Indra severed Namuchi's head! | Shalya-Parva-Section-43 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)
இறுதியாக, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கல்விமான்கள் இரத்த ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்திற்கும் {வசிஷ்டாபவாஹத்திற்கும்} வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அச்சந்தரும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்து,(6) இரத்தத்துடன் கலந்திருக்கும் சரஸ்வதியின் நீரையும், அதை எண்ணற்ற ராட்சசர்கள் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.(7) ஓ! மன்னா, கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அந்த ராட்சசர்களைக் கண்டு, சரஸ்வதியை அந்த அவல நிலையில் இருந்து மீட்கப் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(8) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்த அருளாளர்கள், அங்கே வந்து, அந்த நதிகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} இருப்புக்கு அழைத்து, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(9) "ஓ! மங்கலமான மங்கையே {கல்யாணி}, உன்னில் இருக்கும் இந்தத் தடாகம் ஏன் இவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக. அதைக் கேட்டு, (அத்தடாகத்தை முறையான நிலைக்கு மீட்க) நாங்கள் முயற்சி செய்வோம்" {என்றனர்}.(10)
இவ்வாறு கேட்கப்பட்ட சரஸ்வதி, பேசும்போது நடுங்கிக் கொண்டே, நேர்ந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள். துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளைக் கண்ட அந்தத் தவசிகள், அவளிடம்,(11) "நாங்கள் காரணத்தைக் கேட்டுவிட்டோம். ஓ! பாவமற்ற மங்கையே, நீ பெற்ற சாபத்தைக் குறித்தும் கேட்டோம். நாங்கள் அனைவரும் இனி முயற்சி செய்வோம்" என்றனர்.(12) அந்த ஆறுகளில் முதன்மையானவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அவர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்தபடி, "நாம் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை அவளது சாபத்திலிருந்து விடுவிப்போமாக" என்றனர்.(13) அந்தப் பிராமணர்கள் அனைவரும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்டத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனுமான மஹாதேவனை வழிபட்டு, தவங்கள், நோன்புகள், உண்ணா நோன்புகள், பல்வேறு பொருட்களைத் தவிர்த்தல், வலிநிறைந்த நோன்புகள் ஆகியவற்றை நோற்று, ஆறுகளில் முதன்மையான அந்தத் தெய்வீக சரஸ்வதியை {அந்த அவலநிலையில் இருந்து} விடுவித்தனர்.(14-16)
அம்முனிவர்களால் சரஸ்வதியின் நீர் தூய்மையாக்கப்பட்டதைக் கண்ட (அங்கே வசித்து வந்த) ராட்சசர்கள், பசியால் பீடிக்கப்பட்டு, அந்த முனிவர்களின் பாதுகாப்பையே நாடினர்.(17) பசியால் பீடிக்கப்பட்ட அந்த ராட்சசர்கள், கூப்பிக் கரங்களுடன், கருணை நிரம்பிய அந்தத் தவசிகளிடம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்:(18) "நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். நித்திய அறத்தில் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். பாவம் நிறைந்த எங்களின் இந்நடத்தை, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது கிடையாது.(19) உங்கள் அருள் இல்லாமையாலும், எங்கள் சொந்த தீய செயல்களாலும், எங்கள் பெண்களின் பாலியல் பாவங்களாலும் எங்கள் குற்றங்கள் {பாவங்கள்} அதிகரித்து, இவ்வாறு பிரம்ம ராட்சசர்களானோம். வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரில் சிலரும், பிராமணர்களை வெறுப்பவர்களும், அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} காயமேற்படுத்துபவர்களும் ராட்சசர்களாகின்றனர்.(20,21) பிராமணர்களில் சிறந்தவர்களே, எங்கள் துயர்துடைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வீராக. நீங்கள் அனைத்து உலகங்களின் துயரையும் துடைக்கத் தகுந்தவர்களாவீர்கள்" என்றனர்.(23) அவர்களது இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், அந்தப் பெரும் நதியைப் புகழ்ந்தனர்.
அந்த ராட்சசர்களை மீட்பதற்காக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்த அந்தத் தவசிகள்,(24) "தும்மலில் எச்சில் தெறித்த உணவு, புழு பூச்சிகளைக் கொண்டது, பிறர் உண்ட எச்சங்களின் கலவை, முடி {மயிர்} கலந்தது, அழுகியது {கெட்டுப் போனது}, கண்ணீர் கலந்தது ஆகிய உணவுகள் இந்த ராட்சசர்களின் பங்காகட்டும்.(25) இவையனைத்தையும் அறிந்த ஒரு கல்விமான், இவ்வகை உணவுகளைக் கவனமாகத் தவிர்ப்பானாக. அத்தகு உணவை உண்பவன் ராட்சசர்களின் உணவை உண்டதாகக் கருதப்படுவான்" என்றனர்.(26) அந்தத் தீர்த்தத்தைத் தூய்மைப்படுத்திய அந்தத் தவசிகள், அந்த ராட்சசர்களின் துயர் துடைப்புக்காக அந்த ஆற்றிடம் இவ்வாறு வேண்டினர்.(27) அந்தப் பெரும் முனிவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதியானவள்}, தன் உடலை, அருணை என்றழைக்கப்படும் புதிய வடிவில் ஏற்றுக் கொண்டாள்.(28) (சரஸ்வதியின் கிளையான) அந்தப் புதிய ஆற்றில் நீராடிய ராட்சசர்கள், தங்கள் உடல்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்தனர்.(29) நூறு வேள்விகளைச் செய்தவனான தேவர்களின் தலைவன் (இந்திரன்), இவை யாவையும் உறுதிசெய்து கொண்டு, அந்த முதன்மையான தீர்த்தத்தில் {அருணசங்கத் தீர்த்தத்தில்} நீராடி, மிகப் பயங்கரமான பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(30)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "என்ன காரணத்தால் இந்திரன் பிராமணரைக் கொன்ற {பிரம்மஹத்தி} பாவத்தால் களங்கமடைந்தான்? எவ்வாறு அவன் {இந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் நீராடி தூய்மையடைந்தான்?" என்று கேட்டான்.(31)
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, அந்த வரலாற்றைக் கேட்பாயாக. அந்த நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே கேட்பாயாக. பழங்காலத்தில் வாசவன் {இந்திரன்}, நமுசியிடம் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு உடைத்துக் கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(32) (அசுரன்) நமுசி, வாசவனின் மீது கொண்ட அச்சத்தால், சூரியனின் ஒரு கதிருக்குள் நுழைந்து {ஒளிந்து} கொண்டான். பிறகு இந்திரன் {அந்தப் போர் நடந்து கொண்டிருதபோதே} நமுசியோடு நட்பு கொண்டு, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு,(33) "ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, ஓ! நண்பா, ஈரமடைந்த, அல்லது உலர்ந்த எப்பொருளினாலும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இரவிலோ, பகலிலோ நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இதையே உண்மை {சத்தியம்} என உறுதிகூறுகிறேன்" என்று சொன்னான்.(34) இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட தலைவன் இந்திரன், {போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது} ஒரு நாள் மூடுபனியைக் கண்டான். அப்போது {பகலும் இரவுமற்ற அந்தச் சந்திப் பொழுதில்} அவன் நீரின் {கடலின்} நுரையை (தனது ஆயுதமாகக்) கொண்டு நமுசியின் தலையைக் கொய்தான்.(35)
வெட்டப்பட்ட அந்த நமுசியின் தலையானது, இந்திரனைப் பின்தொடர்ந்து சென்று, அவனருகில் இருந்து, "ஓ! நண்பனைக் கொன்றவனே, ஓ! இழிந்தவனே" என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னது.(36) அந்தத் தலையால் இடைவிடாமல் {இவ்வாறு} தூண்டப்பட்ட இந்திரன், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, என்ன நடந்தது என்பதைத் துயருடன் சொன்னான்.(37) அண்டத்தின் அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்}, அவனிடம் {இந்திரனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, ஒரு வேள்வியைச் செய்து, முறையான சடங்குகளுடன் அருணையில் {அருணசங்கமத் தீர்த்தத்தில்} நீராடினால், அந்தத் தீர்த்தம் பாவம் குறித்த அச்சத்தில் இருந்து உன்னைக் காக்கும்.(38) ஓ! சக்ரா {இந்திரா}, முனிவர்களால் அந்த ஆற்றின் நீர் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.
முன்பொரு சமயம், அவ்விடத்தில் அந்த ஆறு மறைந்தே இருந்தது.(39) தெய்வீகமான சரஸ்வதி, அருணையிடம் சென்று, அதில் தனது நீரைப் பாயவிட்டாள். சரஸ்வதி மற்றும் அருணையின் இந்தச் சங்கமம் {அருண சங்கமம்}, மிகப் புனிதமானதாகும்.(40) ஓ! தேவர்களின் தலைவா, அங்கு ஒரு வேள்வியைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளை அளிப்பாயாக. அங்கே உன் தூய்மைச் சடங்கைச் செய்து, உனது பாவத்தில் இருந்து விடுபடுவாயாக" என்றான் {பிரம்மன்}.(41)
இவ்வாறு சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஓ! ஜனமேஜயா, பிரம்மனின் அந்த வார்த்தைகளின்பேரில் சரஸ்வதியின் அந்த வசிப்பிடத்தில் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.(42) பலனைக் கொன்றவனான அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, கொடைகள் பலவற்றைக் கொடுத்து, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, குறிப்பிட்ட வேள்விகளை முறையாகச் செய்து, அருணையில் மூழ்கினான்.(43) அப்போது அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டவனாக வெளியே எழுந்து வந்தான்[1]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஓ! பாரதா, அந்த நமுசியின் தலையும் அவ்வோடையில் {அருணையில்} விழுந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்த அசுரனும் {நமுசியும்}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல நித்திய பகுதிகள் பலவற்றை அடைந்தான்."
[1] நமுசி என்ற அசுரன் ஒரு பிராமணனாக இருந்திருக்க வேண்டும். ஆதிபர்வம் பகுதி 65, சுலோக எண்கள் 22-26ல் இந்த நமுசி கசியபர் மற்றும் தனுவின் மகனாகக் குறிப்பிடப்படுகிறான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பல வகையிலான தானங்களை அளித்து, பெரும் புண்ணியத்தை அடைந்தான். அறச்செயல்களையே செய்யும் அவன்{பலராமன்}, அடுத்ததாகச் சோமனின் பெரும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(46) ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில் அங்கேதான் சோமன் {சந்திரன்}, ராஜசூய வேள்வியைச் செய்தான். பிராமணர்களில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவருமான உயர் ஆன்ம அத்ரியே அந்த மகத்தான வேள்வியின் ஹோத்ரியாக இருந்தார். அவ்வேள்வியின் நிறைவில், (ஒரு தரப்பில் இருந்த) தேவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடந்தது. அந்தக் கடும்போரானது, (அசுரன்) தாரகனின் பெயரால் {தாரகம் என்றே} அறியப்பட்டது. அந்தப் போரில் ஸ்கந்தன் {முருகன்} அந்தத் தாரகனைக் கொன்றான்.(47,48) அந்தச் சந்தர்ப்பத்தில் தைத்தியர்களை அழிப்பவனான மஹாசேனன் (என்றும் ழைக்கப்பட்ட ஸ்கந்தன்), தேவர்களின் படைத்தலைமை பொறுப்பை அடைந்தான்[2]. அந்தத் தீர்த்தத்தில்தான் ஒரு பெரும் அஸ்வத {அரச} மரம் இருக்கிறது. குமாரன் என்றும் அழைக்கப்பட்ட கார்த்திகேயன், {சோம தீர்த்தத்தில் உள்ள} அதன் {அந்த அரச மரத்தின்} நிழலில் தான் எப்போதும் வசித்திருக்கிறான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)
-----------------------------------------------------------------------------------------------[2] முந்தைய பகுதியான சல்லிய பர்வம் பகுதி 43, சுலோகம் எண் 7ல் சொல்லப்பட்டது போல, ஸ்தாணு [அ] வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திலேயே கந்தன் தேவர்களின் படைத்தலைமையை ஏற்றிருக்க வேண்டும். சோம தீர்த்தம் கந்தனின் வசிப்பிடம் என்றே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
சல்லிய பர்வம் பகுதி – 43 ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |