Campaka! | Shanti-Parva-Section-176 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 01)
பதிவின் சுருக்கம் : இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்...
Campaka! | Shanti-Parva-Section-176 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)
[1] "முந்தைய பகுதியில், அல்லது பாடத்தில் ஒருவன் இளைஞனாக இருந்தாலும் மோக்ஷத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கலாம் என்று சொல்லப்பட்டது. யுதிஷ்டிரன், (வேள்வி செய்வதற்கு மிக அவசியமான) செல்வம் அந்த அறத்தை {மோக்ஷதர்மத்தை} அடைய தேவைப்படுமா என்று விசாரிக்கிறான். செல்வம் அவசியம் என்றால் ஏழைகளால் அவ்வறத்தை அடைய முடியாது. எனவே செல்வந்தனுக்கும், ஏழைக்கும் இன்பமும் துன்பமும் வரும் வழியைக் குறித்து விசாரிக்கிறான். இதுவே யுதிஷ்டிரனுடைய கேள்வியின் நோக்கம் என இங்கே உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)
[2] "இந்த ஸ்லோகங்கள் பழைமையானவை என்று சொல்லப்படுகின்றன. அதன்படி நீலகண்டர், அவற்றைத் தன்னிடம் சொன்னது சம்பாகர் அல்ல, வேறு ஒருவர் என்று ஊகிக்கிறார். நான் உரையாசிரியரையே பின்பற்றுகிறேன்; ஆனால் இந்தப் பகுதியின் இறுதி ஸ்லோகத்தின் இலக்கணம், அவரை {நீலகண்டரை} ஆதரிப்பதற்காகத் திரிக்கப்பட்டிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா?(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)
செல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்?(15)
செல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, "நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது" என்று அவனை நினைக்க வைக்கிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)
அத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக" என்றார்.(22)
சம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்" {என்றார் பீஷ்மர்}[3].(23)
[3] [2]ம் அடிக்குறிப்பைக் காண்க. கும்பகோணம் பதிப்பில், "இந்த இதிஹாஸமானது முன்காலத்தில் அஸ்தினாபுரத்தில் சம்பாகரென்னும் பிராம்மணரால் எனக்குக் கூறப்பட்டது. ஆகையால் (பொருள்களை விடுவதென்னும்) த்யாகமானது உத்தமமென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சம்யாகர் என்ன சொன்னாரோ, அவை பழங்காலத்தில் ஹஸ்தினாபுரத்தில் அந்தப் பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 176ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |