Arjuna saw his friend! | Vana Parva - Section 243 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கந்தர்வர்களுடன் மோதிய பாண்டவர்கள்; அர்ஜுனன் வெளிப்படுத்திய வீரம்; அர்ஜுனனால் தாக்கப்பட்ட கந்தர்வ மன்னன் சித்திரசேனன் இறுதியில் தன்னை வெளிக்காட்டுவது...
கந்தர்வ மன்னன் சித்திரசேனனுடன் அர்ஜுனன் புரிந்த போர் |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தெய்வீக ஆயுதங்களை அறிந்து பொன்மாலைகள் அணிந்திருந்த கந்தர்வர்கள், தங்கள் சுடர்மிகும் கணைகளைக் காட்டி, பாண்டவர்கள் மீது எல்லாப் புறங்களில் இருந்தும் மோதினர். பாண்டுவின் மகன்கள் எண்ணிக்கையில் நான்காகவும், கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும் இருந்ததால், அந்தக் களம் பார்ப்பதற்கு இயல்புக்குமிக்க வகையில் இருந்தது. கர்ணன் மற்றும் துரியோதனனின் தேர்கள் ஏற்கனவே கந்தர்வர்களால் தூள் தூளாக்கப்பட்டதுபோலவே, அந்த நான்கு வீரர்களின் தேர்களையும் உடைக்க முயற்சி நடந்தது.
ஆனால் அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} தங்கள் ஆயிரக்கணக்கான கணைகளை, ஆயிரக்கணக்கான கந்தர்வர்கள் மீது மழையெனப் பொழிந்து அவர்களை நோக்கி விரைந்தனர். பெரும் சக்தி படைத்த அந்த விண்ணதிகாரிகள் இந்தக் கணை மழையால் எல்லாப்புறங்களிலும் தடுத்து நிறைத்தப்பட்டு, பாண்டுவின் மகன்களின் அருகே வரமுடியாத படி இருந்தனர். பிறகு சினம் தூண்டப்பட்ட அர்ஜுனன், கோபக்கார கந்தர்வர்களை இலக்காக வைத்து, அவர்கள் மீது தெய்வீக ஆயுதங்களை வீசினான்.
இந்த மோதலில், பலமிக்க அர்ஜுனன், தனது அக்னேய ஆயுதத்தால், கந்தர்வர்களை ஆயிரமாயிரமாக யமனுலகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். களத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனான வலிமைமிக்க வில்லாளியான பீமன், தனது கூரிய கணைகளால் கந்தர்வர்களை நூற்றுக்கணக்கில் கொன்று கொண்டிருந்தான். வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த மாத்ரியின் பலமிக்க மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} நூற்றுக்கணக்கான கந்தர்வர்களுடன் மோதி, ஓ! மன்னா {ஜனமேஜயா} அனைவரையும் கொன்று கொண்டிருந்தனர். இப்படி அந்தப் பலமிக்கப் போர்வீரர்களின் {பாண்டவர்களின்}, தெய்வீக ஆயுதங்களால் கந்தர்வர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, திருதராஷ்டிரன் மகன்களைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு அவர்கள் {கந்தர்வர்கள்} வானத்திற்கு எழும்பினர்.
ஆனால் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அப்படி அவர்கள் வானுக்கு எழுவதைக் கண்டு, அவர்களை எல்லாப்புறங்களிலும் சூழ்ந்து தனது கணைகளால் பரந்து விரிந்த ஒரு வலையை அமைத்தான். கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளைப் போல, அந்த அம்பு வலையில் அகப்பட்ட அவர்கள் {கந்தர்வர்கள்} கோபத்துடன் அர்ஜுனன் மீது கதாயுதங்களையும், தண்டங்களையும் {சக்திகளையும்}, அகலமான வாள்களையும் {ரிஷ்டிகளையும்} வீசினர். ஆனால் மிகவும் பயனளிக்கக்கூடிய ஆயுதங்களை அறிந்து வைத்திருந்த அர்ஜுனன், அந்தக் கதாயுதங்கள், தண்டங்கள் மற்றும் அகன்ற வாள்களின் {ரிஷ்டிகளின்} மழையை விரைவில் தடுத்து, தனது சந்திர வடிவு கொண்ட கணைகளால் கந்தர்வர்களின் உறுப்புகளைச் சிதைக்க ஆரம்பித்தான். அவர்களது தலைகளும், கால்களும் கரங்களும் மேலிருந்து கீழே விழ ஆரம்பித்தது, கல் மழை பொழிவது போல இருந்தது. இக்காட்சியைக் கண்ட எதிரிகள் பீதியால் தாக்குண்டனர்.
பாண்டுவின் சிறப்பு மிக்க மகனால் {அர்ஜுனனால்} கந்தர்வர்கள் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் வானத்தில் இருந்து, பூமியின் தரையில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் மீது கனமாகக் கணைகளின் மழையைப் பொழிய ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பலமும் சக்தியும் வாய்ந்த அர்ஜுனன், அந்தக் கணை மழையைத் தனது ஆயுதங்களின் மூலம் தடுத்து, பதிலுக்கு அவர்களுக்குக் காயம் ஏற்படுத்தத் தொடங்கினான். பிறகு குரு குலத்தைச் சேர்ந்த அர்ஜுனன், ஸ்தூணாகர்ணம் {Sthunakarna}, இந்திரஜாலம் {Indrajala}, சௌரா {Saura}, ஆக்நேயா {Agneya}, சௌமயா {Saumya} ஆகிய நன்கு அறியப்பட்ட தனது ஆயுதங்களைப் பயன்படுத்தினான். குந்தியின் மகன் அடித்த நெருப்பைக் கக்கும் அந்த ஆயுதங்களால் எரிக்கப்பட்ட கந்தர்வர்கள், சக்ரன் {இந்திரன்} அடித்த வஜ்ரத்தால் எரிக்கப்பட்ட திதியின் மகன்களைப் போலப் பெரிதும் பாதிப்படைந்தனர்.
அவர்கள் மேலே இருந்தபடி அர்ஜுனனைத் தாக்கிய போது, தனது கணைகளின் வலையால் அவர்களை அவன் தடுத்தான். பூமியின் பரப்பில் நின்று கொண்டிருந்த அவனை {அர்ஜுனனை} அவர்கள் எல்லாப் புறங்களில் இருந்தும் தாக்கிய போது, அவன் {அர்ஜுனன்} தனது பிறை வடிவம் கொண்ட கணைகளால் அவர்களைத் தடுத்தான். குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} அச்சமூட்டப்பட்ட கந்தர்வர்களைக் கண்டதும், ஓ! பாரதா {ஜனமேஜயா} கதாயுதத்தை ஏந்தியபடி சித்திரசேனன் அங்கு விரைந்தான். மேலே இருந்த அந்தக் கந்தர்வ மன்னன் அர்ஜுனனை நோக்கி கைகளில் கதாயுதத்துடன் வந்தபோது, அர்ஜுனன் முழுவதும் இரும்பாலான அந்தக் கதாயுதத்தை ஏழு துண்டுகளாக்கினான். கணைகளின் பெரும் செயலால் அர்ஜுனன் அவனது கதாயுதத்தைப் பல துண்டுகளாக்கியதைக் கண்ட சித்திரசேனன், தான் அறிந்த அறிவியலின் உதவியுடன், தன்னை அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டு, அவனுடன் {அர்ஜுனனுடன்} போரிட ஆரம்பித்தான்.
எனினும், வீரனான அர்ஜுனன் தனது தெய்வீக ஆயுதங்களால், தன்னை இலக்காக வைத்து கந்தர்வர்களால் அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் தடுத்தான். சிறப்புமிக்க அர்ஜுனன், அந்த ஆயுதங்களைக் கொண்டு தன்னைத் தடுப்பதைக் கண்ட கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்}, தன் மாய சக்திகளைப் பயன்படுத்தி அவனது காட்சியில் இருந்து முழுவதுமாக மறைந்தான். பார்வையில் இருந்து மறைந்திருந்து தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த கந்தர்வர்களின் தலைவனை அவதானித்த அர்ஜுனன், முறையான மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு தனது பகைவனைத் {சித்திரசேனனைத்} தாக்கினான். பல உருவம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, சப்த வேதம் {Sabda-veda} என்ற பெயரால் அறியப்பட்ட தனது ஆயுதத்தைக் கொண்டு, எதிரி காணாமல் போவதைத் தடுத்தான்.
சிறப்பு மிக்க அர்ஜுனனின் அந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது, அவனது {அர்ஜுனனின்} அன்புக்குரிய நண்பனான கந்தர்வமன்னன், தன்னை அவனுக்குக் காட்டினான். சித்திரசேனன், "உன்னுடன் போராடும் என்னில் உனது நண்பனைப் பார்!" என்றான். போரால் களைத்துப் போன தனது நண்பன் சித்திரசேனனைக் கண்ட பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனன்}, தான் அடித்த ஆயுதங்களைத் திரும்பப் பெற்றான். அர்ஜுனன் தனது ஆயுதங்களைத் திரும்பப் பெற்றதைக் கண்ட பாண்டுவின் பிற மகன்களும் ஓடிக்கொண்டிருந்த தங்கள் குதிரைகளையும், தங்கள் ஆயுதங்களின் வீரியத்தையும் தடுத்து, தங்கள் விற்களைத் திரும்பப் பெற்றனர். பிறகு, சித்திரசேனன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு ஒருவர் நலத்தை மற்றவர் விசாரித்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.