Vodhya! | Shanti-Parva-Section-178 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 05)
பதிவின் சுருக்கம் : மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்...
Vodhya! | Shanti-Parva-Section-178 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, "என் செல்வம் அளவற்றது. அதே வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை" என்று சொன்னான் {ஜனகன்}.(2)
பற்றிலிருந்து விடுபடுவது என்ற இது தொடர்பாகவே போத்யரின் உரையும் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக. ஒருகாலத்தில் நகுஷனின் அரச மகன் (யயாதி), ஆசையைக் கைவிட்டதன் விளைவாக ஆன்ம அமைதியை அடைந்தவரும், சாத்திரங்களை அணுக்கமாக அறிந்தவருமான முனிவர் போத்யரிடம் கேள்வி கேட்டான்.(4)
அந்த ஏகாதிபதி {யயாதி}, "ஓ! பெரும் ஞானியே, அமைதி குறித்து எனக்கு அறிவுரைகளை வழங்குவீராக. செயல்பாடுகள் எவற்றிலும் ஈடுபடமாலும், ஆன்ம அமைதியுடனும் எந்த அறிவைச் சார்ந்து நீர் இவ்வுலகில் திரிகிறீர்?" என்று கேடாடன்.(5)
போத்யர் {யயாதியிடம்}, "நான் பிறரின் அறிவுரைகளின்படியே என்னை நடத்திக் கொள்கிறேன், ஆனால் பிறருக்கு ஒருபோதும் நான் அறிவுரைகள் வழங்குவது கிடையாது. எனினும், (எதைக் கொண்டு என் நடத்தை கட்டமைக்கப்பட்டுள்ளதோ அந்த) அறிவுரைகளின் குறியீடுகளைக் குறிப்பிடுகிறேன். அதன் கருத்தை நீ தானாக அறிந்து கொள்வாயாக.(6) பிங்களை, அன்றில்[1], பாம்பு, காட்டின் வண்டுகள், (பின்வரும் கதையில் உள்ள) கணைகள் செய்பவன், (பின்வரும் கதையில் உள்ள) கன்னிகை ஆகிய இந்த ஆறுபேரும் எனக்கு ஆசான்களாவர்" என்றார் {போத்யர்}.(7)
[1] பிங்களை என்பவள் சாந்தி பர்வம் 174ல் குறிப்பிடப்படும் வேசி. இங்கே குறிப்பிடப்படும் அன்றில், கும்பகோணம் பதிப்பில் அணில் என்று குறிப்பிடப்படுகிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (இதயத்தைக் கலங்கடிப்பதில்) நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மிகப் பலமிக்கதாகும். நம்பிக்கையிலிருந்து {எதிர்பார்ப்பிலிருந்து} விடுபடுவதே உயர்ந்த இன்பநிலையாகும். எதிர்பார்ப்பில்லாத அளவுக்கு நம்பிக்கையைக் குறித்த பிங்களை அமைதியாக உறங்கினாள்.(8) அலகில் இறைச்சியைக் கொண்டிருந்த அன்றிலைக் கண்டு பிற பறவைகள், வேறு இறைச்சி எதையும் காணாமல், அதைத் தாக்கி அழித்தன. ஒரு குறிப்பிட்ட அன்றிலானது, இறைச்சியை மொத்தமாகத் தவிர்த்து இன்பத்தை அடைந்தது[2].(9) தனக்கென வீட்டைக் கட்டிக் கொள்வது ஒருவனுக்குத் துன்பத்தை உண்டாக்குமேயன்றி இன்பத்தையல்ல. மற்றொரு உயிரினத்தின் வசிப்பிடத்தைத் தனதாக எடுத்துக் கொள்ளும் பாம்பு இன்பமாக வாழ்கிறது.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "மாம்ஸத்துடன் கூடிய அணிலைக் கண்டு மாம்ஸமில்லாதவைகளை அடிக்கத் தொடங்கவும் அந்த மாம்ஸத்தைவிட்டதால் அணிலானது ஸுகமாக வளர்ந்தது" என்றிருக்கிறது.
பிச்சையெடுக்கும் நிலையை அடைந்த தவசிகள், எந்த உயிரினத்திற்கும் தீங்கேற்படுத்தாமல் காட்டில் உள்ள வண்டுகளைப் போல மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.(11) கணைகளைச் செய்யும் ஒருவன் தன் அருகே மன்னன் கடந்து செல்வதையும் கவனிக்காத அளவுக்குத் தன் பணியில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டு வந்தான்.(12) பலர் ஒன்றுகூடியிருக்கும்போது, சச்சரவுகள் உண்டாகும். இருவர் ஒன்றாக வசித்தால், நிச்சயம் உரையாடுவார்கள். எனினும், ஒரு கதையின் வரும் கன்னிகையின் மணிக்கட்டில் உள்ள {ஒற்றை} சங்கு வளையலை {சங்குகளாலான வளையலைப்} போல நான் தனியாகத் திரிந்து வருகிறேன்" என்றார் {பீஷ்மர்}[3].(13)
[3] "இந்தக் கதை மிகப் பழமையானது; இது பாகவதத்தில் முழுமையாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், தன் தந்தையின் இல்லத்தில் வசித்து வந்த ஒரு கன்னிகை, எண்ணற்ற பிராமணர்களுக்கு ரகசியமாக உணவளிக்க விரும்பினாள். களஞ்சியத்தில் இருந்து தானியத்தை எடுக்கும்போது, சங்குகளாலான அவளது வளையல்கள் குலுங்கத்தொடங்கின. அவ்வொலியால் கண்டுபிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவள் ஒரு கைக்கு ஒரே ஒரு வளையலை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய அனைத்தையும் உடைத்துவிட்டாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 178ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |