Ascetic practice! | Shanti-Parva-Section-09 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : துறவில் தனக்கிருக்கும் உறுதியை வெளிக்காட்டிய யுதிஷ்டிரன்; துறவின் தன்மைகளையும், உலக இயல்புகளையும் எடுத்துரைத்தது...
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, சிறிது நேரம் உன் கவனத்தைக் குவித்து, உன் மனத்தையும், கேட்கும் திறனையும் உனக்குள் இருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்வாயாக. நீ என் வார்த்தைகளை அத்தகு மனநிலையில் கேட்டால், அவை உன் ஏற்பைப் பெறும்.(1) உலக இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, நல்லோர் செல்லும் பாதையில் நான் செல்லப் போகிறேன். உனக்காக நான், நீ பரிந்துரைக்கும் பாதையில் செல்ல மாட்டேன்.(2) எந்த மங்கலப்பாதையில் ஒருவன் தனியாக நடக்க வேண்டும் என்று நீ கேட்டால், நான் உனக்கு அதைச் சொல்வேன். நீ என்னிடம் கேட்க விரும்பவில்லை எனினும், உன்னால் கேட்கப்படாதபோதும் நான் அஃதை உனக்குச் சொல்வேன்.(3) இன்பங்களையும், உலக மனிதர்களின் நடைமுறைகளையும் கைவிட்டு, கடுந்தவங்களைச் செய்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, காட்டில் வசிக்கும் விலங்குகளுடன் நான் திரியப் போகிறேன்.(4) முறையான நேரங்களில் நெருப்பில் காணிக்கைகளை {ஆகுதிகளை} ஊற்றி, காலையிலும், மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்து, தோல்களால் என்னை மறைத்துக் கொண்டு, என் தலையில் சடாமுடி தரித்துக் கொண்டு, குறைவாக உட்கொள்ளும் உணவுமுறையால் என்னை நானே மெலியச் செய்து கொள்ளப் போகிறேன்.(5)
குளிர், காற்று, வெப்பம், பசி, தாகம், களைப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளால் நான் என் உடலை மெலியச் செய்யப் போகிறேன்.(6) காட்டில் வசித்து, இதயத்துக்கும், காதுக்கும் இனிமையாக இருக்கும் மகிழ்ச்சிகரமான பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை நான் தினமும் கேட்கப்போகிறேன்.(7) காட்டில் மலர்களால் கனக்கும் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அங்கே வளரும் பல்வேறு வகை அழகிய பொருட்களின் நறுமணத்தை நான் நுகரப் போகிறேன.(8) காட்டில் நான் சிறந்த பல ஆசிரமங்களையும் காணப் போகிறேன். எந்த ஓர் உயிரினத்திற்கும் சிறு தீங்கையும் இழைக்காமல் இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போரைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன?[1](9) ஓய்ந்த வாழ்வை நோற்று, சிந்தனைக்கு {தியானத்திற்கு} என்னை அர்ப்பணித்துக் கொண்டு, கனிந்த மற்றும் கனியாத கனிகளை உண்டு, காட்டுக் கனிகளையும், ஊற்றின் தண்ணீரையும் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளித்தும், நன்றியுடன் கூடிய பாடல்கள் பாடியும் அவர்களை நான் நிறைவு செய்வேன்.(10)
[1] "காட்டுவாசிகளுக்கே நான் எத்தீங்கையும் செய்யவில்லையெனில், உலகின் மனிதர்களுக்கு நான் தீங்கிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவே" என்று இங்கே பொருள் படும் எனக் கங்குலி விளக்குகிறார்.
காட்டு வாழ்வின் தவ விதிமுறைகளை இவ்வழிகளில் நோற்று, என் உடல் அழிவதற்காகப் பொறுமையாகக் காத்திருந்து என் நாட்களை நான் கடத்தப் போகிறேன்.(11) அல்லது, தனியாக வாழ்ந்து, எண்ணங்களை வெளியிடாமல் பேசா நோன்பிருந்து, என் தலையை முற்றாக மழித்துக் கொண்டு, ஒரே ஒரு மரத்திடம் மட்டுமே ஒவ்வொரு நாளும் இரந்து என் உணவை நான் அடையப் போகிறேன்[2].(12) என் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, கைவிடப்பட்ட வீடுகளை உறைவிடமாகக் கொண்டோ, மரத்தடிகளில் கிடந்தோ, அன்புக்குரிய அல்லது வெறுப்புக்குரிய அனைத்துப் பொருட்களைக் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(13) துன்பத்திலோ, இன்பத்திலோ ஈடுபடாமல், நிந்தனையையும், பாராட்டையும், நம்பிக்கையையும், பாசத்தையும் சமமாகக் கருதி, முரண்பட்ட இரட்டைகளைக் கடந்து, உலகப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(14) எவரிடமும் உரையாடாமல், வெளிப்படையாக ஒரு குருட்டு, செவிட்டு மூடனின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு, என் ஆன்மாவிலேயே இன்புற்று, உள்ள நிறைவுடன் நான் வாழப் போகிறேன்.(15)
[2] "துறவியரில் ஒரு வகையினர், மரங்களில் இருந்து விழும் கனிகளைச் சேகரித்துத் தங்கள் உயிரைத் தாங்கிக் கொள்கின்றனர். அவர்கள் அம்மரத்தை உயிர் கொண்ட மனிதனாகவே நினைத்துக் கொண்டு, அதன் நிழலுக்குச் சென்று, அதன் கனிகளை இரந்து கேட்கின்றனர். அத்தகு சந்தர்ப்பங்களில் விழும் கனிகளை அந்த மரத்தால் அளிக்கப்படும் பிச்சையாக {அந்த மரத்தின்} விருந்தினரான அத்துறவி கருதுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அசையும் மற்றும் அசையாத நால்வகை உயிரினங்களுக்கும் சிறு தீங்கையும் செய்யாமல், தங்கள் கடமைகளில் மனநிறைவுடன் இருக்கும் அல்லது உணர்வுகளின் ஆணைகளைப் பின்பற்றும் உயிரினங்கள் அனைத்திடமும் சமமாக நடந்து கொள்ளப் போகிறேன்.(16) நான் எவரிடமும் ஏளனமோ, முகச் சுளிப்போ செய்ய மாட்டேன். என் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, எப்போதும் மகிழ்வான முகத்துடன் நான் இருக்கப் போகிறேன்.(17) எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் சந்திக்கும் யாரிடமும் கேட்காமல், நாட்டையோ, திசையையோ கருத்தில் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.(18) நான் எங்கே செல்லப்போகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளாமலும், திரும்பிப் பாராமலும் நான் செல்லப் போகிறேன். ஆசை, கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, என் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, ஆன்மா மற்றும் உடலின் செருக்கைக் கைவிட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன்.(19) இயற்கை எப்போதும் முன்பே நடக்கிறது. எனவே, உணவும், நீரும் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். அத்தகு வாழ்வுமுறையின் வழியில் நிற்கும் முரண்பட்ட இரட்டைகளைக் குறித்து நான் சிந்திக்கப் போவதில்லை.(20)
(நான் செல்லும்) முதல் வீட்டில் சிறு அளவு தூய உணவும் கிட்டவில்லையெனில், நான் வேறு வீடுகளுக்குச் சென்று அஃதை அடைவேன். அப்படி வலம் வந்தும் அது கிட்டவில்லையெனில், என் ஆவலை நிறைவு செய்ய அடுத்தடுத்து ஏழு வீடுகளுக்குச் செல்வேன்.(21) பரபரப்பான சாலைகளைத் தவிர்த்து, வீடுகளில் புகை அடங்கியதும், அடுப்பங்கரையில் நெருப்புத் தணிந்ததும், வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் உண்டு முடிந்ததும், பிச்சைக்காரர்களும், உறவினர்களும் திரிவது நின்றதும்,(22) பிச்சையெடுக்கும் கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று, அல்லது அதிகபட்சம் ஐந்து வீடுகளில் நான் பிச்சை கேட்பேன். ஆசையின் பற்றுகளை அறுத்து நான் இவ்வுலகில் திரியப் போகிறேன்.(23) வெற்றி மற்றும் தோல்வியில் சமமான நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பெரும் தவத் தகுதியை நான் ஈட்டப் போகிறேன். உயிரில் ஆசை கொண்டவனைப் போலவோ, சாகப்போகிறவனைப் போலவோ நான் நடந்து கொள்ள மாட்டேன்.(24) உயிர் வாழும் விருப்பம், அல்லது மரணத்தில் வெறுப்பு ஆகிய எதையும் நான் வெளிக்காட்ட மாட்டேன். ஒருவன் என் ஒரு கரத்தை வெட்டினாலும், மற்றொருவன் என் மற்றொரு கரத்தை சந்தனக் குளம்பினால் பூசினாலும், அவர்களில் எவருக்கும் நான் நன்மையையோ, தீமையையோ விரும்பமாட்டேன்.(25)
ஒருவனது வாழ்வில் செய்யக்கூடிய செழிப்புக்கு உகந்த செயல்கள் அனைத்தையும் தள்ளி, கண்களைத் திறக்கவும், மூடவும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கும் மட்டுமே உணவையும், நீரையும் நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.(26) செயலில் ஒருபோதும் பற்றுக் கொள்ளாமல், எப்போதும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அசுத்தங்கள் அனைத்தில் இருந்தும் என் ஆன்மாவை நான் தூய்மையடையச் செய்யப் போகிறேன்.(27) பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, கட்டுகள் அனைத்தையும் அறுத்து, காற்றைப் போல நான் சுதந்திரமாக வாழப் போகிறேன்.(28) பற்றில் இருந்து விடுபடும் எனக்கு, என்றும் நிலைத்திருக்கும் துறவே வாழ்வாக இருக்கப் போகிறது. ஆசையாலும், அறியாமையாலும் நான் பெரும்பாவங்களை இழைத்துவிட்டேன்.(29)
மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர், மங்கல மற்றும் மங்கலமற்ற செயல்கள் ஆகிய இரண்டையும் இங்கே செய்து, காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலான உறவுகளாகத் தங்கள் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் அனைவரையும் கட்டிக் காத்து வருகின்றனர்[3].(30) அவர்களது வாழ்வின் காலம் முடிந்ததும், தங்கள் பலவீனமான உடல்களைக் கைவிட்டு, தங்கள் பாவம் நிறைந்த செயல்களின் விளைவுகளை அவர்கள் ஏற்கின்றனர். தன் செயல்களின் விளைவால் வந்த சுமையை அந்தச் செயலைச் செய்தவனே சுமக்கிறான்.(31) இவ்வாறே, செயல்களுடன் கூடிய உயிரினங்கள், தேர்ச்சக்கரத்தைப் போல, இந்த வாழ்வெனும் சக்கரத்தைத் தொடர்ச்சியாகச் சுழற்றி, இங்கே வந்து தங்கள் சக உயிரினங்களைச் சந்திக்கின்றன.(32)
[3] "மனிதனின் உடைமைகளாக இருக்கும் அனைத்தும், முந்தைய வாழ்வில் செய்த செயல்களைச் சார்ந்தே இருக்கின்றன. எனவே, மகிழ்ச்சி மற்றும் மாறுபாடு ஆகியவற்றிற்குக் காரணமாக இருக்கும் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் ஒருவரின் கடந்த காலச் செயல்களைச் சார்ந்தே {காரணங்களின் விளைவுகளாக[காரியங்களாக}} அமைகின்றனர். அவர்கள் ஏற்கனவே இருப்பில் இருக்கும் காரணங்களுக்கான விளைவுகளே {காரியங்களே} ஆவார்கள். மேலும், அவர்களது செயல்கள் அவனது அடுத்த வாழ்விலும் எதிரொலிக்கும் என்பதால், அவர்கள் விளைவுகளின் காரணங்கள் {காரியங்களின் காரணங்கள்} ஆகின்றனர் என்றும் கொள்ளப்படலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அழிவற்றதாகத் தெரிவதும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிவற்றால் பீடிக்கப்படுவதுமான மாயை நிறைந்த இவ்வுலகம் சார்ந்த வாழ்வு முறையைக் கைவிடுபவன், நிச்சயம் மகிழ்ச்சியையே அடைகிறான்.(33) மேலும், தேவர்கள் சொர்க்கத்தில் இருந்தும், பெரும் முனிவர்கள் தங்கள் மதிப்பிற்குரிய நிலைகளிலிருந்தும் விழுவார்கள் எனில், காரணங்களின் (மற்றும் காரியங்களின்) உண்மைகளை அறிந்த எவன் சொர்க்கத்தின் செழிப்பை அடைய விரும்புவான்?(34) முக்கியத்துவமற்ற மன்னர்கள், ஆட்சித்திறனின் பல்வேறு வழிகள் சம்பந்தமான (ஒப்பந்தம், கொடை என்ற பெயர்களில் அறியப்படும்) பல்வேறு செயல்களைச் செய்து, ஏதாவது சதியின் மூலம் பெரும் மன்னர்களைக் கொல்கின்றனர்.(35) இச்சூழ்நிலைகளைச் சிந்தித்ததினாலேயே இந்த ஞான அமுதம் என்னிடம் வந்திருக்கிறது. இஃதை அடைந்த நான், நிலையானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததுமான ஓர் இடத்தை (எனக்காக) விரும்புகிறேன்.(36) இத்தகு ஞானத்திலேயே எப்போதும் (என்னை ஈடுபடுத்திக் கொண்டு), இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு, வாழ்வெனும் இந்த அச்சமற்ற பாதையில் சென்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் மற்றும் வலிக்கு ஆட்படும் இந்த உடலில் இருந்து விடுபடப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(37)
சாந்திபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |