Krishna entered the city! | Udyoga Parva - Section 89 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –18)
பதிவின் சுருக்கம் : விருஸ்தலவாசிகளிடம் விடைபெற்ற கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தது; துரியோதனனைத் தவிர்த்த மற்ற கௌரவர்கள் வழியிலேயே கிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்து வந்தது; திருதராஷ்டிரன் மாளிகையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன், பிறகு திருதராஷ்டிரனின் அனுமதியுடன் வெளியேறி, விதுரனின் இல்லத்திற்குச் சென்றது; விதுரன் கிருஷ்ணனை விருந்தோம்பலுடன் வரவேற்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(தனது படுக்கையில் இருந்து) அதிகாலையில் எழுந்த கிருஷ்ணன், தனது காலைச் சடங்குகளைச் செய்து, பாரதர்களிடம் இருந்து விடைபெற்று, (குருக்களின்} நகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். விருகஸ்தலத்தில் வசிப்போர் அனைவரும் அந்த நீண்ட கரங்களைக் கொண்ட வலியவனுக்கு {கிருஷ்ணனுக்கு} விடை கொடுத்து, அவன் புறப்பட்டதும், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். துரியோதனனைத் தவிர மற்ற தார்தராஷ்டிரர்கள் அனைவரும் சிறந்த ஆடைகளை உடுத்தி, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறருடன் அவனைச் {கிருஷ்ணனைச்} சந்திக்க வெளியே சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு வகைகளிலான தேர்களில் ஆயிரக்கணக்கான குடிமக்களும், கால்நடையாகப் பலரும் அந்த ரிஷிகேசனைக் {கிருஷ்சனைக்} காண வெளியே வந்தனர்.
களங்கமற்ற செயல்களைக் கொண்ட பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரர் மகன்கள் ஆகியோரை வழியிலேயே சந்தித்த அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரும் சூழ நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான். கிருஷ்ணனை மதிக்கும் வகையில் அந்நகர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கியமான தெருக்கள் பல்வேறு வகையான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில், ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எவரும் வீடுகளுக்குள் இல்லை. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} காண குடிமக்களிடம் அவ்வளவு ஆவல் இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நகருக்குள் நுழைந்து, அதன் வழியே கடந்து சென்ற போது, குடிமக்கள் அனைவரும் வெளியே வந்து, தெருக்களில் வரிசையாக நின்று தங்கள் சிரங்களைத் தரைவரை தாழ்த்தி அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பாடினர்.
உயர்குலப் பெண்கள் நிறைந்திருந்த பெரிய மாளிகைகள், ஒருகட்டத்தில், அவர்களது {அந்தப் பெண்களின்} பாரம் தாங்க முடியாமல் தரையில் விழுந்துவிடுவது போலத் தோன்றின. வாசுதேவனின் குதிரைகள் பெரும் வேகம் கொண்டவை என்றாலும், மனிதர்களின் அடர்த்தியினூடே மிகவும் மெதுவாகவே சென்றது. எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்தத் தாமரைக்கண்ணன் {கிருஷ்ணன்}, எண்ணிலடங்கா கட்டடங்கள் நிறைந்த திருதராஷ்டிரனின் சாம்பல் நிற [1] அரண்மனைக்குள் நுழைந்தான். அந்த அரண்மனையின் முதல் மூன்று அறைகளைக் கடந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விசித்திரவீரியனின் அரச மகனைச் {திருதராஷ்டிரனைச்} சந்தித்தான்.
[1] வெண்மையான அரண்மனை என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.
அந்தத் தாசார்ஹ குலத்தின் மகன் {கிருஷ்ணன்}, தனது முன்னிலையை அணுகியதும், பெரும் புகழையுடைய அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர், கிருபர், சோமதத்தன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோரோடு எழுந்து நின்றான். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} மதிக்கும் வண்ணம் அங்கே இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அந்த விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, பெரும் புகழைப் படைத்த மன்னன் திருதராஷ்டிரனை அணுகியதும், நேரம் எதையும் வீணடிக்காமல், அவனையும் {திருதராஷ்டிரனையும்}, பீஷ்மரையும் முறையான வார்த்தைகளால் வழிபட்டான்.
நிறுவப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு வழிபாட்டை வழங்கிய பின்னர், அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பிற மன்னர்களை வயது மூப்பின் அடிப்படையில் வணங்கவும் வாழ்த்தவும் செய்தான். பிறகு அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஒப்பற்ற துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பாஹ்லீகனையும், கிருபரையும், சோமதத்தனையும் அணுகினான். அந்த அறையில், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கத்தாலான இருக்கை ஒன்று ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்தது. திருராஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க, அச்யுதன் {கிருஷ்ணன்} அந்த இருக்கையில் அமர்ந்தான். திருதராஷ்டிரனின் புரோகிதர்கள் ஒரு மாடு, தேன், தயிர்க்கடைசல் மற்றும் நீரை ஜனார்த்தனனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} காணிக்கையாக வழங்கினர். [2]
[2] மாடு, மதுபர்க்கம், நீர் ஆகியவற்றை வழங்கியதாக ஒரு பதிப்பு சொல்கிறது. மதுபர்க்கம் = தேன், பால் மற்றும் பழம் கலந்த உணவு.
விருந்தோம்பல் சடங்குகள் முடிந்த பிறகு, ஒவ்வொருவர் உறவுமுறைக்கேற்ப அவர்களுடன் கேலி செய்து கொண்டும், சிரித்துக் கொண்டும் சிறிது நேரம் கோவிந்தன் {கிருஷ்ணன்} குருக்கள் சூழ அங்கே இருந்தான். திருதராஷ்டிரனால் வழிபடப்பட்டு, மதிக்கப்பட்ட அந்த எதிரிகளைக் கலங்கடிக்கும் ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, மன்னனின் {திருதராஷ்டிரனின்} அனுமதியுடன் வெளியே வந்தான். குருக்கள் அனைவரையும் அவர்களது சபையில் முறையாக வணங்கிய மாதவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இனிமையான இல்லத்திற்குச் சென்றான்; தனது இல்லத்திற்கு வந்த தாசார்ஹ குலத்து ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அணுகி, அனைத்து மங்கலகரமான மற்றும் விரும்பத்தக்க காணிக்கைகளாலும் அவனை {கிருஷ்ணனை} விதுரன் வழிபட்டான்.
அவன் {விதுரன் கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, உடல் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீயே உள்ளுறையும் ஆன்மாவாக இருப்பதால், உனது வருகையால் நான் உணர்ந்த மகிழ்ச்சியை உனக்குச் சொல்லி என்ன பயன்?" என்றான். உபசரிப்பும், வரவேற்பும் முடிந்த பிறகு, அறநெறியின் அனைத்துக் கொள்கைகளையும் அறிந்த விதுரன், மதுசூதனனான கோவிந்தனிடம் பாண்டவர்களின் நலன் குறித்து விசாரித்தான்.
கடந்த காலமும், வருங்காலமும், எவனிடம் நிகழ்காலமாக இருக்கிறதோ, அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து, அந்த விருஷ்ணிகள் தலைவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களால் விரும்பப்படுபவனாக, அவர்களிடம் நட்புணர்வோடு இருப்பவனாக, கல்விமானாக, அறநெறியில் உறுதியுள்ளவனாக, நேர்மையாளனாக, (பாண்டவர்களுக்கு எதிராக) எந்தக் கோபத்தையும் அடையாதவனாக, அறிவுள்ளவனாக விதுரனை அறிந்து, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} செயல்பாடுகள் அனைத்தையும் விரிவாக அவனிடம் {விதுரனிடம்} சொல்ல ஆரம்பித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.