The birth of Kartikeya! | Shalya-Parva-Section-44 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : : சிவனிடம் உண்டாகி அக்னியில் விழுந்த ஸ்கந்தன்; ஸ்கந்தனைக் கங்கையில் விட்ட அக்னி; ஸ்கந்தனை இமயத்தில் விட்ட கங்கை; கார்த்திகைப் பெண்டிர் ஸ்கந்தனுக்கு முலையூட்டியது; சிவனைக் கண்டு அணுகிய ஸ்கந்தன்; பூதகணங்களின் தோற்ற வேறுபாடுகள்; நான்கு வடிவங்களாகத் தன்னைப் பிரித்துக் கொண்ட ஸ்கந்தன்; ஸ்கந்தனுக்கு ஆட்சியுரிமை கோரிய நால்வர்; ஸ்கந்தனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கிய பிரம்மன்; சமந்தபஞ்சகத்துக்கு வந்த தேவர்கள்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சரஸ்வதியின் தகுதிகளைக் குறித்து விவரித்தீர். குமாரன் {முருகன்}, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, (தேவர்களின் மூலம்) {படைத் தலைவனாக} பதவியேற்றுக் கொண்டதை விளக்குவதே உமக்குத் தகும்.(1) நான் என்னுள் பெரிய ஆவலை உணர்கிறேன். எனவே, போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான தலைவன் ஸ்கந்தன், (தேவர்களின் படைத்தலைவனாக) பதவியேற்ற காலம், இடம் மற்றும் தன்மை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவனைப் பதவியேற்கச் செய்தது யார்? உண்மையான சடங்குகளைச் செய்தது யார்? அந்தத் தேவர்களின் படைத்தலைவன் {முருகன்} எவ்வாறு தைத்தியர்களுக்குப் பேரழிவை உண்டாக்கினான்?" என்று கேட்டான்.(2,3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த ஆவலை நீ உணர்வது, உனது குருக் குலப் பிறப்புக்குத் தகுந்ததே. ஓ! ஜனமேஜயா, நான் சொல்லப்போகும் வார்த்தைகள் உனக்கு இன்பத்தை உண்டாக்கும்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்புவதால், குமாரனின் பதவியேற்பையும், அந்த உயர்ஆன்மாவின் ஆற்றலையும் நான் சொல்லப் போகிறேன்.(5)
பழங்காலத்தில், மஹேஸ்வரனின் {சிவனின்} உயிர் வித்து வெளியேறி சுடர்மிக்க நெருப்பில் {அக்னியில்} விழுந்தது. அனைத்தையும் எரிப்பவனும், போற்றுதலுக்குரியவனுமான அக்னியால் அந்த அழிக்கப்பட முடியாத வித்தை எரிக்க முடியவில்லை.(6) மறுபுறம், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனான அவன் {அக்னி}, அந்த வித்தின் விளைவால் பெரும் சக்தியையும், காந்தியையும் பெற்றான். பெருஞ்சக்தி கொண்ட அந்த வித்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(7) பிரம்மனின் ஆணைக்கிணங்க தலைவன் அக்னி, கங்கையை (கங்கை ஆற்றை) அணுகி, சூரியப்பிரகாசத்தைக் கொண்ட அந்தத் தெய்வீக வித்தை அவளுக்குள் வீசினான்.(8) கங்கையாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாததால், அவள், தேவர்களால் வழிபடப்படும் இமயத்தின் அழகிய சாரலில் அதை விட்டாள்.(9) அதன்பேரில், அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, தன் சக்தியில் அனைத்துலகையும் மூழ்கச் செய்து அங்கேயே வளரத் தொடங்கினான். அதே வேளையில், கார்த்திகைகள் (அறுவர்), கடும் பிரகாசம் கொண்ட அந்தப் பிள்ளையைக் கண்டனர்.(10)
ஒரு மகனை விரும்பியவர்களான அந்தக் கிருத்திகைகள் அறுவரும், அக்னியின் உயர்ஆன்ம மகனான அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்}, நாணற்கொத்தில் கிடப்பதைக் கண்டு, "இவன் என் பிள்ளை, இவன் என் பிள்ளை" என்று உரக்கக் கதறினர்.(11) போற்றுதலுக்குரிய தலைவனான ஸ்கந்தன், அந்த ஆறு தாய்மாரின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, ஆறு வாய்களால் அவர்கள் அனைவரின் முலைகளையும் பருகினான்.(12) போற்றுதலுக்குரிய அந்தப் பிள்ளை கங்கையாற்றால் இமயத்தின் உச்சியில் விடப்பட்டதால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, தங்கமாக மாறிய அந்த மலை அழகாகத் தெரிந்தது.(14) வளர்ந்துவரும் அந்தப் பிள்ளையால் மொத்த பூமியும் அழகானது, இதன் காரணமாகவே (அக்காலத்தில் இருந்து) மலைகள் தங்கத்தை உண்டாக்கின.(15)
பெருஞ்சக்தி கொண்ட அந்தப் பிள்ளை கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். முதலில் அவன் காங்கேயன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவன் உயர்ந்த தவச் சக்திகளையும் அடைந்தான்.(16) ஓ! ஏகாதிபதி, சுயக்கட்டுப்பாடு, தவம், பெரும் சக்தி ஆகியவற்றுடன் கூடிய அந்தப் பிள்ளை, சோமனைப் போலவே ஏற்புடைய உயர்ந்த தன்மைகளுடன் வளர்ந்தான்.(17) தங்கமயமான சிறந்த நாணற்கொத்தில் பேரழகுடன் கிடந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, கந்தர்வர்களாலும், தவசிகளாலும் போற்றித் துதிக்கப்பட்டான்.(18) தெய்வீக இசையையும், நர்த்தனத்தையும் அறிந்தவர்களும், மிக அழகிய தன்மைகளைக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான தேவமங்கையர், அவனைப் {ஸ்கந்தனைப்} புகழ்ந்து, அவனுக்கு முன்பாக நர்த்தனம் செய்தனர்.(19) ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான கங்கை அந்தத் தேவனுக்காகக் காத்திருந்தாள். பூமாதேவியும் பேரழகை ஏற்று, அப்பிள்ளையைத் (தனது மடியில்) தாங்கினாள்.(20) தெய்வீகப் புரோகிதரான பிருஹஸ்பதி, பிறப்புக்குப் பின்பு செய்யப்படும் வழக்கமான சடங்குகளை அந்தப் பிள்ளைக்குச் செய்தார். வேதங்கள் நான்கு வடிவங்களை ஏற்று, கூப்பிய கரங்களுடன் அந்தப் பிள்ளையை அணுகின. நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலும், ஆயுதங்கள் அனைத்தும், அனைத்து வகைக் கணைகளும் அவனிடம் {ஸ்கந்தனிடம்} வந்தன.(22)
ஒரு நாள், பெருஞ்சக்தி கொண்ட அப்பிள்ளை {ஸ்கந்தன்}, தேவர்களுக்குத் தேவனான அந்த உமையின் தலைவன் {சிவன்}, பூதகணங்களின் கூட்டத்திற்கு மத்தியில், இமயத்தின் மகளுடன் {உமையுடன்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(23) மெலிந்த உடல்களைக் கொண்ட அந்தப் பூதகணங்கள், அற்புதத்தன்மைகளைக் கொண்டிருந்தன. அழகற்றவையும், அழகற்ற தன்மைகளைக் கொண்டவையுமான அவை {பூதகணங்கள்}, விகாரமான ஆபரணங்களையும் அடையாளங்களையும் அணிந்திருந்தன.(24) புலிகள், சிங்கங்கள், கரடிகள், பூனைகள் மகரங்கள் ஆகியவற்றின் முகங்களைப் போல அவற்றின் முகங்கள் இருந்தன. வேறு சிலவற்றுக்குத் தேள்கள், யானைகள், ஒட்டகங்கள், ஆந்தைகள் ஆகியவற்றைப் போன்ற முகங்களும் இருந்தன. சில கழுகுகள் மற்றும் நரிகளின் முகங்களையும் கொண்டிருந்தன.(25)
அங்கே இருந்த சிலவற்றின் முகங்கள் நாரைகள், புறாக்கள் மற்றும் ருருக்களை {ஒருவகை மான்களைப்} போலவும் இருந்தன. அவற்றில் பலவற்றுக்கு நாய்கள், முள்ளம்பன்றிகள், உடும்புகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள் ஆகியவற்றைப் போன்ற உடல்களைக் கொண்டிருந்தன. சில மலைகளுக்கு ஒப்பாக இருந்தன, சில கடல்களுக்கு ஒப்பாக இருந்தன, சில உயர்த்தப்பட்ட சக்கரங்களுடனும், கதாயுதங்களைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டும் நின்றிருந்தன. அவற்றில் சில கரிய மைக் குவியலைப் போலவும், சில வெண்மலையைப் போலவும் தெரிந்தன. ஓ ஏகாதிபதி, ஏழு மைத்ரிகளும் {சப்த மாதர்களும்} அங்கே இருந்தனர்.(26,27) சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், வசுக்கள், பித்ருக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சித்தர்கள், தானவர்கள், பறவைகள் ஆகியவையும்,(28) சுயம்புவும், போற்றுதலுக்குரியவனுமான பிரம்மன் தன் மகன்களுடனும், விஷ்ணு, சக்ரன் ஆகியோரும் என அனைவரும் மங்கா மகிமை கொண்ட அந்தப் பிள்ளையினைக் கண்டு அங்கே சென்றனர்.(29) தேவர்களில் முதன்மையானோர் பலர், நாரதரின் தலைமையிலான கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள் பலர், பிருஹஸ்பதியின் தலைமையிலான சித்தர்கள்,(30) முதன்மையானோரான அண்டத்தின் தந்தைமார், தேவர்களுக்கே தேவர்களாகக் கருதப்பட்டோர், யாமர்கள் மற்றும் தாமர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே சென்றனர்.(31)
பெரும் பலமும், பெரும் தவச் சக்தியும் கொண்ட அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, திரிசூல, பினாகைபாணியான அந்தத் தேவர்களின் தலைவனிடம் (மஹாதேவனிடம்) சென்றான்.(32) அந்தப் பிள்ளை வருவதைக் கண்ட சிவனின் மனத்தில், இமயத்தின் மகள் {உமை}, கங்கை, அக்னி ஆகியோர் எண்ணியது போலவே, ’தங்கள் நால்வரில் எவரைக் கௌரவிக்க அந்தப் பிள்ளை, அவனிடமோ, அவளிடமோ வருவான்’ என்ற எண்ணம் உண்டானது. அவர்கள் ஒவ்வொருவரும், "அவன் தன்னிடம்தான் வருவான்" என்று நினைத்தனர்.(33,34) அந்த நால்வரின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்ட அவன், தன் யோக சக்தியால் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றான்.(35) உண்மையில், போற்றுதலுக்குரிய அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்} ஒரு கணத்தில் அந்த நான்கு வடிவங்களையும் ஏற்றான். அவனுக்குப் பின்னால் நின்ற மூன்று வடிவங்ககளும் சாகன், விசாகன், நைகமேயன் என்ற பெயருடையவையாகும்.(36)
போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான அவன் {ஸ்கந்தன்} தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு (தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அந்த நால்வரை நோக்கிச் சென்றான்). ஸ்கந்தன் என்றழைக்கப்படும் அற்புத தோற்றத்தைக் கொண்டவன், ருத்திரன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.(37) விசாகன், இமயத்தின் தெய்வீக மகள் {உமை} இருந்த இடத்திற்குச் சென்றான். கார்த்திகேயனின் வாயு வடிவமான போற்றுதலுக்குரிய சாகன், அக்னியை நோக்கிச் சென்றான். நெருப்பின் காந்தியைக் கொண்ட பிள்ளையான நைகமேயன், கங்கையிடம் சென்றான்.(38) தோற்றத்தில் ஒன்றாகவே தெரிந்த இந்த நான்கு வடிவங்களும் பெரும் காந்தியுடன் கூடியவையாக இருந்தன. அந்த நான்கு வடிவங்களும் அமைதியாக (ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள) அந்த நான்கு தேவதேவிகளிடம் சென்றன. இவையாவும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன.(39) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் இந்த மிக அற்புதமான நிகழ்வைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் பேரொலியை எழுப்பினர்.(40)
அப்போது ருத்திரன், உமாதேவி, அக்னி மற்றும் கங்கை ஆகியோர் அனைவரும், அண்டத்தின் தலைவனான பெரும்பாட்டனை வணங்கி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கார்த்திகேயனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(42) "ஓ! தேவர்களின் தலைவா {ருத்திரா}, எங்கள் மகிழ்ச்சிக்காக இந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு}, அவனுக்குத் தகுந்ததும், அவனுக்கு விருப்பமானதுமான ஏதோ ஒரு வகை ஆட்சியுரிமையை வழங்குவதே உமக்குத் தகும்" என்றனர்.(43) போற்றுதலுக்குரியவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு} எதைக் கொடுப்பது என்று தனது மனத்திற்குள் நினைக்கத் தொடங்கினான். அவன் {பிரம்மன்} ஏற்கனவே, உயர் ஆன்மா தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் மற்றும், பூதங்கள், யக்ஷர்கள், பறவைகள், பாம்புகள் ஆகியற்றின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் வடிவங்களற்றோருக்கு (தேவர்களுக்கு) வழங்கிவிட்டான். எனவே, (தேவர்களுக்கு அளிக்கப்பட்ட) அந்த ஆட்சிப்பகுதி முழுமைக்கும் அந்த இளைஞனே உரிமையுடையவன் என்று கருதினான்.(45,46)
தேவர்களின் நன்மையில் எப்போதும் மனம் நிறைந்திருப்பவனான அந்தப் பெரும்பாட்டன் ஒரு கணம் சிந்தித்து, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அனைத்து உயிரினங்களின் படைத்தலைவன் என்ற நிலையை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தான்.(47) மேலும் அந்தப் பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் வடிவமற்ற பிறர் அனைவருக்கும் தலைவர்களாகக் கருதப்படும் தேவர்கள் அனைவரும் அவனுக்காக {ஸ்கந்தனுக்காகக்} காத்திருக்க வேண்டும் {ஸ்கந்தனுக்குப் பணிசெய்ய வேண்டும்} என்று ஆணையிட்டான்.(49) பிறகு பிரம்மனின் தலைமையிலான தேவர்கள் அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனை} தங்களுடன் அழைத்துக்கொண்டு ஒன்றாக இமயத்திடம் வந்தனர்.(49) அவர்கள் தேர்ந்தெடுத்த இடமானது, புனிதமானவளும், தெய்வீகமானவளும், ஆறுகளில் முதன்மையானவளும், இமயத்தில் இருந்து உதித்து வருபவளும், மூவுலகங்குளாலும் கொண்டாடப்படுபவளுமான சரஸ்வதியின் கரையிலிருக்கும் சமந்தபஞ்சகமாகும்.(50) அங்கே, தேவர்களும், கந்தர்வர்களும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதன் விளைவால் மகிழ்ச்சியான இதயங்களுடன் அனைத்து தகுதியும் கொண்ட அந்தப் புனிதமான சரஸ்வதியின் கரையில் அமர்ந்திருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(51)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 44 ல் உள்ள சுலோகங்கள் : 51------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |