Gandharvas forbode the soldiers! | Vana Parva - Section 238 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
இனிமையான காடுகளைக் கடந்து கடைசியாகத் துரியோதனன் தடாகத்தை அடைவது; தடாகத்தின் அருகில் கேளிக்கை விடுதிகளைக் கட்ட துனது பணியாட்களிடம் துரியோதனன் சொன்னது; அவ்வீரர்கள் கந்தர்வர்களால் தடுக்கப்பட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு மன்னன் துரியோதனன் காடுவிட்டு காடு நகர்ந்து, கடைசியாகக் கால்நடை நிலையங்களை அடைந்து, தனது துருப்புகளை நிறுத்தினான். அவனின் {துரியோதனனின்} பணியாட்கள், நீரும் மரங்களும் அபரிமிதமாக இருக்கும் இனிமையான நன்கு அறியப்பட்ட இடத்தில் அவனுக்காக {துரியோதனனுக்காக} அனைத்து வசதிகளுடன் கொண்ட ஒரு வசிப்பிடத்தைக் கட்டினர். அந்த அரச வசிப்பிடத்திற்கு அருகிலேயே கர்ணனுக்கும், சகுனிக்கும், மன்னனின் {துரியோதனனின்} தம்பிகளுக்கும் தனித்தனியே வசிப்பிடங்களை எழுப்பினர். நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கால்நடைகளை மன்னன் {துரியோதனன்} கண்டு, அதன் உறுப்புகளையும், குறிகளையும் ஆய்வு செய்து கணக்கெடுத்தான்.
கன்றுகளுக்கு அடையாளம் இடச் செய்து, பிறகு பழக்கப்படுத்தப்பட வேண்டிய கன்றுகள் குறித்து {இடையர்களை} குறிப்புகள் எடுக்க வைத்தான். மேலும் அவன் {துரியோதனன்}, எந்தப் பசுக்களின் கன்றுகள் இன்னும் பால் மறக்க வில்லை என்பதையும் கணக்கிட வைத்தான். மூன்று வயது முடிந்த ஒவ்வொரு கன்றையும் அடையாளம் இட்டு எண்ணி கணக்கிடும் வேலைகளை முடித்த அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்}, மாட்டு இடையர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியாக விளையாடி உலவ ஆரம்பித்தான். {அவனுடன் சென்றிருந்த} ஆயிரக்கணக்கான குடிமக்களும், படைவீரர்களும் அக்காட்டில் தங்களுக்குப் பிடித்தவாறெல்லாம் தேவர்களைப் போல விளையாடிக் கொண்டிருந்தனர். பாடுவது, ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இடையர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னியர்களும் {virgins}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இன்பங்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். அரசகுல மங்கையரால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, தன்னை மகிழ்விக்க இருப்பவர்கள் மத்தியில் செல்வம், உணவு மற்றும் பல்வேறு பானங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சிகரமாகப் பிரித்துக் கொடுத்தான்.
கன்றுகளுக்கு அடையாளம் இடச் செய்து, பிறகு பழக்கப்படுத்தப்பட வேண்டிய கன்றுகள் குறித்து {இடையர்களை} குறிப்புகள் எடுக்க வைத்தான். மேலும் அவன் {துரியோதனன்}, எந்தப் பசுக்களின் கன்றுகள் இன்னும் பால் மறக்க வில்லை என்பதையும் கணக்கிட வைத்தான். மூன்று வயது முடிந்த ஒவ்வொரு கன்றையும் அடையாளம் இட்டு எண்ணி கணக்கிடும் வேலைகளை முடித்த அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்}, மாட்டு இடையர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியாக விளையாடி உலவ ஆரம்பித்தான். {அவனுடன் சென்றிருந்த} ஆயிரக்கணக்கான குடிமக்களும், படைவீரர்களும் அக்காட்டில் தங்களுக்குப் பிடித்தவாறெல்லாம் தேவர்களைப் போல விளையாடிக் கொண்டிருந்தனர். பாடுவது, ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இடையர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னியர்களும் {virgins}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இன்பங்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். அரசகுல மங்கையரால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, தன்னை மகிழ்விக்க இருப்பவர்கள் மத்தியில் செல்வம், உணவு மற்றும் பல்வேறு பானங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சிகரமாகப் பிரித்துக் கொடுத்தான்.
தனது தொண்டர்களால் கவனிக்கப்பட்ட அம்மன்னன் {துரியோதனன்}, சுற்றிலும் இருந்த கழுதைப் புலிகளையும், எருமைகளையும், மான்களையும், காயல்களையும் {கவ்ய விலங்குகளையும்}, கரடிகளையும், பன்றிகளையும் கொல்ல ஆரம்பித்தான். அந்த ஆழ்ந்த கானகத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளைத் தனது கணைகளால் துளைத்த அம்மன்னன் {துரியோதனன்}, அக்கானகத்தின் மிக இனிமையான பகுதிகளில் இருந்து மான்களைப் பிடிக்கச் செய்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பால் குடித்து, இன்னும் பிற மதுரமான பொருட்களையும் உண்டு, பல இனிமையான காடுகளையும், மலரில் இருந்து கிடைத்த தேனால் மயக்கம் கொண்டு அலையும் வண்டுகளும், மயில்களின் ஓசையும் நிறைந்த தோப்புகளையும் கண்டு, கடைசியில் அம்மன்னன் துவைதவனத்தின் புனிதமான தடாகத்திற்கு வந்து சேர்ந்தான்.
அந்த மன்னன் அடைந்த பகுதி, மலரின் தேனால் மயக்கமுற்றிருந்த வண்டுகளாலும், நீல நிறத் தொண்டைகளில் இருந்து மதுரமான குரலை எழுப்பும் மயில்களும் நிறைந்து, ஏழிலைம்பாலைகள் {Saptacchadas}, புன்னை {Punnaga}, மகிழ {Vakula} மரங்களின் நிழலாலும் நிறைந்திருந்தது. உயர்ந்த செழிப்பையுடைய அம்மன்னன் {துரியோதனன்}, வஜ்ரத்தைத் தாங்கிச் செல்லும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல அங்கே சென்றான். ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, உயர்ந்த புத்தி கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது அந்தத் தடாகத்தின் அருகில், தனது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து, {ஒரு} பகலில் செய்யப்படும் ராஜரிஷி என்ற வேள்வியை, அந்த வனத்தில வாழும் மனிதர்கள் மற்றும் தேவர்களின் ஒப்புதலோடு செய்து கொண்டிருந்தான்.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இடத்தை அடைந்த துரியோதனன், தனது ஆயிரக்கணக்கான மனிதர்களிடம், "விரைவாக இங்கே கேளிக்கை {இன்ப} வீடுகள் {உத்தியானவனங்கள்} கட்டப்படட்டும்" என்று கட்டளையிட்டான். மன்னனின் உத்தரவின் பேரில் குற்றேவல் செய்பவர்கள் அந்தக் குருகுலத் தலைவனிடம் "அப்படியே ஆகட்டும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி, இன்பவீடுகளைக் கட்ட அந்தத் தடாகத்தின் கரையை நோக்கிச் சென்றனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் அந்தத் தடாகத்தின் பகுதியை அடைந்து, அந்த வனத்தின் வாயிலுக்குள் நுழைய முயன்ற போது, அங்கே எண்ணிலடங்கா கந்தர்வர்கள் தோன்றி அவர்களை நுழைய விடாமல் தடுத்தனர். ஏனெனில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது தொண்டர்களுடன் கூடிய கந்தர்வர்களின் மன்னன் {சித்திரசேனன்}, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து முன்பே அங்கு வந்திருந்தான். அந்தக் கந்தர்வர்களின் மன்னன் பல்வேறு அப்சரசு இனங்களின் துணையோடும், தேவர்களின் மகன்களோடும் வந்திருந்தான். விளையாட்டுக்கும், கேளிக்கைக்குமாக அங்கு வந்திருந்த அவர்களால், அந்த வனம் அனைத்து மூலைகளிலும் நன்றாக அடைக்கப்பட்டிருந்தது.
கந்தர்வர்களின் மன்னனால் அத்தடாகம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட, (குரு) மன்னனின் {துரியோதனனின்} பணியாட்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், போரில் வெல்வதற்குக் கடினமான எண்ணற்ற தனது போர் வீரர்களை அழைத்து, அந்தக் கந்தர்வர்களை விரட்டுமாறு உத்தரவிட்டான். குரு படையின் முன்னணி வீரர்களான அவர்கள் மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, துவைதவனத்தின் தடாகத்திற்குச் சென்று, அந்தக் கந்தர்வர்களிடம், "திருதராஷ்டிரன் மகனும் பலமிக்க மன்னனுமான துரியோதனன், இந்த இடத்தில் விளையாடுவதற்காக வருகிறார். எனவே, நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்!" என்றனர்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கந்தர்வர்கள் சிரித்தபடி, அந்த மனிதர்களிடம் கடும் வார்த்தைகளால், "உங்கள் தீய மன்னனான துரியோதனன் அறிவற்றவனாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படியில்லாமல் இருந்தால், சொர்க்க வாசிகளான எங்களைத் தனது வேலைக்காரர்களைப் போல எப்படி அவனால் {துரியோதனனால்} இப்படிக் கட்டளையிட முடியும்? முன்யோசனை இல்லாத நீங்களும் சந்தேகமற மரணத்தின் அருகில் இருக்கிறீர்கள். நீங்களும் அறிவற்ற முட்டாள்களாக இருப்பதால்தான் இந்தச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வரத் துணிந்திருக்கிறீர்கள்! குருக்களின் மன்னன் இருக்கும் இடத்திற்கு விரைவில் திரும்பிச் செல்லுங்கள். இல்லையெனில், இன்றே யமனின் வசிப்பிடம் செல்லுங்கள்" என்றனர். கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னனின் படையில் இருக்கும் மேம்பட்ட பாதுகாவலன் {படைத்தலைவன்}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குத் திரும்ப ஓடினான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.