Ajagara vow! | Shanti-Parva-Section-179 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 06)
பதிவின் சுருக்கம் : இவ்வுலகில் வெற்றியடைவதற்குரிய ஒழுக்கத்தையும், சிறந்த கதியை அடைய மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், ஆஜகர முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; தவிர்க்கப்பட முடியாத மரணத்தைக் கருத்தில் கொண்டு உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் பாகுபாடில்லாமல் இருந்த ஆஜகரர்...
Ajagara vow! | Shanti-Parva-Section-179 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மனிதர்களின் நடத்தைகளை அறிந்தவரே, எந்த நடத்தையின் மூலம் ஒரு மனிதன் துயரத்தில் இருந்து விடுபட்டு இவ்வுலகில் வெற்றியடைவான் என்பதை எனக்குச் சொல்வீராக. சிறந்த கதியை அடைவதற்கு ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு செயல்பட வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் உள்ளதும், பிரஹலாதனுக்கும், தவசி ஆஜகரருக்கும்[1] இடையில் நடந்ததுமான உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் பிரஹலாதன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தூய அமைதியான ஆன்மா கொண்டவருமான, திரிந்து கொண்டே இருப்பவருமான ஒரு பிராமணரிடம் கேள்வி கேட்டான்.(3)
[1] கும்பகோணம் பதிப்பில் இவர் அஜகர விரதமுள்ள முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார்.
பிரஹலாதன் {தவசி ஆஜகரிடம்}, "ஆசையில் இருந்து விடுபட்டு, தூய ஆன்மாவுடன், பணிவு, தற்கட்டுப்பாடு, செயல்பாட்டில் விருப்பமின்மை, வன்மத்தில் இருந்து விடுதலை, ஏற்புடைய பேச்சு ஆகியவற்றுடனும், கண்ணியம், நுண்ணறிவு மற்றும் ஞானத்துடனும் (எளிமையாக) ஒரு குழந்தையைப் போல நீர் வாழ்கிறீர்.(4) நீர் ஒருபோதும் எந்த வகைப் பொருளை ஈட்டுவதில் மகிழ்ச்சியோ, இழப்பதில் துயரோ கொள்ளவில்லை. ஓ! பிராமணரே, நீர் எப்போதும் நிறைவுடன் இருக்கிறீர், உலகில் உள்ள எதையும் மதிப்பதாகவும் தெரியவில்லை.(5) ஆசை மற்றும் விருப்பத்தின் உந்துதலில் பிற உயிரினங்கள் அனைத்தும் சுமந்து செல்லப்படும்போது, அறம், பொருள், இன்பம் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் நீர் முற்றான பாகுபாடின்றி இருக்கிறீர். (கலக்கமடையும் தன்மை இல்லாதவராக) அமைதி நிலையில் நீடித்திருப்பவராக நீர் தெரிகிறீர்.(6) புலன்களுக்குரிய பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் நீர், விடுதலையடைந்த சுயத்துடன் (எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல்) அனைத்தையும் பார்த்துக் கொண்டே செல்கிறீர்.(7) ஓ! தவசியே, இந்த உமது ஞானம் என்ன? கல்வி என்ன? (எதன் விளைவாக இவையனைத்தும் சாத்தியப்படுகிறதோ அந்த) நடத்தை {ஒழுக்கம்} என்ன? ஓ! பிராமணரே, இஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்று நீர் நினைத்தால் இதை எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக" என்று கேட்டான் {யயாதி}".(8)
பீஷ்மர் தொடர்ந்தார், "உலகக் கடமைகளை அறிந்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான அந்தப் பிராமணர் {ஆஜகர்}, பிரஹலாதனால் இவ்வாறு கேட்கப்பட்டுப் பெரும் முக்கியத்துவத் வாய்ந்த, இனிய வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(9)
{தவசி ஆஜகர்}, "ஓ! பிரஹலாதா, உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, சிதைவு, மரணம் ஆகியவை, (புத்திக்கு) எட்டக்கூடிய எந்தக் காரணமும் இல்லாதிருப்பதைப் பார். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதில்லை[2].(10) அண்டத்திலுள்ள (செயல்பாடுகளுக்கான) மனச்சார்புகள் அனைத்தும், உயிரினங்களின் (உள்ளுறை) இயல்புகளில் இருந்து பாய்வது காணப்படுகிறது. (அண்டத்தில் உள்ள) அனைத்துப் பொருட்களும், அதனதன் இயல்புகளைச் சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் எதிலும் திளைப்படைவதில்லை[3].(11) ஓ! பிரஹலாதா, அனைத்து வகைச் சேர்க்கையும், பிரிவின் இயல்திறனை {நாட்டத்தை} கொண்டவையாகும். அனைத்து உடைமைகளும் நிச்சயம் முடிவில் அழிவடையும். எனவே நான் எந்தப் பொருளையும் அடைவதில் என் இதயத்தை ஒருபோதும் நிலைநிறுத்துவதில்லை.(12) பண்புகளைக் கொண்ட அனைத்துப் பொருட்களும் அழிவடையப் போவது நிச்சயம். பொருட்களின் தோற்றம் மற்றும் முடிவு ஆகிய இரண்டையும் அறிந்த (என்னைப் போன்ற) ஒருவனுக்கு என்ன எஞ்சியிருக்கிறது?(13)
[2] "அனிமித்தாதம் Animittatah என்பது காரணமேதுமற்றது, அதாவது பிரம்மம் என்று நீலகண்டரால் விளக்கப்படுகிறது. உரையாசிரியர் இஃதை ஓர் இறைப்பற்றுக் கொண்ட பேச்சாகக் கருதலாம். இந்த வார்த்தையின் வெளிப்படையான இயல்பான பொருளைப் புறக்கணிப்பதை நான் மறுக்கிறேன். அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த உறுதியற்ற கருத்துகளும் சாந்தி பர்வத்தில் விவாதிக்கப்படுகின்றன. அறப் பாகுபாடின்மை இங்கே போதிக்கப்பட்ட அனைத்து சாத்தியங்களும் உள்ளன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "அனைத்தும் தன்னியல்பைச் சார்ந்தே இருப்பதால், அதன் செயல்பாடுகள் என்னை மகிழ்ச்சிப்படுத்தவோ, துன்புறுத்தவோ செய்வதில்லை என்பது இந்த வாக்கியத்தின் பொருள். எனக்கு ஒரு மகன் பிறந்தால் நான் திளைக்கவில்லை. அவன் இறந்தாலும் நான் வருந்துவதில்லை. ஒரு மனிதனாக அவனது பிறப்பும், மரணமும் அவனது இயல்பைச் சார்ந்ததாக இருக்கிறது. அந்த இயல்பை மாற்றவோ, எவ்வழியிலாவது அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ எனக்குச் சக்தி கிடையாது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பெருங்கடலின் நீரிலுண்டான பெரிய அல்லது சிறிய பொருட்கள் அனைத்திற்கும் முடிவு காணப்படுகிறது.(14) ஓ! அசுரர்களின் தலைவா {பிரஹலாதா}, நிலத்தைச் சார்ந்த அசைவன, அசையாதன ஆகிய பொருட்கள் அனைத்துக்கும் மரணம் ஏற்படுவதை நான் வெளிப்படையாகக் காண்கிறேன்.(15) ஓ! தானவர்களில் சிறந்தவனே, வானத்தில் பறக்கும் சிறகு படைத்த பலமான உயிரினங்களுக்கும் உரிய காலத்தில் மரணம் நேர்கிறது.(16) ஆகாயத்தில் நகர்ந்து வரும் பெரியனவும், சிறியனவுமான ஒளிக்கோள்களும் அவற்றின் காலம் நேர்கையில் கீழே வீழ்கின்றன.(17) படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக் கூடியன என்பதைக் கண்டு, அனைத்துப் பொருட்களும் அதே இயல்பைக் கொண்டனவே என்று நினைத்து, அறிவை அடைந்து, இதயத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் நான் அமைதியாக உறங்குகிறேன்.(18)
எந்தச் சிரமமுமின்றி அதிகமான உணவை அடைந்தால், அதை அனுபவிக்க நான் தயங்குவதில்லை. மறுபுறம், பல நாட்கள் சேர்ந்தாற்போல எதையும் உண்ணாமல் கடந்திருக்கிறேன்.(19) சில வேளைகளில் மக்கள் விலைமதிப்புமிக்க உணவு பொருட்களை அபரிமிதமகாவும், சில வேளைகளில் சிறு அளவும், சில வேளைகளில் சொற்ப அளவிலும் கொடுத்து உண்ணச் செய்கிறார்கள், சில வேளைகளில் எந்த உணவும் எனக்குக் கிடைப்பதில்லை.(20) சில வேளைகளில் நான் ஒரு தானியத்தின் ஒரு பகுதியை {நொய்யை} மட்டும் உண்கிறேன்; சில வேளைகளில் எண்ணெய் எடுக்கப்பட்ட காய்ந்த பிண்ணாக்கையும் உண்பேன். சில வேளைகளில் அரிசியும், இறைச்சியும், ஆடம்பர வகையிலான பிற உணவும் உண்பேன்.(21) சில வேளைகளில் சிறந்த வகையிலான உயர்வான படுக்க விரிப்பில் உறங்குகிறேன். சில வேளைகளில் வெறுந்தரையில் உறங்குகிறேன். சில வேளைகளில் என் படுக்கை அற்புதமான மாளிகையிலோ, அறையிலோ இருக்கிறது.(22) சில வேளைகளில் மரவுரி அணிகிறேன், சில வேளைகளில் சணலால் செய்யப்பட்ட ஆடைகளையும், சில வேளைகளில் பட்டாடைகளையும், சில வேளைகளில் மான் தோல்களையும், சில வேளைகளில் விலைமதிப்புமிக்க வையிலான ஆடைகளையும் உடுத்துகிறேன்.(23) முயற்சி இன்றி என்னால் அடையப்படும், அறத்திற்கு இசைவான எந்த இன்பங்களையும் நான் ஒருபோதும் புறக்கணிப்பது கிடையாது. அதே வேளையில் அடைவதற்கரிதான அத்தகைய பொருட்களை அடைய நான் முயற்சி செய்வதும் கிடையாது.(24) நான் பின்பற்றி வரும் கடும் நோன்பு ஆஜகரம் என்றழைக்கப்படுகிறது[4]. இந்த நோன்பால் அழியாத்தன்மையை அடையமுடியும். அது மங்கலமானதும், துன்பமற்றதுமாகும். அஃது ஒப்பற்றதும், தூய்மையானதுமாகும். அது நல்லோரின் ஆலோசனைகளுக்கு இசைவானதாகும். அதை ஒருபோதும் பின்பற்றாத மூடர்களால் அஃது அங்கீகரிக்கப்படுவதில்லை. தூய்மையான இதயத்துடன் நான் என்னை அந்த ஒழுக்கத்தின்படியே அமைத்துக் கொள்கிறேன்.(25)
[4] "ஆஜகரம் என்ற சொல்லானது, அசைய முடியாத பெரும்பாம்பின் தன்மையைக் குறிப்பால் உணர்த்துகிறது. அவ்வாறு நகராமல் கிடக்கும் அத்தகைய பாம்புகள், இரையை எதிர்பார்த்து, அருகில் வரும் எதையும் உண்டு, எதுவும் வராத போது பட்டினியுடன் அதே இடத்திலேயே கிடக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
என் மனம் ஒருபோதும் இந்நோன்பிலிருந்து பிறழ்வதில்லை. என் வகைக்கான நடைமுறைகளில் இருந்து நான் பிறழ்ந்ததில்லை. நான் அனைத்தையும் தவிர்க்கும் நிலையில் இருக்கிறேன். நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அறிவேன். அச்சம், கோபம், காமம், பிழையான தீர்மானம் ஆகியவை இல்லாமல், தூய இதயத்துடன் நான் இந்த நோன்பைப் பின்பற்றுகிறேன்.(26) இந்நோன்பில் உணவு, பானம் மற்றும் இன்பத்துக்குரிய பிற பொருட்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைத்தும் விதியைச் சார்ந்திருப்பது போல, எங்களைப் போன்றவர்களுக்குக் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொள்ளும் நடைமுறை ஏதும் கிடையாது. நான் பின்பற்றும் நோன்பானது, இதயத்தின் உண்மையான மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது. தீயோரால் இஃது ஒருபோதும் பின்பற்றப்படுவதில்லை. நான் தூய இதயத்துடன் இதைப் பின்பற்றுகிறேன்.(27) காமத்தால் தூண்டப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைகளில் செல்வத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அந்தத் தொடர்ச்சியில் கலங்கடிக்கப்படும் அவர்கள், கவலையுடன் மனச்சோர்வை அடைகின்றனர். பொருட்களின் உண்மைகளை ஊடுருவியிருக்கும் என் நுண்ணறிவின் துணையால் இவை அனைத்தையும் குறித்து முறையாகச் சிந்தித்து, தூய இதயத்துடன் நான் இந்நோன்பைப் பின்பற்றுகிறேன்.(28) துன்பத்தில் இருக்கும்போது, செல்வத்தை அடைவதற்காக நல்ல மற்றும் தீய மனிதர்களை நாடுவோரை நான் கண்டிருக்கிறேன். அமைதியில் பற்றுடன், விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(29) இன்பம், துன்பம், இழப்பு, லாபம், பற்று, துறவு, மரணம், வாழ்வு ஆகிய அனைத்தும் விதியால் விதிக்கப்படுகின்றன என்பதை வாய்மையின் உதவியால் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(30)
அச்சம், பற்று, தீர்மானப்பிழை, செருக்கு ஆகியவை இல்லாமலும், ஞானம், நுண்ணறிவு, புரிதல், அமைதியில் பற்று ஆகியவற்றுடனும், பெரும்பாம்புகள் தன்னிடம் வரும் கனியில் அசையாமல் இன்புற்றிருக்கின்ற என்பதைக் கேட்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(31) படுக்கை மட்டும் உணவில் எந்த வகைக் கட்டுப்பாடுகளுமில்லாமல், என் இயல்புடன் கூடிய தற்கட்டுப்பாடு, சிக்கனம், தூய நோன்புகள், வாய்மை, ஒழுக்கத்தூய்மை ஆகியவற்றுடன், (எதிர்காலப் பயன்பாட்டுக்கென) செயல்களின் வெகுமதிகளில் எந்த ஆசையுமில்லாமல் மகிழ்ச்சியுடனும், தூய இதயத்துடனும் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(32) ஆசைக்குரிய நோக்கங்கள் விலக்கப்பட்டதன் விளைவால் சோகத்தின் காரணங்கள் அனைத்தும் என்னை விட்டுப் பறந்தோடிவிட்டன. ஒளியின் இணக்கத்தை அடைந்த பிறகு, தாகமுள்ளதும், கட்டுப்பாடில்லாதும், (முறையான பண்பாட்டில், வெளி பொருட்களின் எந்தத் தேவையுமின்றி) தன்னைச் சார்ந்திருப்பதில் கட்டுப்படக்கூடியதுமான என் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(33)
என் இதயம், மனம், சொற்கள் ஆகியவை எவற்றுக்கு வழிவகுக்குமோ, அவற்றில் கவனம் கொள்ளாமல், அவை தொடர்பான மகிழ்ச்சியானது, அடைவதற்குக் கடினமானது, காலத்தைப் பொறுத்தவரையில் கடந்து போக்ககூடியது என்ற இரண்டையும் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(34) இக்காரியத்தைப் பொறுத்தவரையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கல்விமான்கள், தங்கள் சாதனைகளை அறிவிக்க விரும்பி, தங்கள் கோட்பாடுகளை நிறுவும்போது, பிறரின் கோட்பாடுகளை நிந்தித்து, சச்சரவுகளைத் தீர்க்க முடியாத இவை தொடர்பான இதையும் அதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.(35) மூடர்கள் சரியான ஒளியில் இந்நோன்பைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். எனினும், இஃதுவே அறியாமைக்கு அழிவைத் தரும் என நான் காண்கிறேன். இஃது அழிவின்மை நிறைந்தது, பல்வேறு வகையான தீமைகளுக்குத் தீர்வானது எனக் கருதி மனிதர்களுக்கு மத்தியில் திரியும் நான், குற்றங்கள் அனைத்தையும் அடக்கி, (உலகம் சார்ந்த நன்மைகளில் நான் கொண்ட) தாகங்கள் அனைத்தில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்" என்றார் (ஆஜகரர்}".(36)
பீஷ்மர் தொடர்ந்தார், "பற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அச்சம், காமம், மடமை, கோபம் ஆகியவை இல்லாமல், இந்த ஆஜகர நோன்பைப் பின்பற்றும், அல்லது இவ்வாறு அழைக்கப்படுவது போலவே இந்த விளையாட்டில் ஈடுபடும் உயர் ஆன்ம மனிதன், நிச்சம் பெரும் இன்பத்தில் தன் நாட்களைக் கழிப்பதில் வெல்கிறான்".(37)
சாந்திபர்வம் பகுதி – 179ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |