Drona disregarded by Karna! | Virata Parva - Section 47 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 22)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்பட்டதாகத் துரியோதனன் பீஷ்மரிடம் சுட்டிக் காட்டுவது; துரியோதனனும் கர்ணனும் துரோணரை நிந்திப்பது; துரோணரை அலட்சியப்படுத்தி, படைகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யும்படி கர்ணன் துரியோதனனை வேண்டுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், “நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.
[1] “இங்கு “ஆச்சாரியர்” என்று துரோணர் கிருபர் ஆகியோர் இருவரைக் குறிக்கும் வகையான சொல் மூலத்தில் கையாளப்பட்டிருக்கிறது. சில உரைகளில் உள்ள சொல் ஒருவரை {துரோணரை} மட்டுமே குறிக்கின்றன. நீலகண்டர் இவ்விரண்டையும் கவனித்து, இவ்விடத்தில் இருவரைக் குறிப்பதையே கைக்கொள்கிறார்” என்கிறார் கங்குலி.
அந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். குறித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா? அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா? அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா?என்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.
குறிப்புகளுக்கான விளக்கம்:
[2] “இங்கே சொல்லப்படும் பொருள் சந்தேகத்திற்கிடமானது. அர்ஜுனன் எதிரியாக அங்கே தோன்றியது, அவன் {அர்ஜுனன்} பங்குக்கு அவன் செய்த முன்னாய்வற்ற செயல் என்று துரியோதனன் சொல்வதாகத் தெரிகிறது. “பதிமூன்றாவது வருட காலம் கழிந்துதான் பாண்டவர்கள் தங்கள் அரசைக் கோர வேண்டும். துரியோதனனாகிய நான் அவர்களது கோரிக்கைக்கு இணங்கவும் செய்யலாம்; இணங்காமலும் போகலாம். எனவே, நான் அர்ஜுனனை ஏற்கமாட்டேன் என்பது நிச்சயமில்லாத போது, அவனது {அர்ஜுனனின்} எதிரித் தோற்றம் {அவன் நமக்கெதிராக எதிரியாக வந்திருப்பது} விவேகமற்ற செயலாகும். வெற்றி நிச்சயம் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால், அவன் தோற்கடிக்கவும் படலாம்” என்று துரியோதனன் சொன்னதற்குப் பொருள் சொல்கிறார் கங்குலி.[3] “ஒழுக்கவியலாளர்களே கூடத் தங்கள் சொந்தச் செயல்களில் குழம்புவார்கள் எனும்போது, என்னதான் அறம்சார்ந்தவர்களாக இருந்தாலும், பாண்டவர்கள், தாங்கள் நம்புவதுபோலல்லாமல் பதிமூன்றாவது வருடம் உண்மையில் முடிவதற்கு முன்னரே இப்படித் தோன்றிய காரியத்தால் தவறு செய்துவிட்டார்கள்” என்றே இவ்வரி பொருள் தருவதாகத் தெரிகிறது. அல்லது “இங்கே நமது இருப்பைப் பொறுத்தமட்டில், ஒழுக்கவியலாளர்கள் குழப்பமடைவது போல, நாம் குழம்பாமல், எப்போதும் போலச் சரியான தீர்மானத்திற்கே வந்திருக்கிறோம்” என்றும் பொருள் கொள்ளலாம். அதை நியாயப்படுத்துவதற்காகவே துரியோதனன் பின்வரும் வாக்கியங்களைச் சொல்கிறான் என்றும் தெரிகிறது” என்கிறார் கங்குலி.
குறிப்பு முடிந்து பகுதி 47 தொடர்கிறது...
நம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும்? {இதில் நமது தவறு என்ன?}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்”, என்றான் {துரியோதனன்}.
“திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்”, என்றான் {துரியோதனன்}.
“தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்? தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும்? (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்?” என்றான் {துரியோதனன்}.
துரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , “ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.
நமது ஆசானுக்குப் {துரோணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும்? நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும்? எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்”, என்றான் {கர்ணன்}.
விவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து” என்றான் {கர்ணன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.