The sarcasm speech of Bhima! | Vana Parva - Section 240 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கர்ணன் முறியடிக்கப்பட்ட பிறகு, கௌரவப் படைச் சிதறுவது; துரியோதனன் மட்டும் தனித்துப் போரிடுவது; கந்தர்வர்களால் வீழ்ப்பட்ட துரியோதனன் சிறைபடுவது; தப்பிய கௌரவப் படையினர் பாண்டவர்களிடம் வந்து முறையிடுவது; பீமனின் கிண்டல் பேச்சு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பெரும் போர்வீரனான கர்ணன் கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட பிறகு, மொத்த குரு படையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} கண் எதிரிலேயே களத்தைவிட்டு ஓடியது. தனது துருப்புகள் அனைத்தும், எதிரிக்குத் தங்கள் முதுகைக் காட்டியபடி ஓடிய பிறகும், மன்னன் துரியோதனன் ஓட மறுத்தான். தன்னை நோக்கி வரும் பெரும் கந்தர்வப்படையைக் கண்டதும், அந்த எதிரிகளை ஒடுக்கபவன் {துரியோதனன்}, அவர்கள் மீது, அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். எனினும், அந்தக் கணை மழையைப் பொருட்படுத்தாத கந்தர்வர்கள், அவனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அவனது தேரைச் சூழ்ந்து கொண்டனர். தங்கள் கணைகளின் மூலம், அவனது தேரின் நுகத்தையும், ஏர் காலையும், காப்பான்களையும், கொடிக்கம்பத்தையும், மூன்று அடுக்கு மூங்கில் கம்பத்தையும் {திரிவேணுவையும்}, அவனது தேரின் முக்கியக் கோபுரத்தையும் தூள் தூளாக வெட்டி வீழ்த்தினர். பிறகு அவர்கள் {கந்தர்வர்கள்} அவனின் {துரியோதனனின்} தேரோட்டியையும், குதிரைகளையும் வெட்டிக் கொன்றார்கள்.
துரியோதனன் தேரை இழந்து பூமியில் விழுந்த போது, வலுத்த கரம் கொண்ட சித்திரசேனன், அவனை நோக்கி விரைந்து வந்து, அவனது உயிரையே பறிப்போது போல அவனைப் பற்றினான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} பிடிபட்ட பிறகு, தனது தேரில் அமர்ந்திருந்த துச்சாசனனைச் சூழ்ந்து கொண்ட கந்தர்வர்கள், அவனைத் தங்கள் கைதியாக்கினர். சில கந்தர்வர்கள் விவிம்சதி மற்றும் சித்திரசேனனையும் சிலர் விந்தன் மற்றும் அனுவிந்தனையும், மேலும் சிலர் அரசகுடும்பத்தின் மகளிரையும் பற்றினர். கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட துரியோதனனின் படைவீரர்கள், முன்பே {களத்தைவிட்டு} ஓடியவர்களுடன் சேர்ந்து கொண்டு, (அங்கே அருகினில் இருந்த) பாண்டவர்களை அணுகினர். துரியோதனன் பிடிபட்ட பிறகு, வாகனங்களும், கடைகளும், அரங்குகளும், வண்டிகளும், வண்டியிழுக்கும் விலங்குகளுமான அனைத்தும் பாண்டவர்களிடம் பாதுகாப்பு நாடி சென்றன. அந்த வீரர்கள் {துரியோதனன் படை வீரர்கள்}, "பெரும் பலமும், அழகிய முகமும், வலுத்த கரமும் கொண்ட திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை}, கந்தர்வர்கள் சிறைபிடித்துச் செல்கிறார்கள்! பிருதையின் {குந்தியின்} மகன்களே, அவர்களைப் பின் தொடருங்கள்! துச்சாசனன், துர்விஷஹன், துன்முகன், துர்ஜயன் ஆகியோருடன், அரச குடும்பத்தின் மகளிர் அனைவரும் சேர்ந்து சிறைபிடிக்கப்பட்டுச் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள்" என்றனர்.
இப்படிக் கதறிய துரியோதனனின் தொண்டர்கள், வருத்தமும் மனச்சோர்வும் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} விடுதலையை விரும்பி யுதிஷ்டிரனை அணுகினர். வருத்தமும் மனச்சோர்வும் அப்படி வேண்டிக் கொண்டிருந்த துரியோதனனின் வயதுமுதிர்ந்த பணியாட்களிடம் பீமன், "உண்மையில், களத்தில் எங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, குதிரைகளாலும், யானைகளாலும் உதவப்பட்டுப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு நாங்கள் செய்ய வேண்டியதே கந்தர்வர்களால் செய்யப்பட்டுள்ளது! வேறு காரியத்திற்காக இங்கு வந்த அவர்கள், தாங்கள் எதிர்பாராத விளைவுகளால் வீழ்ந்தார்கள். உண்மையில், வஞ்சக விளையாட்டில் விருப்பம் கொண்ட மன்னனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவே இது!
சக்தியற்ற ஒரு மனிதனுக்கு எதிராக இருப்பவன், மற்றவர்களால் வீழ்த்தப்படுவான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் கந்தர்வர்கள் இயல்புக்குமிக்க வழியில் இந்தப் பொன்மொழியின் உண்மைத் தன்மையை நம் கண்களுக்கு முன்னால் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாங்கள் சோம்பி அமர்ந்திருந்தாலும், உண்மையில், எங்கள் சுமையைத் தங்கள் தோள்களில் ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பும் மனிதர்கள், அதிர்ஷ்டவசமாக இன்னும் கூட இருக்கிறார்கள் என்று காணப்படுகிறது. அந்தப் பாதகன் {துரியோதனன்}, தான் செழிப்புடன் இருப்பதையும், காற்றையும், குளிரையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொண்டு, தவத்தினால் உடல் இளைத்துத் தீக்காலத்தில் இருக்கும் எங்களையும் பார்க்க விரும்பியே இங்கு வந்திருக்கிறான். பாவம் நிறைந்தவனும், பாதகனுமான அந்தக் கௌரவனின் {துரியோதனனின்} நடையைப் பின்பற்றுபவர்களே, இந்த அவனது அவமானத்தைக் காண்கிறார்கள்! துரியோதனனிடம் இதைச் செய்யச் சொன்னவன் {தூண்டியவன்} எவனோ, அவன் நிச்சயமாகப் பாவம் நிறைந்த செயலைச் செய்திருக்கிறான். குந்தியின் மகன்கள் தீயவர்களும் பாவிகளும் அல்லர் என்பதை உங்கள் அனைவரின் முன்னால் சொல்லிக் கொள்கிறேன்" என்றான் {பீமன்}.
குந்தியின் மகனான பீமன் இப்படிக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம் {பீமனிடம்}, "கொடுஞ்சொற்களுக்கு இது நேரமில்லை" என்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.