Manki! | Shanti-Parva-Section-177 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 04)
பதிவின் சுருக்கம் : ஒரு மனிதன் ஏழையாக இருந்தால் அவன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; தன் காளைகளை இழந்த மங்கியின் அவதானிப்புகள்; கவலைகள் நிறைந்ததே இன்பம் என்ற மங்கியின் அறிவுரையையும், அவர் அழிவின்மையை அடைந்த தகவலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Manki! | Shanti-Parva-Section-177 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(ஈகை மற்றும் வேள்விச்) செயல்களை நிறைவேற்ற விரும்பி, (தேவையான) செல்வத்தை அடையத் தவறும் எந்த மனிதனும், அவனை மூழ்கச் செய்யும் செல்வ தாகத்தை அடக்கவும், இன்பத்தை அடையவும் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(இன்பம், துன்பம், மதிப்பு, அவமதிப்பு போன்ற) அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனும், (பூமிசார்ந்த விருப்பங்களை நிறைவு செய்ய) ஒருபோதும் முயலாதவனும், பேச்சில் வாய்மை பயில்பவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனும், செயல்பாட்டில் {காரியத்தில்} விருப்பம் இல்லாதவனுமான ஒருவனே மகிழ்ச்சியான மனிதனாவான்.(2) இந்த ஐந்தும் முற்றான அமைதி, அல்லது விடுதலைக்கான {முக்தி /மோக்ஷத்துக்கான} வழிமுறைகள் எனப் பழங்காலத்தவர் சொல்லியிருக்கின்றனர். இவையே சொர்க்கமென்று அழைக்கப்படுகின்றன. இவையே அறம். இவையே பேரின்பம்.(3) பற்றுகளில் இருந்து விடுபட்ட போதும் மங்கியால் பாடப்பட்ட பழைய கதை ஒன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(4)
செல்வத்தை விரும்பியவரான மங்கி, ஏமாற்றங்களால் தாம் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவதைக் கண்டார். இறுதியில் சிறிதாக எஞ்சியிருந்த தன் உடைமையைக் கொண்டு, இளம் காளைகள் இரண்டை (உழவில் ஈடுபடுத்த) பயிற்றுவிப்பதற்காக நுகத்தடியுடன் சேர்த்து வாங்கினார்.(5) ஒரு நாள் நுகத்தில் பூட்டப்பட்ட இரு காளைகளும், பயிற்சிக்காக (வயலுக்குக்) கொண்டு செல்லப்பட்டன. சாலையில் படுத்திருக்கும் ஓர் ஒட்டகத்தைக் கண்டு மிரண்ட அந்த விங்குகள் திடீரென அந்த ஒட்டகத்தை நோக்கி ஓடி,(6) அதன் கழுத்தின் மீது விழுந்தன. காளைகள் தன் கழுத்தில் விழுந்ததைக் கண்டு சினந்த ஒட்டகம், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற அந்த இரண்டு உயிரினங்களையும் சுமந்து கொண்டே, விரைவான எட்டுகளை வைத்து, பெரும் வேகத்துடன் ஓடியது.(7)
தன் காளைகள் இரண்டும் அந்தப் பலமிக்க ஒட்டகத்தால் சுமந்து செல்லப்படுவதைக் கண்டும், அவை மரணத்தருவாயில் இருப்பதைப் பார்த்தும் மங்கி, "செல்வமானது விதியால் விதிக்கப்படவில்லையெனில், கவனத்துடன் முயன்று, சாதிக்கத் தேவைப்படும் திறனும், நம்பிக்கையும் உள்ள ஒரு புத்திசாலியால் கூட அஃதை {செல்வத்தை} ஒருபோதும் அடையமுடியாது.(9) செல்வத்தை ஈட்டுவதில் அர்ப்பணிப்புடன் கூடிய நான், இதற்கு முன்பே பல்வேறு வழிமுறைகளில் முயன்றுவிட்டேன். நான் கொண்ட உடைமைக்கு விதியால் கொண்டுவரப்பட்ட தீப்பேற்றைப் பார்.(10) அந்த ஒட்டகம் சமமற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்பதால் என் காளைகள் விழுவதும் எழுவதுமாகச் சுமந்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வு ஒரு விபத்தாகத் தெரிகிறது[1].(11) ஐயோ, என் அன்புக்குரிய காளைகள் இரண்டும் அந்த ஒட்டகத்தின் கழுத்தில் இரண்டு ரத்தினங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது விதியின் விளைவு மட்டுமே. {சூழ்நிலைக்கேற்ப மாறும்} வாய்ப்புக்குரியவற்றில் முயற்சி பயனற்றதாகும்.(12) அல்லது, முயற்சி போன்ற (விளைவுகளை உண்டாக்கும் காரணியான) ஏதாவது ஒன்றின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஆழ்ந்த தேடலின் அதன் அடியில் விதி இருப்பது கண்டடையப்படலாம்[2].(13) எனவே இன்பத்தை விரும்பும் மனிதன் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். பற்றுகள் ஏதும் இல்லாமல், செல்வமீட்டும் ஆசையேதும் இல்லாமல் உள்ள மனிதன் மகிழ்ச்சியாக உறங்கலாம்.(14)
[1] காகதாலியம் Kakataliyam என்பது, "காகம், பழம்பழம் கதையைப் போல" என்ற பொருளைக் கொண்டது. ஒரு காகம் பனைமரத்தில் அமர்ந்தபோது, (கனிந்திருந்த) ஒரு பழம் கீழே விழுந்தது. அந்தக் கனி அதன் கனிந்த தன்மையால் விழுந்தது. காகம் பனைமரத்தில் அமர்ந்ததால்தான் அந்தக் கனி விழுந்தது என்று ஏற்பது பிழையாகும். காகம் வந்து அமர்ந்தது ஒரு விபத்து. எனினும், காரணங்களைக் கண்டுபிடிக்கும் மனிதர்கள், விபத்துகளையே காரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அத்தகைய மனிதர்கள், "காகம் மற்றும் பனம்பழம் சம்பந்தமான மூட நம்பிக்கையால்" வஞ்சிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] முயற்சி வெற்றியடைவது சூழ்நிலைகளைச் சார்ந்ததாகும். சூழ்நிலைகளின் சேர்க்கையே விதியாகும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பலாத்காரமாகச் செய்வதில் பௌருஷமானது பயனுள்ளதே அன்று. பௌருஷமென்பது ஒரு ஸமயத்தில் இருக்கக்கூடுமானாலும் அதுவும் விசாரிக்கப்பட்டால் தெய்வத்தை அடுத்ததாகவே இருக்கும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இது நிச்சயம் விதியால் ஏற்பட்டது, ஆண்மையென்பது இருப்பில் இல்லை என்பதை நான் அறிவேன். ஆண்மையென்ற பெயரில் ஏதாவது இருந்தால், அஃதை ஒருவன் ஆராயப் புகுந்தால், அதுவும் விதியைச் சார்ந்ததே என்பதைக் கண்டடைவான்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் பௌருஷம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் ஆண்மை என்றும் குறிப்பிடப்படுவதைக் கங்குலி முயற்சி என்று விளக்கியிருக்கிறார்.
சுகர், அனைத்தையும் துறந்து, தன் தந்தையின் {வியாசரின்} வசிப்பிடத்தில் இருந்து பெருங்காட்டுக்குச் சென்ற போது[3],(15) "தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தவன், தன் விருப்பங்களைக் கைவிட்டவன் ஆகிய இருவருக்கிடையில் அனைத்தையும் துறந்தவனான பின்னவனே அனைத்தின் கனிகளையும் அடைந்த முன்னவனைக் காட்டிலும் மேன்மையானவன்.(16) எவராலும் ஆசையின் எல்லையை அடைய முடியாது. அறிவும், தீர்மானமும் அற்ற ஒருவன் மட்டுமே, தன் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வத்தை உணர்வான்" என்றார்.(17)
[3] "சாந்தி பர்வத்தின் பல வாக்கியங்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டவையே என்ற நம்பிக்கையைத் தடுப்பது கடினம். சுகர் வியாசரின் மகன் ஆவார். இந்த வாக்கியத்தின் உண்மை எழுத்தாளர் வியாசராக இருந்தால், சுகரின் (சுகதேவ கோஸ்வாமி என்ற அழைக்கப்பட்டவரின்} மொழியை மேற்கோள் காட்டுவது சந்தேகத்திற்குரியது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். நாம் இப்போதும் படித்துக் கொண்டிருப்பது நைமிசாரண்ய வனத்தில் சூத முனிவரான சௌதி சொன்ன "மஹாபாரதம்" ஆகும். வியாசரின் சீடர் வைசம்பாயனர், ஜனமேஜயனின் நாக வேள்வியில் உரைத்த மஹாபாரதத்தையே, சௌதி நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சொன்னார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
செயல்படும் விருப்பம் ஒவ்வொன்றையும் தவிர்ப்பாயாக. ஓ! காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை?(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ! செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ! செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய்?(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ! ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ! ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை அனைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ! ஆசையே, நான் உன் வேரை அறிவேன். நீ விருப்பத்தில் இருந்து உதிக்கிறாய்[5]. எனவே, நான் விருப்பத்தைத் தவிர்ப்பேன். அப்போது நீ வேர்களோடு அழிக்கப்படுவாய்.(25)
[4] "உனக்கு நன்மை செய்யும் நோக்கில், நான் பற்றுகள் அனைத்திலும் இருந்து என்னை விடுவித்துக் கொடு அமைதியான அருள்நிலையை அனுபவிக்கப் போகிறேன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] இங்கே ஆசையின் கோட்பாடு தலைகீழாகத் தெரிகிறது. ஆசை என்பது எதையும் விரும்புவதே ஆகும். அதன் நிறைவு நாடப்படும்போது, அது மனோ உறுதி, அல்லது மனோ விருப்பம் என்ற வடிவத்தை அடைகிறது. எனினும், குறிப்பிட்ட பொருட்களில் ஆசை என்பது காமமாகக் கொள்ளப்பட்டால், ஒருவேளை, விருப்பம் என்பது அதன் அடித்தளமாகக் கருதப்படலாம், குறைந்தது துன்பங்கள் நேர்கையில் மட்டுமாவது அவ்வாறு கொள்ளப்படலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
செல்வத்திற்கான ஆசை ஒருபோதும் மகிழ்ச்சியால் நிறைந்ததல்ல. {செல்வம்} அடையப்பட்டால், அஃதை {செல்வத்தை} அடைந்தவன் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறான். அடைந்த பிறகு தொலைத்தால், அது மரணம் என்றே உணரப்படுகிறது. இறுதியாக, {செல்வத்தை} அடைவது என்பதே உறுதியற்ற ஒன்றாகும்.(26) ஒருவன் சரணடைவதாலேயே செல்வத்தை அடையமுடியாது. இதைவிட வேறு எது வலிநிறைந்ததாக இருக்க முடியும்? அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ! ஆசையே, என்னைவிட்டு அகல்வாயாக. (ஐந்து) பூதங்களின் தொகையான {ஐம்பூதங்களாலான} என் உடலைப் புகலிடமாகக் கொண்ட அந்த ஆசை விரும்பிய இடத்திற்குச் சென்று அது விரும்பியவாறு மகிழ்ச்சியாக வாழட்டும்[6].(29) ஆன்மா இல்லாதவர்களே, நீங்கள் ஆசை மற்றும் காமத்தைப் பின்தொடர்வதால் எனக்கு உங்களிடம் இன்பமில்லை. உங்கள் அனைவரையும் கைவிட்டு, நற்பண்பின் குணத்திடம் {சத்வ குணத்தை} என் புகலிடமாகக் கொள்ளப் போகிறேன்[7].(30)
[6] "இதற்கான பம்பாய் உரை பிழையானதென நினைக்கிறேன். பூதகிராமகம் Bhutagramak என்பது பூதகிராமம் Bhutagramam என்றிருக்க வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் யா Yah என்பது காமமாகும். ஆசையே விரும்பிய இடத்திற்குச் செல்ல வற்புறுத்தப்படுகிறது. இவ்வாறு பூதங்கள் வற்புறுத்தப்பட்டால், பேசுபவர் மரணத்தை விரும்புகிறார் என்று பொருள். இஃது இந்த வாக்கியத்தின் அமைப்புக்கு ஒவ்வாததாக இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "காமமே, என்னை விடு. என்னுடைய சரீரத்தை அடைந்திருக்கிற (பிருதிவி முதலிய) பூதக்கூட்டமானது இஷ்டம் போல இச்சரீரத்திலிருந்து போகட்டும்; அல்லது ஸுகம்போல இதில் வஸிக்கட்டும்" என்றிருக்கிறது.[7] "பன்மையான யுஷ்மாஷு Yusmashu பயன்படுத்தப்பட்டிருப்பது, முதல் பார்வையில் பூதங்கள் என்ற பொருளைத் தரும். எனினும், அது ராஜஸ, தாமஸ குணங்களில் காணப்படும் பண்புகள் அனைத்தையும் குறிக்கிறது என்பது வெளிப்படை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "காமத்தையும், லோபத்தையும் அனுஸரித்தவைகளும், இச்சரீரத்தில் உள்ளவைகளுமான உங்களிடம் எனக்குப் பிரியமில்லை. ஆகையால், நான் உங்களெல்லாரையும் தள்ளிவிட்டு ஸத்வகுணத்தையே அடையப்போகிறேன்" என்றிருக்கிறது.
என் உடல் மற்றும் மனத்திலேயே அனைத்து உயிரினங்களையும் கண்டு, யோகத்தில் என் அறிவையும், நல்லோரின் அறிவுரைகளில் என் வாழ்வையும், பிரம்மத்தில் ஆன்மாவையும் அர்ப்பணிக்கப்போகிறேன்.(31) எந்தப் பற்றும் இல்லாமல், எவ்வகை துன்பங்களும் இல்லாமல், இத்தகைய கவலைகளில் என்னை மீண்டும் நீ மூழ்கடிக்காதவாறு நான் இவ்வுலகில் இன்பமாகத் திரியப் போகிறேன்[8].(32) ஓ! ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ! ஆசையே, நீயே தாகத்தையும், துயரத்தையும், களைப்பையும், உலைவையும் உண்டாக்குகிறாய்.(33) செல்வ இழப்பில் ஒருவன் உணரும் துயரமானது, வேறு எந்தச் சூழ்நிலையில் உணரப்படுவதைவிடக் கூரியதாகவும், பெரியதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன். செல்வம் இழந்தவனை உற்றாரும், நண்பர்களும் அவமதிக்கின்றனர்.(34) பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான அவமதிப்புகளும், அதற்கு மேலான வலிநிறைந்த குற்றங்கள் பலவும் உடைமையிலேயே உள்ளன. மறுபுறம், செல்வத்தில் வசிக்கும் சிறு மகிழ்ச்சியும் கூட வலி மற்றும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது[9].(35)
[8] "அனைத்து உயிரினங்களையும் என் உடல் மற்றும் மனத்தில் காண்பது என்பது, அனைத்து உயிரினங்களிலும் தன்னைக் கண்டு, அவற்றுக்கும் தனக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் உணராதிருப்பதாகும்; வேறு சொற்களில், உலகளாவிய அன்புக் கொள்கையைப் பயின்று, போதிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] இந்த இரண்டு வரிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. உடைமையில் துன்பம் இருந்தாலும், அந்தச் செல்வாக்கில் உண்மையில் எந்த மகிழ்ச்சியும் கிடையாது. எனவே, நீலகண்டர், முதல் வரியின் இறுதி வார்த்தையை அதனே Adhane என்று கொள்ளாமல் தனே dhane என்றும் அர்ஷம் Arsha என்பதைச் சந்தி Sandhi என்றும் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பொருளில்லாதவனுக்குப் பலவாயிரம் அவமதிப்புக்களாலுண்டாகும் மிகக் கஷ்டமான தோஷங்களுண்டு. பொருளில் சிறிது ஸுகபாகமிருப்பதும் துக்கங்களாலுண்டுபண்ணப்படுகிறது" என்றிருக்கிறது.
செல்வம்படைத்தவன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கள்வர்களால் கொல்லப்படுகிறான், அல்லது பல்வேறு வகைக் கடுமைகளால் அவன் பீடிக்கப்படுகிறான், அல்லது எப்போதும் அச்சத்தால் நிறைந்திருக்கிறான்.(36) நீண்ட காலத்திற்குப் பிறகு, இறுதியாக, செல்வத்தில் விருப்பம் என்பது துன்பத்தால் நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். ஓ! ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ! ஆசையே, இந்த நாள் முதல் நான் உன்னுடன் வாழ இயலவனாகிறேன்.(38) என் உடைமையை இழந்ததால் முதலில் துன்பமடைந்த நான், இப்போது பற்றுகளில் இருந்து முற்றாக விடுபடுவதில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன். உன்னையும், உன்னைத் தொடர்ந்து வருபவற்றையும் நான் இந்தக் கணமுதல் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.(39) உன் காரியத்தில் இந்தப் பெருந்துன்பத்தை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். (இப்போது) நுண்ணறிவற்றவனாக நான் என்னைக் கருதவில்லை. என் உடைமையை இழந்ததன் விளைவால் துறவைப் பின்பற்றப் போகும் நான், அனைத்து வகை நோயிலிருந்தும் விடுபட்டவனாவேன்.(40)
ஓ! ஆசையே, என் இதயத்தில் இருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் உன்னோடு சேர்த்து நான் கைவிடப்போகிறேன். நீ மீண்டும் என்னுடன் வசிக்கமாட்டாய், அல்லது என்னோடு விளையாட மாட்டாய்.(41) என்னைக் குறித்துத் தவறாகப் பேசுவோரையோ, அவதூறாகப் பேசுவோரையோ நான் மன்னிப்பேன். தீங்கிழைக்கப்படும்போதும் நான் தீங்கிழைக்க மாட்டேன். வெறுப்புணர்வால் எனக்கு ஏற்பில்லாத வார்த்தைகளை யாரும் பேசினாலும், அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்து, ஏற்புடைய வார்த்தைகளிலேயே நான் அவனிடம் பேசுவேன். நிறைவான இதயத்துடனும், சுகமான புலன்களுடனும் என்னால் அடையப்படுபவற்றைக் கொண்டு மட்டுமே நான் எப்போதும் வாழப்போகிறேன்.(42) என் எதிரியான உன்னால் ஊக்குவிக்கப்படும் எந்த விருப்பத்திலும் நான் பங்கேற்கமாட்டேன். பற்றிலிருந்து விடுதலை, ஆசை துறப்பு, மனநிறைவு, அமைதி, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, உலகளாவிய கருணை ஆகிய பண்புகள் இப்போது என்னிடம் வந்திருக்கின்றன.(43) எனவே, ஆசை, காமம், தாகம், துயர்மிக்கநிலை ஆகியன என்னைத் தவிர்க்கட்டும். நான் இப்போது நற்பண்பின் பாதையைப் பின்பற்றுகிறேன்.(44) ஆசை, காமம் ஆகியவற்றைக் கைவிட்ட எனக்கு இப்போது மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது. காமத்தின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் இனி வசப்படாமல், தூய்மையற்ற ஆன்மா கொண்ட ஒரு மனிதனைப் போல இனி துன்பத்தில் உழலமாட்டேன்.(45)
ஒருவன் கைவிடப்போகும் ஆசைகளின் அளவின்படி அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான். உண்மையில், ஆசையின் ஆதிக்கத்திற்கு வசப்படுபவன் எப்போதும் துன்பத்திலேயே உழல்கிறான்.(46) ஆசை தொடர்பான எந்த விருப்பங்களையெல்லாம் ஒரு மனிதன் கைவிடுகிறானோ, அவை அனைத்தும் ஆசையின் பண்பைக் கொண்டவை {ரஜோ குணத்தைச் சார்ந்தவை}. கவலை, நாணமின்மை, நிறைவின்மை ஆகிய அனைத்தும் ஆசை மற்றும் செல்வத்தில் இருந்தே எழுகின்றன.(47) கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கும் மனிதனைப் போல நான் பிரம்மத்திற்குள் இப்போது நுழைகிறேன். செயலை நான் தவிர்க்கிறேன். துயரத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். என்னிடம் இப்போது தூய மகிழ்ச்சி வருகிறது.(48) ஆசையின் நிறைவின் மூலம் விளையும் இன்பநிலை, அல்லது, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் தூய இன்ப நிலை ஆகியவை, தாக வகைகள் அனைத்தையும் கைவிடுவதால் எழும் பேரின்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாதவையாகும்.(49) ஆசையின் கொள்கையைக் கொன்று, கசந்த எதிரியான உடலை ஏழின் தொகையாக்கி, பிரம்மம் எனும் அழிவில்லா நகரத்திற்குள் நுழைந்து ஒரு மன்னனைப் போல நான் என் நாட்களைக் கடத்தப்போகிறேன்" என்றார் {மங்கி}[10].(50)
[10] கும்பகோணம் பதிப்பில், "நான் உத்தமமான சத்ரு போன்றதும் ஸ்தூல தேஹத்திலிருந்து ஏழாவதுமான காமத்தைக் கொன்று கொல்ல முடியாத ப்ரம்மமென்னும் பட்டணத்தையடைந்து அரசன் போல வஸிக்கிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம், ஸானந்தம் மஹத்தத்வம் என்று ஏழு; இந்த மஹத்தத்வமே காமமென்று சொல்லப்படும்" என்றிருக்கிறது.
இத்தகைய நுண்ணறிவைச் சார்ந்த மங்கி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உயர் இன்ப நிலையின் வசிப்பிடமான பிரம்மத்தை அடைந்தார்.(51) உண்மையில், மங்கி தன் காளைகள் இரண்டை இழந்ததன் விளைவால் அழிவின்மையை அடைந்தார். உண்மையில், அவர் ஆசையின் வேர்களை அறுத்ததால், அதன் மூலமே அவர் அந்த உயர்ந்த பேரின்பத்தை அடைந்தார்" என்றார் {பீஷ்மர்}.(52)
சாந்திபர்வம் பகுதி – 177ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |