Kasyapa! | Shanti-Parva-Section-180 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 07)
பதிவின் சுருக்கம் : மனிதர்களின் புகலிடம் எது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறிவே இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்க இந்திரனுக்கும், காசியபருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Kasyapa! | Shanti-Parva-Section-180 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ பாட்டா, உற்றார், செயல்கள், செல்வம், ஞானம் ஆகிய இவற்றில் ஒரு மனிதன் எதைப் புகலிடமாகக் கொள்ள வேண்டும்? என்னால் கேட்கப்படும் இதற்குப் பதில் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஞானமே உயிரினங்களின் புகலிடமாகும். ஞானமே உடைமைகளில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானமே உலகில் பேரின்ப நிலையாகும். ஞானமே சொர்க்கமாகும் என்பது நல்லோர் மற்றும் அறவோரின் மதிப்பீடாகும்.(2) பலி, பிரஹலாதன், நமுசி, மங்கி ஆகியோர் (உலகம்) சார்ந்த செழிப்பை இழந்தபோதும் ஞானத்தின் மூலமே பேரின்பத்தை அடைந்தனர். ஞானத்தைவிட மேன்மையானதாக வேறு என்ன இருக்கிறது?(3) இது தொடர்பாக இந்திரனுக்கும், காசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(4)
ஒரு காலத்தில் செழிப்புமிக்க வைசியன் ஒருவன், தன் செழிப்பை அனுபவித்துக் கொண்டு, தன் செல்வாக்கில் செருக்குடன், தன் தேரைக் கவனமில்லாமல் செலுத்தி, தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான ஒரு முனிவரின் மகனைக் கீழே தள்ளிவிட்டான்.(5) தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அந்த இளைஞன், வலி மிகுதியாலும், கோபவசப்பட்டு, துன்பத்தின் ஆளுகையின் கீழ் தீர்மானமுள்ளவனாக, "நான் என் உயிரை விடப் போகிறேன். ஓர் ஏழையின் உயிருக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை" என்று சொன்னான்.(6)
கலக்கமடைந்தவனான அந்தப் பிராமணன், சக்தியை இழந்து, மரணத் தருவாயில் அமைதியாகக் கிடந்த போது, நரியின் வடிவில் காட்சியில் தோன்றிய இந்திரன், அவனிடம்,(7) "(தாழ்ந்த) உயிரினங்கள் அனைத்தும் மனித குலத்தில் பிறக்க ஆசைப்படுகின்றன. மேலும் மனிதர்களில், பிராமண நிலையே மிகவும் விரும்பத்தக்கதாகும்.(8) ஓ! காசியபா, நீ மனிதனாக இருக்கிறாய், மனிதர்களிலும் ஒரு பிராமணனாக இருக்கிறாய். பிராமணர்களிலும், நீ வேதங்களை அறிந்தவனாக இருக்கிறாய். அடைதற்கரிய நிலையை அடைந்திருக்கும் உனக்கு, மடமையால் உயிரை விடுவது தகாது.(9) (உலகம் சார்ந்த) அனைத்து வகை உடைமைகளும் செருக்கு நிறைந்தவையே. அவ்வகையில் ஸ்ருதிகளின் தீர்மானமே முற்றிலும் உண்மையாகும். உயிரைக் கைவிடும் இத்தகைய தீர்மானத்தை அமைத்ததில் நீ காமத்துடன் செயல்படுகிறாய்.(10)
ஓ!, கரங்களைக் கொண்டவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள். கரங்களைக் கொண்ட உயிரினங்களின் நிலையை அடைய ஆவலுடன் நான் விரும்புகிறேன்.(11) செல்வங்களில் நீ பேராசை கொள்வதைப் போலவே நாங்களும் கரங்களில் பேராசை கொள்கிறோம். கரங்களை அடைவதைவிட மதிப்பிக்க உடைமை வேறு ஏதும் இல்லை.(12) ஓ! பிராமணா, என் உடலில் நுழைந்திருக்கும் இந்த முள்ளை என்னால் பிடுங்க முடியாது, அல்லது, என்னைக் கடித்துப் பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பூச்சிகளையும், புழுக்களையும் என்னால் நசுக்க முடியாது.(13) பத்து விரல்களுடன் கூடிய இரு கரங்கள் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் அங்கங்களைக் கடிக்கும் புழுக்களை நசுக்கி வீசுகிறார்கள்.(14) அவர்கள், மழை, குளிர் மற்றும் வெப்பத்திற்காகத் தங்களுக்காக உறைவிடங்களைக் கட்டிக் கொள்கிறார்கள். சிறந்த உடைகள், நல்ல உணவு, வசதிமிக்கப் படுக்கைகள், சிறந்த உறைவிடங்களை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.(15)
கரங்களைக் கொண்டோர், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பயன்பெற்று, சுமை சுமக்கவோ, தங்கள் வாகனங்களை இழுக்கவோ அவற்றைப் பயன்படுத்தி, (தங்கள் சொந்த காரியங்களுக்காக) பல்வேறு வழிமுறைகளில் அந்த விலங்குகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு இந்தப் பூமியில் வாழ்கிறார்கள்.(16) நாவற்றவையும், ஆதரவற்றவையும், சொற்ப பலம் கொண்டவையும், கரங்களற்றவையுமான அந்த உயிரினங்கள் அனைத்தும், (மேற்குறிப்பிட்டவாறு) பல்வேறு வகையான துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கின்றன. ஓ! தவசியே, நற்பேற்றினால் நீ அவற்றைப் போன்றவனாக இல்லை.(17) நற்பேற்றினாலேயே நீ நரியாகவோ, புழுவாகவோ, எலியாகவோ, பாம்பாகவோ, தவளையாகவோ, எந்த வகையைச் சேர்ந்த வேறு எந்த விலங்காகவோ பிறக்கவில்லை.(18) ஓ! காசியபா, இந்த அளவு ஈட்டியிருக்கும் நீ மனநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். உயிரினங்களுக்கு மத்தியில் நீ மேன்மையான பிராமணனாக இருக்கிறாய் என்ற எண்ணமே எவ்வளவு மகிழ்ச்சியை உனக்கு அளிக்க வேண்டும்?(19) இந்தப் புழுக்கள் என்னைக் கடிக்கின்றன. கரங்கள் இல்லாததால் என்னால் அவற்றை விரட்ட முடியவில்லை. என்னுடைய இந்தப் பரிதாப நிலையைப் பார்.(20)
உண்மையில் நான் என் இருப்புக்காக இன்னும் அதிகமான துன்பங்களில் வீழ்கிறேன், கூடாது என்பதனாலும், பெரும் பாவச் செயல் என்பதனாலுமே, நான் என் உயிரை விடாதிருக்கிறேன்.(21) ஒரு நரியாக இருக்கும் இந்த வகை இருப்புச் சகித்துக் கொள்ள முடியாததாகும். இதேபோன்று துயர இருப்புக்கான பலவகைகளும், அதைவிடத் துயரமான இருப்பு வகைகளும் இருக்கின்றன.(22) பிறப்பால் சில குறிப்பிட்ட வகை உயிரினங்கள் மகிழ்ச்சியாகவும், சில பெருந்துன்பத்திலும் இருக்கின்றன. ஆனால், முற்றான மகிழ்ச்சியை உடைமையாகக் கொண்ட எந்த வகை உயிரினமும் இருப்பதாக நான் காணவில்லை.(23) செல்வத்தை அடையும் மனிதர்கள், அடுத்ததாக அரசுரிமையை விரும்புகின்றனர். அரசுரிமையை அடைந்த பிறகு, அவர்களுடைய அடுத்ததாக அவர்கள் தேவ நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையையும் வென்ற பிறகு, அவர்கள் தேவர்களின் தலைமையை அடைய விரும்புகிறார்கள்.(24) (பிறப்பால் நீ பிராமணனாக இருப்பதால்) நீ செல்வந்தனானால், உன்னால் ஒருபோதும் மன்னனாக முடியாது. (உன் பிராமண நிலையானது, தேவ நிலைக்குச் சமமாகவோ, மேன்மையானதாகவோ இருப்பதால்) உன்னால் தேவனாகவும் முடியாது. எவ்வழிமுறையிலாவது (எவ்வழியிலாவது தெய்வீக அருள் கிடைத்து மேன்மையான நிலையை அடைவதற்குப் பதில்) நீ தேவனாகிவிட்டால், நீ தேவர்களின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படலாம். அப்போதும் நீ நிறைவடையமாட்டாய்.(25)
விரும்பிய பொருட்களை அடைவதால் மனநிறைவு விளையாது. அதிகமாக நீரை அருந்துவதால் தாகம் தணியாது[1]. அடைவதில் உள்ள தாகம், புதுவிறகுகள் இடப்படும் நெருப்பைப் போல, இன்னும் புதியவற்றை அடையவே சுடர்விடும்.(26) உன்னில் கவலை இருக்கிறது. ஆனால் உன்னில் மகிழ்ச்சியும் இருக்கிறது. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் உன்னிலேயே இருக்கின்றன. பிறகு, நீ ஏன் துன்பவசப்படுகிறாய்?(27) ஒருவன் தனது விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தின் புலன்களையும், அறிவையும், கூண்டில் உள்ள பறவைகளைப் போல அடைத்து வைக்க வேண்டும்.(28) இரண்டாவது தலையையோ, மூன்றாவது கரத்தையோ வெட்ட முடியாது. இருப்பில் இல்லாதவற்றால் அச்சத்தை உண்டாக்க முடியாது.(29) ஒரு குறிப்பிட்ட பொருள் வழங்கும் இன்பத்தை அறியமுடியாத ஒருவன் அந்தப் பொருளை ஒருபோதும் விரும்பமாட்டான். தீண்டல், பார்வை, கேள்வி ஆகியவை கொடுக்கும் இன்பங்களை உண்மையாக அனுபவிப்பதில் இருந்தே ஆசைகள் எழுகின்றன.(30)
[1] "அதிகமான நீரை அருந்தினாலும், நிரந்தரமாகத் தாகம் தணியாது, தணிக்கப்பட்ட பிறகும் மீண்டும் தாகம் ஏற்படும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வாருணி என்றழைக்கப்படும் மதுவின் சுவையையோ, லட்வாகம் என்றழைக்கப்படும் பறவைகளின் இறைச்சியின் சுவையையோ குறித்து உனக்குக் கருத்தேதும் இருக்க முடியாது. எந்தப் பானமும், எந்த உணவும் இவைற்றைவிட இனிமையாக இருக்க முடியாது.(31) ஓ! கசியபா, நீ ஒருபோதும் சுவைத்ததில்லை என்பதால், மனிதர்களுக்கு மத்தியில் உள்ள பிறவகை மேன்மையான பானங்களையும், உணவையும் உனக்குத் தெரியாது.(32) எனவே, சுவைக்காமல் இருப்பது, தீண்டாமல் இருப்பது, பார்க்காமல் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியை அடைவதற்கான மனிதனின் நோன்பாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(33) கரங்களைக் கொண்ட உயிரினங்கள் பலமிக்கவையாகவும், செல்வமீட்டுபவையாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மரணம், சிறை மற்றும் இன்னும் பலவித சித்திரவதைகளால் (தங்கள் குலத்தினர் கைகளாலேயே) மீண்டும் மீண்டும் துன்புற்று, மனிதர்களே மனிதர்களால் அடிமைத்தன்மையை அடைகின்றனர். அவர்களது நிலை இவ்வாறிருப்பினும் (அதற்கு வருந்தாமல்), சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இன்பங்களில் ஈடுபடுகின்றனர்.(34,35)
இன்னும் பிறர், கரங்களின் வலிமையைக் கொண்டவர்களாக, அறிவு படைத்தவர்களாக, பெரும் மனோசக்தி கொண்டவர்களாக இருப்பினும், நிந்திக்கத்தக்க, பாவகர, பரிதாபகரமான தொழில்களையே பின்பற்றுகின்றனர்.(36) (கண்ணியமிக்க) வேறு தேவைகளுக்காக அத்தகைய தொழில்களிலிருந்து மாறும் அவர்கள், (முற்பிறவின்) செயல்களாகக் கட்டடப்பட்டவர்களாகவும், விதியின் சக்திக்குக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.(37) மிகத் தீய மனிதர்களான புல்கஸனும், சண்டாளனும்[2] கூடத் தன் உயிரைக் கைவிட ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வகைப் பிறப்பில் நிறைவுடன் இருக்கிறார்கள். இக்காரியத்தில் மாயையைப் பார்.(38) கரங்களற்றவர்களாக, வாதநோயால் தாக்கப்பட்டவர்களாக, பிற வகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களாக உன் இனத்தில் இருப்போரைக் காண்டால், நீ உன்னை மகிழ்ச்சி மிக்கவனாகவும், உன் வகையில் மதிப்புமிக்க உடைமைகளைக் கொண்டவனாகவும் உன்னைக் கருதிக் கொள்வாய்.(39) உன் மறுபிறப்பாள {பிராமண} உடல் பாதுகாப்பாக, நலமாக, நோயற்றதாக, அங்கப் பழுது ஏதும் அற்றதாக இருந்தால், மனிதர்களுக்கு மத்தியில் ஒருபோதும் நீ நிந்திக்கப்பட மாட்டாய் என்பது நிச்சயம்.(40)
[2] "புல்கசன் என்பவன் சூத்திரனுக்கும் க்ஷத்திரியப் பெண்ணுக்கும் பிறந்தவன், சண்டாளன் என்பவன் சூத்திரனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவன்" என்று கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்புச் சொல்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்தச் சொற்கள் இணைச்சொற்களாக அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன. சண்டாளன் என்பவன் பிராமணத் தாய்க்கும், சூத்திரத் தந்தைக்கும் பிறந்தவனாவான். புல்கசன் என்பவன் ஒரு நிஷாதத் தந்தைக்கும், சூத்திரத் தாய்க்கும் பிறந்தவனாவான்" என்று அடிக்குறிப்புச் சொல்கிறது. கங்குலியில் எந்த அடிக்குறிப்பும் இல்லை. நாயின் இறைச்சியை உண்பவர்கள் சண்டாளர்கள் என்று பல குறிப்புகள் கிடைக்கின்றன.
ஓ! பிராமணா, உண்மையின் அடிப்படையில் காணப்பட்ட எந்தப் பழி இருந்தாலும், உன்னை வர்ணத்திலிருந்து விலக்கினாலும் உன்னோடு ஒட்டியிருக்கும் உன் உயிரை விடுவது உனக்குத் தகாது. எழுவாயாக, அறம் பயில்வாயாக. உன் உயிரை விடுவது உனக்குத் தகாது.(41) ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்வதைக் கேட்டு, என் சொற்களில் நம்பிக்கை வைத்தால், வேதங்களில் சொல்லப்பட்ட உயர்ந்த அற வெகுமதியை நீ அடைவாய்.(42) வேத கல்வியில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக, புனித நெருப்பை முறையாகப் பராமரிப்பாயாக, வாய்மை, தற்கட்டுப்பாடு, ஈகை ஆகியவற்றை நோற்பாயாக. தற்புகழ்ச்சியுடன் ஒருபோதும் பிறருடன் உன்னை ஒப்பிடாதே.(43) வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்கள், தங்களுக்கும், பிறருக்கும் வேள்விகளைத் தாங்களே செய்யத் தகுந்தவர்களாகி, எந்த வகை வருத்தத்தையும், எந்த வகைத் தீமையையும் அடையாமல் இருக்கலாம்.(44) மங்கலமான திதியில், மங்கலமான நட்சத்திரக்கூட்டத்தில், மங்கலமான நேரத்தில் பிறந்தவர்கள், வேள்விகள் செய்யச் சிறப்பாக முயன்று, ஈகை பயின்று, பிள்ளைகளைப் பெற்று, நற்காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாகப் பேரின்பத்தை அடைவார்கள்.(45) மறுபுறம், தீய நட்சத்திரக்கூட்டங்களில், மங்கலமற்ற திதியில், தீய காலங்களில் பிறந்தவர்கள், வேள்விகளற்றவர்களாக, பிள்ளைகளற்றவர்களாக இறுதியில் அசுர வகையில் வீழ்வார்கள்.(46)
என் முற்பிறவியில் பயனற்ற கல்வியைக் கற்றேன். நான் எப்போதும் காரணங்களைத் தேடுபவனாக, மிகச் சொற்பமான நம்பிக்கைக் கொண்டவனாக இருந்தேன். நான் வேதங்களை அவதூறு செய்பவனாகவும் இருந்தேன். வாழ்வின் நால்வை நோக்கங்கள் அற்றவனாக, கண்ணக்குரிய தெளிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தர்க்க அறிவியலுக்கு அரப்பணிப்புடன் இருந்தேன்.(47) நான் எப்போதும் (சரியாகத் தோன்றும்) காரணங்கள் அடிப்படையிலான வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தேன். உண்மையில் என் சபைகளில் நான் எப்போதும் காரணங்களைப் பேசுவேன் (நம்பிக்கையை அல்ல). ஸ்துரிதிகளின் தீர்மானங்களை மதிப்பில்லாமலும், பிராமணர்களிடம் சர்வாதிகத் தொனியில் நான் பேசுவேன்.(48) நான் நம்பிக்கையற்றவனாகவும், அனைத்திலும் ஐயம் நிறைந்தவனாகவும், உண்மையில் அறியாமை கொண்டவனாக இருந்தாலும், கல்வியில் செருக்குடையவனாக இருந்தேன். அந்த என் பாவங்களின் விளைவாலேயே, ஓ! மறுபிறப்பாளனே, இந்தப் பிறவியில் நான் ஒரு நரியின் நிலையை அடைந்தேன்.(49) நூறு பகல்களும், இரவுகளும் ஒரு நரியாக நான் இருந்தால் மீண்டும் மனித நிலையை என்னால் அடைய முடியுமென்றால்,(50) இருப்பின் உண்மை நோக்கங்களில் கவனத்துடன், வேள்விகளிலும், கொடைகளிலும் ஈடுபட்டு மனநிறைவுடன் என் வாழ்வைக் கடத்துவேன். எது அறியப்பட வேண்டும் எது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் அப்போது அறிவேன்" {என்றான் நரியின் வடிவில் இருந்த இந்திரன்}.(51)
இவ்வாறு சொல்லப்பட்ட தவசி காசியபன், "ஓ! அறிவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனே, இவை யாவற்றிலும் நான் உண்மையில் பெரிதும் ஆச்சரியமடைகிறேன்." என்று சொல்லி எழுந்தான்.(52)
அறிவில் விரிவடைந்த கண்களுடன் கொண்ட பார்வையில், அந்தப் பிராமணன், தன்னிடம் பேசியது தேவர்களுக்கும், சச்சிக்கும் தலைவனான இந்திரன் என்பதைக் கண்டான்.(53) தன்னைச் சுமக்கும் சிறந்த வகைக் குதிரைகளைக் கொண்ட அந்தத் தேவனைக் {இந்திரனைக்} காசியபன் வழிபட்டான். பிறகு அந்தத் தேவனின் அனுமதியோடு, அந்தப் பிராமணன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்" என்றார் {பீஷ்மர்}.(54)
சாந்திபர்வம் பகுதி – 180ல் உள்ள சுலோகங்கள் : 54
ஆங்கிலத்தில் | In English |