The origin of earth! | Shanti-Parva-Section-183 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 10)
பதிவின் சுருக்கம் : பல்வேறு பொருட்களும், பூமியும் படைக்கப்பட்ட முறை குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
The origin of earth! | Shanti-Parva-Section-183 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அந்தப் பலமிக்கப் பிரம்மன், மேருவில் வசித்துக் கொண்டு, பல்வேறு வகைப் பொருட்களை எவ்வாறு படைத்தான் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, "(பிரம்மனின் வடிவில் இருக்கும்) பெரும் மானஸம், மனவிருப்பத்தின் ஆணையால் பல்வேறு வகைப் பொருட்களைப் படைத்தது. அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்காக முதலில் அது நீரைப் படைத்தது.(2) நீரே அனைத்துயிரினங்களின் உயிராக இருக்கிறது, நீரே அவற்றின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. நீரில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் அழியவே வேண்டும். மொத்த அண்டமும் நீரால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(3) பூமி, மலைகள், மேகங்கள், வடிவம் கொண்ட பொருட்கள் என அனைத்தும் நீரின் நிலைமாற்றங்கள் என்றே அறியப்பட வேண்டும். அந்தப் பூதம் {நீர்} திண்மைப் பொருளாவதால் இவை அனைத்தும் உண்டாக்கப்பட்டன" என்றார் {பிருகு}.(4)
பரத்வாஜர், "நீர் எவ்வாறு உண்டானது? நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின? பூமியானது எவ்வாறு படைக்கப்பட்டது? இவற்றில் எனக்குப் பேரையங்கள் {பெரும் ஐயங்கள்} இருக்கின்றன" என்று கேட்டார்.(5)
பிருகு, "ஓ! மறுபிறப்பாளனே, பிரம்ம கல்பம் என்றழைக்கப்பட்ட பழங்காலத்தில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்று கூடிய போது, அண்டப் படைப்பு குறித்த இந்த ஐயத்தையே உணர்ந்தனர்.(6) அவர்கள் பேச்சைத் தவிர்த்து, அசைவற்றவர்களாக நீடித்து, (தவ) தியானத்தில் ஈடுபட்டார்கள். உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்ட அவர்கள், ஆயிரம் தேவ வருடங்களுக்கு இவ்வாறே நீடித்திருந்தனர்.(7) அந்தக் காலத்தின் முடிவில், வேதங்களைப் போன்ற புனிதமான சில குறிப்பிட்ட வார்த்தைகள் அடுத்தடுத்து அவர்கள் அனைவரின் காதுகளையும் அடைந்தன. உண்மையில், ஆகாயத்திலிருந்து இந்தத் தெய்வீகக் குரல் சொல்வது கேட்டது:(8)
{அக்குரல்},"முன்பு முற்றிலும் அசைவற்றதாக, அசைக்க முடியாததாக முடிவில்லா வெளி மட்டுமே இங்கே இருந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று ஆகியவை இல்லாமல் அஃது உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(9) அப்போது இருளுக்குள் அதைவிடக் கரியதான ஏதோ ஒன்றைப் போல நீர் எழுந்தது. பிறகு நீரின் அழுத்தத்தால் காற்று எழுந்தது.(10) துளையில்லா வெற்றுப்பாத்திரம் முதலில் ஒலியேதும் அற்றதாக இருந்தாலும், நீரும், காற்றும் நிரப்பப்பட்டதும் பேரொலியை எழுப்புவதைப் போலவே,(11) முடிவிலா வெளி நீரால் நிரப்பப்பட்ட போது, அந்த நீரினூடாகத் துளைத்துக் கொண்டு பேரொலியுடன் காற்று எழுந்தது[1].(12) பெருங்கடலின் நீரழுத்தத்தால் இவ்வாறு உண்டான காற்றே இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது. (தடையில்லாமல்) வெளிக்கு வந்த அதன் இயக்கம் ஒருபோதும் நிற்காமல் இருக்கிறது.(13)
[1] "நீரை ஊற்றுவது, காற்றை இடம்பெயறச் செய்யாமல், அதை உண்டாக்கியது என்று கருதுகின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, காற்றுக்கும், நீருக்கும் இடையில் உண்டான உராய்வின் விளைவால், பெரும் வலிமையையும், சுடர்மிக்க ஆற்றலையும் கொண்டதும், மேல்நோக்கிய தழல்களுடன் கூடியதுமான நெருப்பு இருப்பில் எழுந்தது. வெளியை மறைத்திருந்த இருளை அந்நெருப்பு அகற்றியது.(14) காற்றின் துணையுடன் கூடிய நெருப்பு, வெளியையும், நீரையும் ஒன்றாக இழுத்தது. உண்மையில், நீருடன் இணைந்து நெருப்பு திண்மையடைந்தது.(15) நெருப்பின் நீர்ப்பகுதியானது, வானத்தில் இருந்து விழுந்தபோது திண்மையடைந்து, பூமி என்று அறியப்படும் ஒன்றாக ஆனது.(16) எதில் அனைத்தும் பிறந்தனவோ, அந்தப் பூமியே, அல்லது நிலமே, அனைத்து வகைச் சுவை, அனைத்து வகை மணம், அனைத்து வகை நீர்மங்கள், அனைத்து வகை உயிரினங்களுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது" என்றது {அக்குரல்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 183ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |