Theory of origin! | Shanti-Parva-Section-182 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 09)
பதிவின் சுருக்கம் : அண்டம் படைக்கப்பட்டது குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Theory of origin! | Shanti-Parva-Section-182 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து படைக்கப்பட்டது? அழிவு நேரும்போது அது யாரிடம் செல்கிறது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) உண்மையில், பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இவ்வண்டம் யாரால் படைக்கப்பட்டது.(2) பொருட்கள் {உயிரினங்கள்} யாவும் எவ்வாறு படைக்கப்பட்டன? இருப்பின் வகைகள் {உயிரினங்களில்} தனித்தனி பிரிவுகள் {ஜாதிகள்} எவ்வாறு ஏற்பட்டன? அறம் மற்றும் மறம் குறித்த விதிகளும், அவற்றின் தூய்மையும், மாசும் எவ்வாறு உண்டாகின? இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இதைக் குறித்தும், மறுமை குறித்தும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பரத்வாஜரின் கேள்விகளுக்குப் பிருகு சொன்ன புனிதச் சொற்கள் அடங்கிய பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5) சுடர்மிக்க சக்தியும், காந்தியும் கொண்ட பெருமுனிவர் பிருகு, கைலாச சிகரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பரத்வாஜர், பின் வரும் வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(6)
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது?(7) தொடக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டன? சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு தோன்றின?[1] (ஒழுக்கத்தில்) தூய்மையும் மாசும் எவ்வாறு உண்டாகின? உயிரினங்களுக்கான அறம் மற்றும் மறத்திற்கான விதிகள் எவ்வாறு உண்டாகின?(8) இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இம்மை மற்றும் மறுமை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(9) இவ்வாறு தன் ஐயங்களைக் கேட்ட பரத்வாஜரிடம், சிறப்புமிக்கவரும், பிரம்மத்திற்கு ஒப்பானவரும், மறுபிறப்பாள முனிவருமான பிருகு இந்த வார்த்தைகளைத் தன் மறுமொழியாகச் சொன்னார்.(10)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "உயிரினங்கள் எவ்வாறு உண்டாக்கப்பட்டன? அவை வர்ணங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டன? அவற்றின் தூய்மையும், மாசும் என்ன? தர்மமும், அதர்மமும் எங்கிருந்து உண்டாகின?" என்றிருக்கிறது. கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் ஜாதிகள் என்று குறிப்பிடப்படுவது, பிபேக்திப்ராயின் பதிப்பில் வர்ணங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
பிருகு {பரத்வாஜரிடம்}, "பெருமுனிவர்களால் மானஸம் {மானஸர்} என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு பழம்பொருள் இருந்தது. அது தொடக்கமும் முடிவும் அற்றதாக இருந்தது. அந்தத் தெய்வீகப் பொருள் ஆயுதங்களால் ஊடுருவப்படாததாக இருந்தது. அது சிதைவும், அழிவும் அற்றதாக இருந்தது.(11) அது வெளிப்படாத பொருளாகச் சொல்லப்படுகிறது. அது நித்தியமானதாக, சிதைவற்றதாக, மாற்றமில்லாததாக இருக்கிறது. அதன் மூலமே உயிரினங்கள் பிறக்கின்றன, அதன் மூலமே இறக்கின்றன.(12) அது மஹத் என்ற பெயரில் ஒரு தெய்வீகப் பொருளை முதலில் படைத்தது[2].(13) மஹத் நனவுநிலையைப் படைத்தது. அந்தத் தெய்வீகப் பொருள் {மஹத்} வெளியைப் படைத்தது. அந்தப் பலமிக்கப் பொருளே {மஹத்தே}, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(14) வெளியில் இருந்து நீர் பிறந்தது, நீரில் இருந்து நெருப்பும், காற்றும் பிறந்தன. நெருப்பு மற்றும் காற்றின் கலவையில் பூமி பிறந்தது.(15)
[2] மானஸம் / மானஸர் என்பது மனம் சார்ந்த ஒன்று / ஒருவர் அல்லது விருப்பம் என்பது பொருளாகும். மஹத் என்பது பெரியது / பெரியவர் என்ற பொருளைக் கொண்டதாகும். கும்கோணம் பதிப்பில் மானஸர் என்பது விஷ்ணுவுக்குக் குறிக்கப்படுகிறது.
தான்தோன்றியான மானஸம், ஆற்றலைக் கருவில் கொண்ட ஒரு தெய்வீகத் தாமரையைப் படைத்தது. அந்தத் தாமரையில், வேதப் பெருங்கடலான பிரம்மன் எழுந்தான்[3].(16) அந்தத் தெய்வீகமானவன் பிறந்ததும், "நானே அஃது" என்ற வார்த்தைகளைச் சொன்னான் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. இதன் காரணமாக அவன் நனவுநிலை என்ற பெயரில் அழைக்கப்படலானான். அவனே படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் உடலாக இருக்கிறான். அவனே அவற்றின் படைப்பாளனாகவும் இருக்கிறான். நாம் காணும் இந்த ஐந்து பூதங்களும் பேராற்றல் கொண்ட அந்தப் பிரம்மனே.(17) மலைகளே அவனது எலும்புகளாக இருக்கின்றன. பூமி அவனது கொழுப்பாகவும், சதையாகவும் இருக்கிறது. பெருங்கடல்கள் அவனது குருதியாக இருக்கின்றன. அண்டவெளி அவனது வயிறாக இருக்கிறது.(18) காற்று அவனது மூச்சாக இருக்கிறது. நெருப்பு அவனது ஆற்றலாக இருக்கிறது. ஆறுகள் அவனது நரம்புகளாக இருக்கின்றன. சூரியன், சந்திரன் என்று அழைக்கப்படும் அக்னியும், சோமனும், அவனது கண்களாகச் சொல்லப்படுகின்றனர்.(19) மேலுள்ள ஆகாயம் அவனது தலையாகச் சொல்லப்படுகிறது. பூமி அவனது இரு கால்களாக இருக்கிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அவனது கரங்களாக இருக்கின்றன. அவன் அறியப்பட முடியாதவனாகவும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்களாலேயே உணரப்பட முடியா ஆன்மா கொண்டவனாகவும் இருக்கிறான்.(20) மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுவியிருக்கும் அந்தத் தெய்வீகமானவன், அனந்தன் (முடிவற்றவன்) என்ற பெயரில் அறியப்படுகிறான். நனவுநிலையில் வாழும் அவன், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அறியப்பட முடியாதவனாக இருக்கிறான்.(21) உன்னால் கேட்கப்பட்டதால், எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இருப்புக்கு அழைக்க நனவுநிலையைப் படைத்தவனோ, எவனிலிருந்து இந்த அண்டம் எழுந்ததோ அவனைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பிருகு}.(22)
[3] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதம் என்ற சொல் அறிவு மற்றும் சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பரத்வாஜர், "ஆகாயம், அடிவானின் புள்ளிகள், இந்தப் பூமியின் பரப்பு, காற்று ஆகியவற்றின் எல்லை எது? உண்மையை எனக்குச் சொல்வதன் மூலம் என் ஐயங்களைத் தீர்ப்பீராக" என்று கேட்டார்.(23)
பிருகு, "நீ மேலே காணும் வானம் எல்லையற்றதாகும். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்கும், தெய்வீகமானவர்களுக்கும் அதுவே வசிப்பிடமாக இருக்கிறது. அஃது இனிமை நிறைந்ததாகவும், பல்வேறு உலகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதன் எல்லைகளை உறுதிப்படுத்த முடியாது.(24) சூரியனாலும், சந்திரனாலும் தங்கள் கதிர்களின் எல்லைக்கு அப்பால் மேலேயோ, கீழேயோ பார்க்க முடியாது. சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் அடைய முடியாத இடங்களில் சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியைக் கொண்டவையும், தன்னொளி கொண்டவையுமான ஒளிக்கோள்கள்[4] இருக்கின்றன.(25) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அடைவதற்கரிதாக, முடிவிலா எல்லைகளைக் கொண்டதாக இருப்பதன் விளைவால், பரந்த புகழ்பெற்ற காந்தியைக் கொண்ட இவற்றாலும் {ஒளிக்கோள்களாலும்} கூட ஆகாயத்தின் எல்லைகளைக் காண முடியாது.(26) தேவர்களாலும் அளக்க முடியாத இந்த அண்டவெளியில், ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்னொளி கொண்ட சுடர்மிக்க உலகங்கள் பல இருக்கின்றன.(27) நிலத்தின் எல்லைகளுக்கு அப்பால் பெருங்கடலின் நீர் இருக்கிறது. நீருக்கு அப்பால் இருள் இருக்கிறது. இருளுக்கு அப்பால் நீரே இருக்கிறது, அதற்கும் அப்பால் நெருப்பிருக்கிறது.(28) கீழ்நோக்கி பாதாள உலகங்களுக்கு அப்பால் நீர் இருக்கிறது. அந்த நீருக்கு அப்பால், பெரும்பாம்புகளின் உலகம் இருக்கிறது. அதற்கும் அப்பால் மீண்டும் வானம் இருக்கிறது, வானத்திற்கு அப்பால் மீண்டும் நீர் இருக்கிறது.(29) இவ்வாறே நீரும் வானமும் மாறி மாறி முடிவில்லாமல் இருக்கின்றன. நீரால் பிரதிபலிக்கப்படும் தெய்வீகத்தின் எல்லைகள் இவ்வாறே இருக்கின்றன. நெருப்பு, காற்று மற்றும் நீரின் எல்லைகளைத் தேவர்களாலும் உறுதி செய்ய முடியாது.(30)
[4] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் தேவா என்ற வார்த்தை, ஒளிக்கோள்களையே குறிப்பிடுகின்றனவேயன்றி தேவர்களையோ, தெய்வங்களையோ அல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் இயல்பு அண்டவெளியைப் போன்றதே. உண்மையான அறிவின்மையின் மூலம் அவை தனிப்பட்டவையாகத் தெரிகின்றன.(31) மூன்று உலகங்கள் மற்றும் பெருங்கடலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் பல்வேறு சாத்திரங்களைத் தவசிகள் படிக்கின்றனர்.(32) எனினும், அடையமுடியாததாகவும், பார்வையால் புரிந்து கொள்ள முடியாதாக இருக்கும் ஒன்றின் எல்லைகள் எவரால் தீர்மானிக்க முடியும்?(33) தேவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் பாதையாக இருக்கும் ஆகாயத்தின் எல்லைகளை உறுதி செய்வது சாத்தியமானால் கூட, அளவற்றதும், முடிவிலி என்ற பெயரால் அறியப்படுவதும், உயர் ஆன்ம மானஸம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான ஒன்றின் அளவுகளை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.(34) சில வேளைகளில் அதன் வடிவம் சுருங்கி இருக்கிறது, சில வேளைகளில் விரிந்திருக்கிறது, அதற்கு {மானஸத்திற்கு} இணையான ஒன்றைத் தவிர, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேறு எவரால் முடியும்?(35) அறத்தின் சாரத்தைக் கொண்டவனாகவும், அசையும் மற்றும் அசையாத பொருட்களின் படைப்பாளனாகவும் அனைத்தையும் அறிந்த தலைவன் பிரம்மன், (நான் ஏற்கனவே சொன்னது போல) அந்தத் தாமரையில் முதன்முதலில் வடிவத்துடன் படைக்கப்பட்டான்" என்றார் {பிருகு}.(36)
பரத்வாஜர், "அந்தத் தாமரையில் இருந்து பிரம்மன் எழுந்ததால், அந்தத் தாமரையே முதலில் பிறந்ததாகக் கருதப்பட வேண்டுமேயன்றி பிரம்மன் கிடையாது. எனினும், பிரம்மன் ஏன் முதல்வனாகச் சொல்லப்படுகிறான்? எனது இந்த ஐயத்தை நீர் நீக்குவீராக" என்று கேட்டார்.(37)
பிருகு, "பூமியே அந்தத் தாமரையாகச் சொல்லப்படுகிறது. பிரம்மனாக மாறிய அந்த மானஸத்தின் வடிவத்திற்கு ஓர் இருக்கை அளிப்பதற்காக அது {அந்தத் தாமரை} படைக்கப்பட்டது.(38) சொர்க்கத்தையே அடைந்த சுமேரு அந்தத் தாமரையின் கர்ணிகையானது[5]. அதிலிருந்தே, பலமிக்க அண்டத் தலைவன் {பிரம்மன்} உலகங்கள் அனைத்தையும் படைத்தான்" என்றார்.(பிருகு}.(38)
[5] கர்ணிகை என்பது தாமரைப் பூவின் நடுவில் இருக்கும் காயாகும் எனக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 182ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |