Tax and security! | Shanti-Parva-Section-88 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 88)
பதிவின் சுருக்கம் : குடிமக்களிடம் வரிவாங்கும் முறை குறித்தும், நாட்டை வலுப்படுத்தும் வழிமுறை குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மன்னன் தன்னிடம் பெருஞ்செல்வம் இருந்தபோதிலும், இன்னும் அதிகமாக விரும்பினால், அவன் எவ்வாறு நடந்து கொள்ள {வரி விதிக்க} வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தகுதியை ஈட்ட விரும்பும் ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் அறிவையும், சக்தியையும் சிறந்த வகையில் பயன்படுத்தி, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(2) எந்த நடவடிக்கைகள் தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் போன்று அவர்களுக்கும் {குடிமக்களுக்கும் நன்மையை} ஏற்படுத்துமோ, அவை அனைத்தையும் அவன் தன் ஆட்சிப்பகுதிகளில் பின்பற்ற வேண்டும்.(3) வண்டானது, செடிகளில் தேனைச் சேகரிப்பதைப் போல, ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து {வரியைக்} கறக்க வேண்டும். பசுவின் மடிக்கும் காயமேற்படுத்தாமல், கன்றையும் பட்டினி போடாமல் பால் கறக்கும் ஓர் இடையனைப் போலவே அவன் செயல்பட வேண்டும்.(4) (வரி விதிக்கும் காரியங்களில்) மன்னன், கடுமையில்லாமல் குருதியை உறிஞ்சும் அட்டைப்பூச்சியைப் போலச் செயல்பட வேண்டும். பெண்புலியானது, தன் குட்டிகளைத் தூக்கிச் செல்லும்போது, தன் பற்களால் அவற்றைத் தீண்டினாலும், அவற்றைக் கொண்டு ஒருபோதும் துளைத்திடாததைப் போலவே, அவன் தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.(5) எலியானது கூரிய பற்களைக் கொண்டிருந்தாலும், உறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகள் அறியாத வண்ணம் அவற்றின் கால்களைக் கடிப்பதைப் போலவே அவன் நடந்து கொள்ள வேண்டும்.(6)
{செழிப்பில்} வளரும் குடிமகனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே எடுக்கவேண்டும், இவ்வழிமுறைகளின் மூலம் அவன் {செல்வத்தை} வெட்டுப்படச் {பகிர்ந்து கொள்ளச்} செய்ய வேண்டும். ஒரு நல்ல விழுக்காட்டை எட்டும் அளவுக்குப் படிப்படியாகத் தேவை {வரி} அதிகரிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.(7) ஓர் இளங்காளையின் மீது ஒரு மனிதன் படிப்படியாகச் சுமைகளை அதிகரிப்பதைப் போலவே, மன்னனும் தன் குடிமக்களின் மீது படிப்படியாகவே சுமைகளை அதிகரிக்க வேண்டும். அவன், கவனத்துடனும், கடுமையில்லாமலும் செயல்பட்டு, இறுதியாக அவர்களின் மீது கடிவாளங்களைப் பூட்ட வேண்டும்.(8) இவ்வாறு கடிவாளம் பூட்டப்பட்டால், அவர்கள் வசப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களைக் கீழ்ப்படிய வைக்க வெறும் கெஞ்சல்கள் மட்டும் போதாது.(9) மனிதர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, சமமாக நடந்து கொள்வது சாத்தியமில்லாதது. முதன்மையானவர்களை இணங்கச் செய்தால் பொதுமக்களும் கீழ்ப்படிவார்கள்.(10)
மன்னன், சுமைகளைச் சுமக்கப் போகும் பொதுமக்களுக்கு மத்தியில் (அவர்களது தலைவர்களுடைய அமைப்புகளின் மூலம்) ஒற்றுமையின்மையை உண்டாக்கி, தானே முன்வந்து அவர்களோடு இணக்கம் செய்த பிறகு, அவர்களிடம் கிடைப்பவற்றைக் கொண்டு அவன் மகிழ்ச்சியடைய வேண்டும்.(11) மன்னன், உரியதல்லாத காலத்திலும், சுமக்க முடியாத மனிதர்களுக்கும் ஒருபோதும் வரிவிதிக்கக் கூடாது. அவன் படிப்படியாக இணங்கச் செய்வதன் மூலமும், உரிய காலத்திலும், முறையான வடிவங்களிலும் அவற்றை விதிக்க வேண்டும்.(12) நான் அறிவிக்கும் இந்தச் சூழ்ச்சிகள் {திட்டங்கள்} சட்டப்படியான ஆட்சித்திறன் வழிமுறைகளாகும். இவை வஞ்சகம் நிறைந்த வழிமுறைகளாக அறியப்படுவதில்லை. முறையற்ற வழிகளில் குதிரைகளை வசப்படுத்தும் வழிமுறைகள் அவற்றைச் சீற்றமடையவே செய்யும்.(13) மதுவிடுதிகளும், பொது மகளிர், காமத்தரகர்கள், நடிகர்கள், சூதாடிகள், சூதாட்ட விடுதி நடத்துவோர் மற்றும் இதே வகையைச் சேர்ந்த பிறர் அனைவரும் {மன்னனால்} தடுக்கப்பட {தடைசெய்யப்பட} வேண்டும். நாட்டுக்குள்ளேயே வசித்து, குடிமக்களில் சிறந்த வர்க்கத்தினரைப் பீடித்துத் துன்புறுத்துபவர்கள் இவர்களே.(15)
எந்தத் துயரமும் இல்லாதபோது, யாரும் எதையும் யாரிமும் கேட்கக் கூடாது. மனிதர்கள் யாவரையும் குறித்த இந்தத் தடையாணையைப் பழங்காலத்தில் மனுவே விதித்திருக்காறர்[1].(16) மனிதர்கள் யாவரும் பணிசெய்யாமல் யாசித்து, அல்லது பிச்சையெடுத்து வாழ நேர்ந்தால், உலகமே அழிவடையும் என்பதில் ஐயமில்லை.(17) மன்னன் மட்டுமே அடக்கவும், தடுக்கவும் தகுந்தவனாவான். தன் குடிமக்களை (பாவத்திலிருந்து) தடுக்காத மன்னன், (அரச பாதுகாப்பின்மையின் விளைவாக) தன் மக்களால் இழைக்கப்படும் பாவத்தின் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான். இதுவே சுருதிகளின் தீர்மானமாகும்.(18) குடிமக்களின் தகுதிகளை {புண்ணியங்களைப்} போலவே மன்னன் அவர்களது பாவங்களையும் பகிர்ந்து கொள்வதால், ஓ! ஏகாதிபதி, அவன் தன் குடிமக்களில் பாவிகளை அடக்க வேண்டும்.(19) அவர்களை அடுக்குவதைப் புறக்கணிக்கும் மன்னன் தானே பாவியாகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) அவன் அவர்களது தகுதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏற்பதைப் போலவே, அவர்களது பாவங்களிலும் நான்கில் ஒரு பாகத்தை ஏற்கிறான்.(20)
[1] வங்க உரையில் இந்தச் சுலோகத்தின் முதல்வரி தவறாக இருக்கிறது. பம்பாய் உரையில் (கார்யாஞ்சிதாபடி Karyaanchidapadi என்பதற்குப் பதில்) உள்ள கிஞ்சிதனாபடி kinchidanaapadi என்பதே சரியானதாகும். இது பிச்சை, கடன், வரிகளைச் சுட்டுகிறது என உரையாசிரியர் விளக்குகிறார். வங்க மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்தச் சுலோகத்தையும், பின்வரும் சுலோகத்தையும் பொருளற்றதாகச் செய்திருக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், ""ஆபத்தில்லாத ஸமயத்தில் எவனும் எந்த மனிதனையும் எதையும் யாசிப்பது கூடாது" எனும் வியவஸ்தையானது முன்காலத்தில் மனுவினால் பிராணிகளுக்குச் செய்யப்பட்டது. யாவரும் அப்படியே ஒத்துப் பிழைக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "எந்தப் பெருங்கேடும் இல்லாத போது, எவனும் பிச்சையெடுக்கக்கூடாது. பழங்காலத்தில் மனுவே இந்த விதியை அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார். எவரும் எந்த வேலையும் செய்ய வில்லையெனில், எதனாலும் நிலைக்க முடியாது. இதனால் மூவுலகங்களும் அழிந்துவிடும் என்பதில் ஐயமில்லை" என்றிருக்கிறது.
நான் சொல்லும் பின்வரும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இவை அனைவரையும் வறுமையை அடையச் செய்யும். ஆசையின் {காமத்தின்} ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மனிதன் எந்தத் தீய செயலைத்தான் செய்ய மாட்டான்?(21) ஆசையால் {காமத்தால்} ஆளப்படும் மனிதன், வினையூக்கிகள் {போதை மருந்துகள்}, இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு, பிறரின் மனைவியரையும், செல்வத்தையும் தனதுரிமையாக்கி, (பிறரும் அதுபோலச் செய்யும்படி) ஒரு தீய முன்மாதிரியை நிறுவுகிறான்.(22) பிச்சையெடுத்து வாழாதவர்களும் துயர்மிக்கக் காலங்களில் பிச்சையெடுக்கலாம். அறம் நோற்கும் மன்னன், அச்சத்தாலன்றிக் கருணையால் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(23) உன் நாட்டில் பிச்சைக்காரர்களோ, கள்வர்களோ இருக்க வேண்டாம். கள்வர்களே பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் (நல்லோர் அல்ல). அப்படிக் கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களல்ல.(24) உன் ஆட்சிப்பகுதிகளில் பிறர் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுபவர்களும், பிறருக்கு நன்மை செய்பவர்களும் வசிக்கட்டும், பிறரை அழிப்பவர்கள் அல்ல.(25)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உரியதற்கு மேல் குடிமக்களிடம் இருந்து பெறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் உரியதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் நீ பிறரை {அவர்களுக்கு மேல்} நியமிக்க வேண்டும்.(26) உழவு, ஆநிரைவளர்த்தல், வணிகம், அதே போன்ற இயல்புடைய பிற செயல்கள் ஆகியன உழைப்புப் பகுப்பு கொள்கையின்படி பலரால் செய்யப்பட வேண்டும்[2].(27) உழவு, கால்நடை வளர்த்தல், அல்லது வணிகத்தில் ஈடுபடும் மனிதன், (கள்வர்கள் மற்றும் கொடுங்கோல் அதிகாரிகளின் விளைவாக) பாதுகாப்பில்லாத உணர்வை அடைந்தால், அதன் விளைவாக மன்னன் புகழ்க்கேட்டையே ஈட்டுவான்.(28) மன்னன் தன் குடிமக்களில் செல்வந்தர்களை எப்போதும் கௌரவித்து, அவர்களிடம், "என்னோடு சேர்ந்து நீங்களும் மக்கள் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுங்கள்" என்று சொல்ல வேண்டும்.(29) அனைத்து நாடுகளிலும் செல்வந்தர்களே அந்த நாட்டின் தோட்டமாக {அங்கமாக} இருக்கிறார்கள். ஒரு செல்வந்தனே மனிதர்களில் முதன்மையானவன் என்பதில் ஐயமில்லை[3].(30)
[2] "இங்கே சொல்லப்படும் கர்மபேதாதஹம் karmabhedatah என்பது நீலகண்டரால் வேறு வகையில் விளக்கப்படுகிறது. அந்தச் செயல்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்று அவர் விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கிருஷியையும், பசுக்காத்தலையும், வர்த்தகத்தையும் மற்றுமுள்ள இவைபோன்ற வேலைகளையும் பல மனிதர்களைக் கொண்டு நடத்தச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காரியத்திற்குக் கேடு வரும்" என்றிருக்கிறது.[3] உண்மையில் இங்கே சொல்லப்படும் அங்கம் என்பது பகுதியாகும். எனினும், இங்கே சொல்லப்படும் கருத்தானது, செல்வந்தர்களே ஒரு நாட்டின் தோட்டம் என்பதாகும். இங்கே சொல்லப்படும் ககுட் kakud என்பது காளையின் திமிலாகும். செல்வந்தனே மிக மேன்மையான நிலையை அடைகிறான் என்பதே இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ பாரத, தனமுள்ளவர்கள் ராஜ்யத்திற்குப் பெரிய அங்கமென்பது பிரஸித்தம். தனமுள்ளவன் எல்லாப் பிராணிகளுக்கும் தலைமையாயிருப்பவனென்பதிற் சந்தேகமில்லை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "செல்வந்தர்களே நாட்டின் பேரங்கம் என்று குறிப்பிடப்படுகிறார்கள். செல்வந்தர்களே மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பதில் எந்த ஐயமும் கிடையாது" என்றிருக்கிறது.
ஞானியாகவோ, துணிவுமிக்கவனாகவோ, செல்வந்தனாகவோ, செல்வாக்குடையவனாகவோ, நீதிமானாகவோ, தவங்களில் ஈடுபடுபவனாகவோ, பேச்சில் உண்மையுள்ளவனாகவோ, நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவோ, இருக்கும் ஒருவனே (சக குடிமக்களைப்) பாதுகாப்பதில் துணைபுரிகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, இக்காரணங்களுக்காகவே நீ உயிரினங்கள் அனைத்தையும் விரும்புபவனாக, உண்மை, நேர்மை, கோபமின்மை, தீங்கிழையாமை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.(32) இவ்வாறே தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, உன் கருவூலத்தைப் பெருகச் செய்து, உன் நண்பர்களை ஆதரித்து, உன் நாட்டுக்கு வலுவூட்டும் நீ, உன் நண்பர்கள், கருவூலம் மற்றும் படைகளால் ஆதரிக்கப்பட்டு, உண்மை மற்றும் நேர்மையின் பண்புகளைப் பயில வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(33)
சாந்திபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |