Karma! | Shanti-Parva-Section-181 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 08)
பதிவின் சுருக்கம் : முற்பிறவியின் நல்வினையும், தீவினையும் அடுத்தப் பிறவியில் அதற்குரிய பலன்களைக் கொடுப்பதன் நிச்சயத் தன்மை; அறம் பயில வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Karma! | Shanti-Parva-Section-181 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், தவங்கள், ஆசான்களுக்குக் கடமையுணர்வுடன் செய்யக்கூடிய தொண்டுகள் ஆகியவை ஞானத்தையும், உயர்ந்த இன்பத்தையும் உண்டாக்குமா என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மனமானது, ஆசை, கோபம் மற்றும் தீய விருப்பங்களின் நிமித்தமாகப் பாதிப்படைந்தால், அது {மனம்} பாவத்தை நோக்கி நகரும். ஒருவனின் செயல்கள் பாவத்தால் களங்கப்பட்டால், அவன் வலிநிறைந்த {துன்பமிக்க} பகுதிகளில் வசிக்கக் கட்டுப்பட்டவனாவான்.(2) பாவிகள் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, பஞ்சம், துன்பம், அச்சம், மரணம் ஆகியவற்றின் வேதனைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்படுவார்கள்.(3) தங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான அறம் சார்ந்த செயல்களைச் செய்வோர் {ஆத்திகர்கள்}, செல்வந்தர்களாகப் பிறந்து, விழாக்களிலும், சொர்க்கத்திலும், மகிழ்ச்சியிலும் மீண்டும் மீண்டும் திளைக்கிறார்கள்.(4) நம்பிக்கையில்லாதவர்கள் {நாத்திகர்கள்}, விலங்கிடப்பட்ட கைகளுடனும், ஊனுண்ணும் விலங்குகள், யானைகள், பாம்புகள் மற்றும் கள்வர்களின் விளைவால் பயங்கரம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(5)
மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்போர், ஈகையாளர்கள், நல்லோரையும், நேர்மையானோரையும் விரும்புவோர் ஆகியோர், தங்கள் ஈகைச் செயல்களின் விளைவால், தூய ஆன்மாக்களுக்குச் சொந்தமான இன்பமான வழியில் செல்கின்றனர்.(6) அறத்தை மதிக்காதவர்களான மனிதர்களில் தீயோர், தானியங்களில் பதர்களைப் போலவும், பறவைகளில் கொசுக்களைப் போலவும் ஆகிறார்கள்.(7) செயல்படுபவனுடைய முற்பிறவி செயல்களை அவன் விட்டுச் செல்ல விரும்பினாலும், அவற்றின் {முற்பிறவி செயல்களின்} விளைவால் விதிக்கப்பட்டவையே அவனைப் பின்தொடரும். அவன் உறங்கும்போது, அதுவும் {முன்வினையும்} உறங்குகிறது, அவன் என்ன செய்தாலும் அதுவும் அதையே செய்கிறது[1].(8) அஃது அவனுடைய நிழலைப் போலவே, அவன் ஓயும்போது ஓய்ந்து, செல்லும் போது சென்று, செயல்படும்போது செயல்படுகிறது.(9) ஒரு மனிதன் என்ன செயலைச் செய்தாலும் அதன் கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(10)
[1] "செயலைச் செய்பவன் அதன் விளைவைத் தவிர்க்க விரும்பினாலும், அது {அந்தச் செயலின் விளைவு} அவனிடம் இருந்து பிரியாத தோழனாகிறது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(தங்களுக்குத் தகுந்த வகை இருப்புகளில்) வீழ விதிக்கப்பட்டவையும், தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவோ, துன்புறவோ விதிக்கப்பட்டவையுமான உயிரினங்கள் அனைத்தையும் காலம் இழுத்துச் செல்கிறது.(11) முற்பிறவியின் செயல்கள், மலர்களையும், கனிகளையும் போல உரிய காலத்தில் தங்கள் விளைவுகளைப் பெருக்கிக் கொண்டு, உரிய காலத்தில் பெரிதான எவ்வகை முயற்சியுமின்றித் தோன்ற ஒருபோதும் தவறுவதில்லை.(12) மதிப்பு, அவமதிப்பு, ஈட்டல், இழப்பு, சிதைவு, வளர்ச்சி ஆகியவை விதிக்கப்பட்டதுபோலவே, முற்பிறவியல் செய்யப்பட்ட செயல்களின் விளைவுகள் (இன்புறுவதாலோ, துன்புறுவதாலோ) தீர்ந்ததும், எவனிடமும் பாயவோ, தோன்றவோ செய்யாது {வினைகள் தீர்நதாலும் புதிதாகச் செய்யப்படும் செயல்களால்} மீண்டும் மீண்டும் நேர்கின்றன[2].(13) தாயின் கருவறையில் இருக்கும் ஓர் உயிரினம் தன் செயல்களின் விளைவுகளால் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இன்பத்த்திலோ, துன்பத்திலோ இன்புறவோ துன்புறவோ செய்கிறது.(14) குழந்தைப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமைப் பருவத்திலோ வாழ்வின் எந்தக் காலத்திலோ நல்ல, அல்லது தீய செயலைச் செய்யும் ஒருவன், தனது அடுத்தப் பிறவியின் அதே காலத்தில் நிச்சயம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.(15)
[2] "முற்பிறவியின் செயல்களுக்குரிய விளைவுகள் தீர்ந்ததும், (எந்த உயிரினத்திடம் அத்தகை வகையில் விளைவுகள் தீர்ந்ததோ) அந்த உயிரினம் வாழ்வின் தொடர் மாற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறது. எனினும், {விடுதலையடையக்} கூடாது என்று விரும்பினாலும் இத்தகைய உயிரினங்கள் விடுதலையடைகின்றன என்பதில் உள்ள மரபுவழுவாதோரின் கருத்து என்னவென்றால், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகிய இரண்டிலும் எப்போதும் ஏதாவது எஞ்சியிருக்கும், இவ்வாறு எஞ்சியிருப்பதன் விளைவுகளால் இன்புறவும், துன்புறவும் புதுப்பிறவி நேரவேண்டும். மரபுவழுவாத இந்துக்களின் அனைவரின் கருத்தும் இதுவே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸம்மானமும், அவமானமும், லாபமும், நஷ்டமும், ஆபத்தும், ஸம்பத்தும் கர்மங்களின் முடிவில் திரும்பவும் திரும்பவும் செய்யப்பட்ட கர்மங்களை அனுசரித்து உண்டாகும்" என்றிருக்கிறது.
ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயை அடையாளம் கண்டு அணுகும் கன்றைப் போல, முற்பிறவியின் செயல்களும், அவற்றைச் செய்தவனைப் புதுப் பிறவியில் அடைகின்றன.(16) (அழுக்கான) துணி, நீரில் அலசப்பட்டால் தூய்மையடைகிறது. அதே போல, வருத்தத்தில் எரியும் மனிதர்களும் உரிய தவங்களின் மூலம் எல்லையில்லா இன்பத்தை அடைகின்றனர்[3].(17) காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தோர், நீண்ட காலத்திற்குத் தவங்களைச் செய்து, தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, தங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் நோக்கங்களை அடையலாம்.(18) வானத்தில் பறவைகளின் பாதையையோ, நீரில் மீன்களின் பாதையையோ யாராலும் குறிக்க முடியாததைப் போல, அறிவால் தூய்மையடைந்த ஆன்மாக்களை அடையும் மனிதர்களின் பாதையும் எவராலும் குறிப்பிடப்பட முடியாது[4].(19) பாவச் செயல்கள் குறித்து இதற்கு மேலும் எந்தக் குறிப்புக்கும், பேச்சுக்கும் அவசியமில்லை. உரிய தீர்மானத்துடனும், தனக்குத் தகுந்த சிறப்பான முறையிலும், ஒருவன் தனக்கு நன்மையானதை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளிலேயே ஞானத்தையும், உயர்ந்த இன்பநிலையையும் அடைய முடியும்" என்றார் {பீஷ்மர்}.(20)
[3] "இந்த ஸ்லோகத்தின் முதல் சொல் பல்வேறு விதங்களில் படிக்கப்படுகிறது. நான் பின்பற்றும் உரை, சமுன்னம் samunnam, அதாவது நீரில் நனைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்டதாகும். அது சம்ஜுக்தம் samjuktam- ஆக இருந்தால், அழுக்கோடு கலந்த என்ற பொருளைத் தரும். இன்னுமொரு உரையான சம்ஸ்வின்னம் samswinnam என்பதற்கு, வியர்வையில் நனைந்த என்பது பொருளாகும். உபவாசம் என்பதை உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் இருந்து துறவு கொள்வது என்பதற்கு இணையாக நீலகண்டர் விளக்குகிறார். பொதுவாக அஃது "உண்ணாநோன்புகளையே" குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முதலில் நன்றாக அழுக்கடைந்த ஆடையானது பிறகு ஜலத்தால் சுத்தி அடைவது போல முதலில் கெட்ட கர்மத்தைச் செய்த மனிதனும் பிறகு புண்ய கர்மத்தால் பரிசுத்தியை அடைவான்" என்றிருக்கிறது.[4] "இந்த வரிச் சாந்திபர்வத்தில் அடிக்கடி வருகிறது. நல்லோரின் பாதையைக் குறிக்க முடியாது என்பது என்ன பொருளில் சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. ஒருவேளை, அத்தகைய மனிதர்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் தவிர்த்து, தங்களுக்குப் பின்னால் எந்த வரலாற்றையும் விட்டுச் செல்வதில்லை என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறதோ என்னவோ" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 181ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |