Karna saving himself! | Vana Parva - Section 239 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், "அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.
குரு {கௌரவப்} படை வீரர்கள் காட்டுக்குள் நுழைந்ததும், பிற கந்தர்வர்கள் அவர்களிடம் வந்து, அவர்கள் முன்னேறுவதை மென்மையான முறையில் தடுத்தனர். ஆனால் அவர்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத குரு படை வீரர்கள், அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர். விண்ணை அதிகாரம் செய்யும் அவர்கள் {கந்தர்வர்கள்}, திருதராஷ்டிரன் படையினரையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வார்த்தைகளால் தடுக்க முடியாது என்பதைக் கண்டு, தங்கள் மன்னனான சித்திரசேனனிடம் சென்று அனைத்தையும் சொன்னார்கள். கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனன் இதை அறியவந்தபோது, கோபத்தால் நிறைந்து, குருக்களைச் சுட்டிக்காட்டியபடி தனது தொண்டர்களிடம், "தீய நடத்தை கொண்ட இந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்" என்று கட்டளையிட்டான்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சித்திரசேனனால் உத்தரவிடப்பட்ட கந்தர்வர்கள், கைகளில் ஆயுதங்களுடன், திருதராஷ்டிரன் படையினரை நோக்கி விரைந்தனர். உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் தங்களை நோக்கி கந்தர்வர்கள் விரைவாக வருவதைக் கண்ட குரு வீரர்கள், துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென எல்லாத் திசைகளிலும் ஓடினார்கள். எதிரிக்கு முதுகைக் காட்டியபடி ஓடும் குருவீரர்களைக் கண்டும், ராதேயன் {கர்ணன்} மட்டும் ஓடவில்லை. பெரும் பலம்வாய்ந்த கந்தர்வப்படை தன்னை நோக்கி விரைவதைக் கண்ட ராதேயன் {கர்ணன்} தனது குறிதவறாத அம்புகளின் மழையால் அவர்களைத் தடுத்தான்.
அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தனது கைகளின் லாவகத்தால், க்ஷுரபரங்கள், அம்புகள், பல்லங்கள் {பாதி நிலா போன்ற வடிவம் கொண்ட அம்புகள்}, உருக்கு மற்றும் எலும்புகளாலான பல்வேறு வகையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கந்தர்வர்களை அடித்தான். அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா கந்தர்வர்களின் தலைகளை உருளச் செய்து, சித்திரசேனன் படையினரை வேதனையில் கதறவைத்தான். பெரும் புத்தி கூர்மை கொண்ட கர்ணனால் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும், அந்தக் கந்தர்வர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மீண்டும் {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பினார்கள். சித்திரசேனனின் போர்வீரர்கள் களத்திற்கு விரைந்து வந்ததன் விளைவாக, பூமியானது அந்தக் கந்தர்வப் படையால் விரைவில் மறைக்கப்பட்டது.
பிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.
பிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.
கந்தர்வப்படை பயத்தில் கதறுவதைக் கண்டு கோபம் கொண்ட சித்திரசேனன், குரு படையை அழிப்பதெனத் தீர்மானித்து தனது இருக்கையில் இருந்து எழுந்தான். பல்வேறு வகையான போர்க்கலைகளை அறிந்த அவன் {சித்திரசேனன்} மாய ஆயுதங்களின் துணை கொண்டு போர் நடத்தினான். சித்திரசேனன் ஏற்படுத்திய மாயையால், கௌரவ வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாழ விரும்பிய அனைவரும் களத்தைவிட்டு ஓடினர். திருதராஷ்டிரன் படை முழுவதும் கலைந்து ஓடிய போது, சூரியனின் வாரிசான கர்ணன் மட்டுமே அங்கு அசையாத மலையென நின்று கொண்டிருந்தான். உண்மையில், துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகிய அனைவரும் அந்த மோதலின் காரணமாகக் காயமுற்று சிதைந்து போயிருந்தாலும், கந்தர்வர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்று சேர்ந்து, கர்ணனை நோக்கி விரைந்தனர். அந்தப் பெரும் பலமிக்கப் போர்வீரர்கள் {கந்தர்வர்கள்}, சூதனின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, வாள்கள், போர்க்கோடரிகள் மற்றும் ஈட்டிகளுடன் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவனின் {கர்ணனின்} தேர் நுகத்தடியையும், சிலர் அவனது கொடிக்கம்பத்தையும், சிலர் அவனது தேரின் ஏர்க் காலையும், சிலர் அவனது குதிரைகளையும், சிலர் அவனது தேரோட்டியையும் வெட்டி வீழ்த்தினர். மேலும் சிலர் அவனது {தேரில் இருந்த} குடையையும், சில அந்தத் தேரின் மரக் காப்பான்களையும் {தேரில் சுற்றிலும் இருக்கும் மரங்களையும்}, சிலர் அந்தத் தேரின் இணைப்புகளையும் வெட்டி வீழ்த்தினர். இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதை {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.