Obedient to an eunuch, we are helpless!! | Shanti-Parva-Section-10 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்...
பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா?(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)
நாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ! யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)
(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஓ! மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள்? நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)
முதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுபுறம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்?(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)
ஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)
ஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது" என்றான் {பீமசேனன்}.(28)
சாந்திபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |