The nature of a kingdom and means of security! | Shanti-Parva-Section-89 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 89)
பதிவின் சுருக்கம் : நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, "உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, "இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்?" என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், "கடந்த காலத்தை மறப்பீராக" என்று சொல்ல வேண்டும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)
[1] "பிராமணர்களுக்குப் போதுமான அளவு கிடைப்பதற்கு முன் என இங்கே பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] பிராமணர்களே பிறமக்களுக்கு வழிகாட்டும் அதிகாரம் கொண்டவர்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட பிராமணன் நாட்டைவிட்டுச் செல்லும்போது, மக்கள் அவனால் ஒரு நண்பனையும், ஆசிரியரையும், வழிகாட்டியும் இழக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "நான்காம் சுலோகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, மன்னன் அவனது நிலைக்கு எதிராக அறிவுரைகூற வேண்டும். இதுவும் போதுமானதாக இல்லாமல் முந்தைய புறக்கணிப்பைச் சொல்லி அவன் செல்ல விரும்பினால், மன்னன் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், உண்மையில் அவனைப் பராமரித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அவனுக்கு ஒதுக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன் மேலும் அவனிடம், "ஓ! பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)
[4] "மூலத்தின் கட்டுமானம் நீள்வட்டமாக இருக்கிறது. முதல் வரியில் உள்ள எதாத் etat என்பதற்கான மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டம் வரியைச் சொல்லும்போது, இரண்டாம் பாதியே முதலில் வர வேண்டும். வழக்கம் போலவே பர்த்துவான் பதிப்புப் பிழையுள்ளதாக இருக்கிறது. கே.பி.சிங்கினுடைய பதிப்பும் முழுமையடையாமல் துல்லியமற்றதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விதமில்லாமல் ஜீவனத்திற்கும் மேலான போகம் வேண்டுமென்று நகரைவிடுவானாகில், ’ஓ பிராம்மண, முதன்மையான இப்போகவிருப்பத்தை மறக்க வேண்டும்’ என்று தெரிவிக்க வேண்டும். ஓ கௌந்தேய, இது சாஸ்வதமான தர்மமென்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். நான் இதை நம்பவில்லை. (பிராம்மணன்) போகங்களை வேண்டினால் அவைகளாலும் உபசரிக்கத்தக்கவன். ஜீவனமில்லாமற் போனால் அதையும் அவனுக்குச் செய்து கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.[5] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் தஸ்யுஸ் என்பது உண்மையில் கள்வர்களைக் குறிக்கும்; இங்கே சமூகம் மற்றும் சமூகஒழுங்கின் எதிரிகள் எனப் பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதவித்தையானது மேலுலகத்திற்கும் ஸாதனமாகும்; அது பிராணிகளைப் பரிசுத்தமாகவுஞ்செய்யும். அவ்வித்தையானது கீழே விழுங்காலத்தில் எவர்கள் அதற்கு விரோதியான திருடர்களாயிருக்கிறார்களோ அவர்களைக் கொல்ல வேண்டிப் பிரம்மதேவர் இவ்வுலகில் க்ஷத்திரியனைப் படைத்தார்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன? தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன? தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன? தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)
[6] சில உரைகளில் போத்தியார்யம் Boddhyaryam என்பதற்கு யோத்தியார்யம் Yoddhyaryam என்றும் and யுஞ்சித Yunjita என்பதற்குப் பதில் துஞ்சிதா thunjita என்றும் இருக்கிறது.
மன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ! ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ! பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்" என்றார் {பீஷ்மர்}.(19)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு?" என்று கேட்டான்.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ! யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ! மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ! பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ! பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {பீஷ்மர்}.(26)
[7] "அதாவது, பயன்தரும் தொழிலின் நிமித்தமாக இவ்வாறு தனியாகச் செல்வோருக்குக் கடும் வரிகளை விதிக்கக்கூடாது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] "சரியான சொல் பரந்தி Bharanti என்பதாகும். தரந்தி Taranti என்பதும் அதே பொருளையே தரும். இரண்டாம் வரியைப் பொருள் கொள்வதில் கே.பி.சிங்கா பிழை செய்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |