் செல்ல அனுமதி கொடுத்தான். அந்த ஏகாதிபதியால் {திருதராஷ்டிரனால்} அனுமதி அளிக்கப்பட்ட காந்தாரிக்குப் பிறந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, கர்ணனின் துணையுடன், பெரும் படை சூழ சென்றான். அவனுடன் {துரியோதனனுடன்}, துச்சாசனன், பெரும் புத்திக்கூர்மை கொண்ட சுபலனின் மகன் {சகுனி}, அவனது பல தம்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மங்கையரும் சென்றனர். துவைதவனம் என்ற பெயரால் அறியப்பட்ட அத்தடாகத்தைக் காண தனது மனைவியருடன் அந்த வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட இளவரசன் புறப்பட்ட போது, (ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்களும் தங்கள் தங்கள் மனைவியருடன் அவனைத் தொடர்ந்தனர். எட்டாயிரம் {8000} தேர்கள், முப்பதாயிரம் {30000} யானைகள், ஒன்பதாயிரம் {9000} குதிரைகள், பல்லாயிரம் தரைப்படை வீரர்கள், கடைகள், கூடாரங்கள், வணிகர்கள், பாடகர்கள், வேட்டையில் நன்கு பயின்ற நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அம்மன்னன் {துரியோதனன்} புறப்பட்ட போது, அவனைத் தொடர்ந்து சென்ற பெரிய மக்கள் கூட்டம், மழைக்காலக் காற்றின் ஆழ்ந்த இரைச்சலைப் போலப் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தனது தொண்டர்களுடனும், வாகனங்களுடனும் துவைதவனத்தை அடைந்த மன்னன் துரியோதனன், {அத்தடாகத்திலிருந்து} நான்கு மைல்கள் {கவ்யூதி அல்லது இரண்டு க்ரோசம்} தொலைவில் தங்கினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.