The vicious thought of Nahusha! | Udyoga Parva - Section 11 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 11)
பதிவின் சுருக்கம் : தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து நகுஷனைத் தேவலோக மன்னனாக்குவது; நல்லவனாக இருந்த நகுஷன் சிற்றின்பத்தில் மூழ்கித் திளைப்பது; தேவர்களும் பலரும் நகுஷனுக்குச் சேவை செய்வது; இந்திராணியைக் கண்ட நகுஷன், தனது இல்லத்திற்கு அவளை வரச்சொன்னது; இந்திராணி பிருஹஸ்பதியிடம் தஞ்சமடைந்தது; இதனால் நகுஷன் கோபமடைவது...
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு முனிவர்களும், மேன்மையான தேவர்களும், “அழகிய நகுஷன் {நஹுஷன், Nahusha}, தேவர்களின் மன்னனாக முடிசூடப்படட்டும். அவன் சக்திவாய்ந்தவனாகவும், புகழ்பெற்றவனாகவும், எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருக்கிறான்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! பூமியின் தலைவா, நீ எங்கள் மன்னனாக இருப்பாயாக!” என்றனர். தனது நலனின் நோக்கம் கொண்ட நகுஷன், (மனிதகுலத்தின்) மூதாதையர்களுடன் சேர்ந்திருந்த அந்தத் தேவர்களிடம், “நான் திடனற்றவனாக இருக்கிறேன்; எனக்கு உங்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை; பலமிக்க ஒருவனே உங்கள் மன்னனாக இருக்க வேண்டும்; அந்த வலிமையைப் பெற்றவனாக எப்போதும் இந்திரனே இருந்து வந்திருக்கிறான்” என்றான்.
அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “எங்கள் தவ அறத்தின் துணை கொண்டு நீ சொர்க்கத்தை ஆட்சி செய்வாயாக. எங்கள் அனைவருக்கும் அவரவருக்கென்று {தனித்தனி} அச்சங்கள் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {நகுஷா}, சொர்க்கத்தின் மன்னனாக நீ முடிசூட்டிக் கொள்வாயாக. உன் பார்வையின் பரப்பில் நிற்பவன் எவனும், அவன் தேவனோ, அசுரனோ, யக்ஷனோ, துறவியோ, பித்ரியோ, கந்தர்வனோ, யாராக இருப்பினும், நீ அவர்களது சக்தியை உறிஞ்சி {கிரகித்து} (அதனால்) பலத்தில் வளர்வாய். (அனைத்துப் பொருள்களுக்கும்) முன்பாக அறத்தை நிறுத்தி நீ உலகங்களின் ஆட்சியாளனாவாயாக. பிரம்ம முனிவர்களையும் {பிரம்மரிஷிகளையும், பிராமணத் துறவிகளையும்}, சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களையும் நீ காப்பாயாக!” என்றனர்.
பிறகு, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, நகுஷன், சொர்க்கத்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டான். (அனைத்துக்கும் முன்பாக) அறத்தை நிறுத்தி, அவன் அனைத்து உலகங்களின் ஆட்சியாளன் ஆனான். அவன் எப்போதும் அறம்சார்ந்த நிலை கொண்டவனாக இருந்திருந்தாலும், இந்த விலைமதிப்பில்லா வரத்தையும், சொர்க்கத்தின் அரசாட்சியையும் அடைந்ததால், அவனது {நகுஷனது} மனம் சிற்றின்பத்தை நோக்கித் திரும்பியது. நகுஷன், தேவர்களின் மன்னன் ஆனதும், தன்னைச் சுற்றி தேவ கன்னியரையும், தெய்வீக பிறப்புடைய காரிகையரையும் சூழ நிறுத்திக் கொண்டு, நந்தனத் தோப்புகளிலும், கைலாய மலையிலும், இமயத்தின் சிகரத்திலும், மந்தரத்திலும், வெண்மலையான சஹ்யத்திலும், மகேந்திரத்திலும், மலையத்திலும், கடல்களிலும், நதிகளிலும் பல்வேறு விதமான இன்பங்களில் ஈடுபட்டான். செவி, இதயம் ஆகிய இரண்டையும் கொள்ளை கொள்ளும் பல்வேறு தெய்வீக விளக்கவுரைகளையும், பல்வேறு வகையான இசைக்கருவிகளின் இசைப்பொலிகளையும், இனிய குரல் வேறுபாடுகளையும் அவன் செவிமடுத்தான்.
விஸ்வாவசு, நாரதர், தேவ கன்னியரின் படை, கந்தர்வர்களின் குழுக்கள், உயிர் வடிவங்களில் இருந்த ஆறு பருவ காலங்கள் ஆகியோர் தேவர்களின் மன்னனைக் கவனித்துக் கொண்டனர். உற்சாகமூட்டும் நறுமணமிக்கக் குளிர்ந்த தென்றல் அவனைச் சுற்றி வீசிக் கொண்டிருந்தது. அந்த இழிந்தவன் {நகுஷன்} அப்படி இன்புற்றிருந்த போது, ஒரு சந்தர்ப்பத்தில், இந்திரனுக்குப் பிடித்தமான ராணியும் தேவியுமானவள் {சச்சி, இந்திராணி} அவனது {நகுஷனது} பார்வையில் பட்டாள். அந்தத் தீய ஆன்மா {நகுஷன்}, அவளைப் பார்த்த பின்னர் {தனது} சபை உறுப்பினர்களிடம், “இந்திரனின் ராணியான, இந்தத் தேவி {சச்சி}, என்னை ஏன் கவனிக்கவில்லை? நான் தேவர்களின் ஏகாதிபதியும், உலகங்களின் ஆட்சியாளனுமாவேன். சச்சி விரைவாக என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திக்கட்டும்!” என்றான் {நகுஷன்}.
இதைக்கேட்டு வருத்தப்பட்ட அந்தத் தேவி {சச்சி}, பிருஹஸ்பதியிடம் {பிரகஸ்பதியிடம்}, “ஓ! அந்தணரே, என்னை இந்த நகுஷனிடம் இருந்து காப்பாற்றும். என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன். ஓ! அந்தணரே, தெய்வீக மன்னனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானவளாக இருக்கும் என்னிடம், அனைத்து மங்கலக் குறிகளும் இருப்பதாகவும், என் தலைவனுக்கு அர்ப்பணிப்புடன், கற்புடனும் இருக்கும் நான் விதவையாவதற்கான விதி இல்லை என்றும் நீர் எப்போதும் சொல்லி வந்துள்ளீர். இவை யாவையும் எனக்கு முன்னர்ச் சொல்லியிருக்கிறீர். உமது சொற்கள் உண்மையாகட்டும். ஓ! பெரும் சக்திகளைக் கொண்டவரே, ஓ! தலைவா {பிருஹஸ்பதியே}, வீணான சொற்களை நீர் பேசியதில்லை. எனவே, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன இவை யாவும் உண்மையாகட்டும்” என்றாள் {இந்திராணியான சச்சி}.
பிறகு, பிருஹஸ்பதி, தன்னருகில் அச்சத்துடன் இருந்த இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்}, “ஓ! தேவி {சச்சி}, என்னால் உனக்குச் சொல்லப்பட்டதெல்லாம் உண்மையாகும் என்பது உறுதி. விரைவில் இங்கே திரும்பி வரும் தேவர்கள் தலைவனான இந்திரனை நீ காண்பாய். உனக்கு நகுஷனிடம் இருந்து எந்த அச்சமும் இருக்காது; இந்திரனுடன் நீ விரைவில் இணைவாய் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}. இப்போது, ஆங்கீரசின் மகனான பிருஹஸ்பதியிடம் இந்திரனின் ராணி {சச்சி} தஞ்சமடைந்தாள் என்பதை நகுஷன் கேள்விப்பட்டான். இதனால் அந்த மன்னன் {இந்திரனான நகுஷன்} கடுங்கோபம் கொண்டான்.
***************************
தொடர்புடைய பதிவுகள் ***************************
- நகுஷன் ஞானம்! - வனபர்வம் பகுதி 180
- எவன் பிராமணன்? - வனபர்வம் பகுதி 179
- பாம்பை அடைந்த யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 178
- தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 75
- சங்கிரக பர்வம் | ஆதிபர்வம் - பகுதி 2 ஆ
-
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.