Five elements theory! | Shanti-Parva-Section-184 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 11)
பதிவின் சுருக்கம் : தாவரங்களும் ஐம்பூதங்களைக் கொண்டன, எனவே அவைகளுக்கும் உயிர் உண்டு என்பதையும், அசையும் உயிரினங்களில் ஐம்பூதங்கள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...
Five elements theory! | Shanti-Parva-Section-184 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "உயர் ஆன்ம பிரம்மன் ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படைத்திருக்கும்போது, அவன் முதலில் படைத்தவையும், பேருயிரினங்களும் {மஹா பூதங்களும்}, அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவையுமான ஐம்பூதங்களை மட்டுமே உயிரினங்கள் {பூதங்கள்} என்ற தனிப்பட்ட பெயரைக் கொண்டிருப்பது ஏன்?" என்று கேட்டார்.(1,2)
பிருகு {பரத்வாஜரிடம்}, "முடிவிலி அல்லது அகன்ற என்ற வகையைச் சார்ந்த அனைத்துப் பொருட்களும் பெரியது {மஹத்} என்ற பெயரைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இந்த ஐம்பூதங்களும், பெரும் உயிரினங்கள் {மஹாபூதங்கள்} என்று அழைக்கப்படுகின்றன[1].(3) காற்றானது செயல்பாடாக இருக்கிறது. வெளியானது கேட்கப்படும் ஒலியாக இருக்கிறது. நெருப்பானது அதன் உள்ளிருக்கும் வெப்பாக இருக்கிறது. நீரானது அதில் உள்ள நீர்ச்சாரமாக இருக்கிறது. பூமியானது {நிலமானது} திண்மை அடைந்த பொருளாக {பருப்பொருளாக} சதைகளாக எலும்புகளாக இருக்கிறது. இவ்வாறே (உயிரினங்களின்) உடல்கள் (பழைமையான) ஐந்து பூதங்களால் ஆனவையாக இருக்கின்றன.(4) அசையும், அசையாத பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களால் ஆனவையாகவே இருக்கின்றன. உயிரினங்களின் ஐம்புலன்களிலும் ஐம்பூதங்களே கலந்திருக்கின்றன. காதில் வெளியின் பண்புத்தொகுதிகள் கலந்திருக்கின்றன. மூக்கில் பூமியும்; நாவில் நீரும்; தீண்டலில் காற்றும்; கண்களில் ஒளியும் (அல்லது நெருப்பும்) கலந்திருக்கின்றன" என்றார் {பிருகு}.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "மகத்தென்னும் பதம் கணக்கில்லாதவைகளைச் சொல்லும். பூதம் என்ற பதத்திற்குப் பிறப்படைந்தவைகளென்று பொருளாகும். அக்காரணத்தால் மஹாபூதமென்ற இப்பதம் அவைகளுக்குப் பொருத்தமுள்ளதாகும்" என்றிருக்கிறது.
பரத்வாஜர், "அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் தொகுதியாக இருக்குமானால், அசையாத பொருட்கள் அனைத்திலும் அந்தப் பூதங்கள் காணப்படாதது ஏன்?(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்?(8) மரங்களில் திரவபொருள், வெப்பம், பூமி {நிலம்} ஆகியவை ஏதும் இல்லாததன் விளைவால், அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதிகளாகக் கருதப்படக்கூடாது என்றே தெரிகிறது" என்றார் {பரத்வாஜர்}.(9)
பிருகு, "அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், மரங்களினுள் நிச்சயம் வெளி {ஆகாயம்} இருக்கிறது. மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவது அவற்றில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.(10) அவற்றினுள் வெப்பம் இருப்பதன் விளைவாலேயே, அவற்றிலிருந்து இலைகள், பட்டைகள், கனிகள், மலர்கள் ஆகியன உதிர்கின்றன. அவை நோய்வாய்ப்பட்டு வாடுகின்றன. இது தீண்டல் உணர்வு அவற்றுக்கு இருப்பதையே காட்டுகிறது.(11) காற்றின் ஒலி, நெருப்பு, இடி ஆகிய அதிர்ச்சியின் மூலம், அவற்றின் கனிகளும் மலர்களும் விழுகின்றன. காதின் மூலம் ஒலி உணரப்படுகிறது. எனவே மரங்களுக்குக் காதுகள் இருக்கின்றன, அவை கேட்கின்றன.(12) ஒரு கொடி ஒரு மரத்தில் சுற்றி, அனைத்துப் பக்கங்களில் படர்கிறது. பார்வையில்லையென்றால் அதற்கு வழி தெரியாது. இதன் காரணமாக, மரங்களுக்குப் பார்வை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(13) மேலும் மரங்கள் நல்ல மற்றும் தீய மணங்களின் விளைவால் உயிரிவளம் தேறி, பல்வேறு வகைத் தூபங்களிலான புனித நறுமணங்களைத் தரும் மலர்களை மலரச் செய்கின்றன[2]. மரங்கள் மணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை[3].(14) அவை தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன. அவை பல்வேறு வகையான நோய்க்கு ஆட்படுகின்றன. அந்த நோய்களும் பல்வேறு வகைச் செயல்பாடுகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களுக்குச் சுவையை உணரும் தன்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "அவ்விதம் சுத்தமும், அசுத்தமுமான பலவித மணங்களாலும் தூபங்களாலும் மரங்கள் நோயில்லாதவைகளும் பூக்களுள்ளவைகளுமாகின்றன" என்றிருக்கிறது.[3] "பழங்கால இந்துக்கள், நோய்வாய்ப்பட்ட செடிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும், எவ்வாறு அவற்றின் உயிரிவளத்தைத் தேறச் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம் வியப்பூட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் தாமரைத் தண்டின் மூலமாக நீரை உறிஞ்சுவதைப் போலவே, காற்றின் உதவியுடன், தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன.(16) அவை இன்பத்திற்கும், துன்பத்திற்கும் எளிதாக உட்படுகிறவையாகவும், வெட்டும்போதோ, கொய்யப்படும்போதோ வளர்பவையாகவும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளால் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது. அவை அசைவற்றவை கிடையாது.(17) இவ்வாறு உறிஞ்சப்படும் நீரை நெருப்பும் காற்றும் செரிக்கச் செய்கின்றன. மேலும், மரமானது எந்த அளவுக்கு நீரை எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு வளர்ந்து ஈரத்தன்மை கொண்டதாகிறது.(18)
அசையும் பொருட்கள் அனைத்தின் உடல்களிலும் ஐம்பூதங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அளவுகள் வேறுபடுகின்றன. இந்த ஐம்பூதங்களின் விளைவாலேயே அசையும் பொருட்களால் தங்கள் உடல்களை நகர்த்திக் கொள்ள முடிகிறது.(19) தோல், சதை, எலும்புகள், மஜ்ஜை ஆகியன பூமியாலானவை {நிலத்தாலானவை}.(20) ஆற்றல், கோபம், கண்கள், உள்ளார்ந்த வெப்பம், உணவைச் செரிக்கச் செய்யும் வேறு வெப்பம் ஆகி இந்த ஐந்தும், உடல்படைத்த அனைத்து உயிரினங்களிலும் நெருப்பாக இருக்கின்றன.(21) காதுகள், மூக்கு, வாய், இதயம், வயிறு ஆகிய ஐந்தும், உயிரினங்களின் உடல்களில் வெளி பூதமாக இருக்கின்றன. சளி, பித்தநீர், வியர்வை, கொழுப்பு, இரத்தம் ஆகியவை அசையும் உடல்களில் ஐவகை நீராக இருக்கின்றன.(23) பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றின் மூலம் ஓர் உயிரினத்தால் நகர முடிகிறது. வியானம் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் செயல்பாட்டுக்குரிய பலத்தைப் பெற முடிகிறது. அபானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் கீழ்நோக்கி நகர முடிகிறது. சமானன் {ஸமானன்} என்றழைக்கப்படுவது {வாயு} இதயத்தில் வசிக்கிறது.(24) உதானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் ஒருவனால் ஏப்பம் விட {மூச்சுவிட} முடிகிறது, (நுரையீரல்கள், தொண்டை, வாய்) ஆகியவற்றைத் துளைப்பதன் விளைவால் பேசவும் முடிகிறது. இவையே உடல்படைத்த உயிரினம் வாழவும் நகரவும் வழிவகுக்கும் ஐவகைக் காற்றுகளாகும் {வாயுக்களாகும்}.(25)
உடல்படைத்த ஓர் உயிரினம் தன்னில் இருக்கும் பூமி {நிலம்} எனும் பூதத்தின் மூலம் மணத்தின் பண்புகளை அறிகிறது. நீர் எனும் பூதத்தின் மூலம் அது சுவையை உணர்கிறது. கண்களைப் பிரதிபலிக்கும் நெருப்பு எனும் பூதத்தின் மூலம், அது வடிவங்களைப் பார்க்கிறது, காற்று எனும் பூதத்தின் மூலம் அது தீண்டல் உணர்வை அடைகிறது.(26) மணம், தீண்டல், சுவை, பார்வை, ஒலி ஆகியவை அசையும் மற்றும் அசையாத பொருட்களின் (பொதுப்) பண்புகளாகக் கருதப்படுகின்றன. நான் முதலில் பல்வேறு வகை மணங்களைக் குறித்துப் பேசப் போகிறேன்.(27) ஏற்புடையமணம், ஏற்பில்லாத மணம், இனிய மணம், கடுமையான நாற்றம், தொலைதூரம் செல்கிற மணம், பல்வேறு வகையைக் கொண்ட மணங்களைக் கொண்டது, காய்ந்த மனம், மணமற்றது என அவை இருக்கின்றன[4].(28) இந்த ஒன்பது வகை மணங்கள் பூமி {நிலம்} என்ற பூதத்தால் அமைக்கப்படுகின்றன. கண்களால் ஒளி காணப்படுகிறது, காற்று எனும் பூதம் மூலம் தீண்ட முடிகிறது.(29) ஒலி, தீண்டல், பார்வை, சுவை ஆகியவை நீரின் பண்புகளாகும். இனி நான் சுவை எனும் உணர்வைக் குறித்து (விரிவாகப் பேசப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(30)
[4] கும்பகோணம் பதிப்பில், "விரும்பப்படும் மணம், விரும்பத்தகாத நாற்றம், இனிப்புள்ளது, உறைப்புள்ளது, மற்றவைகளை அடக்குந்திறமையுள்ளது, பலவகைவாஸனை சேர்க்கையுள்ளது, ஸ்நேஹகுணத்துடன் கூடியது, காரமுள்ளது, சுத்தமாயிருப்பது என்ற இப்படி ஒன்பது விதமான பூமியிலுள்ள குணத்தின் வேற்றுமையைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
உயர் ஆன்ம முனிவர்கள் பல்வேறு வகைச் சுவைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். அவை, இனிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு {காரம்} ஆகியனவாகும். இந்த ஆறுவகைச் சுவைகளும் நீரெனும் பூத்தைச் சார்ந்தவையாகும்.(32) வடிவத்தைப் பார்க்க ஒளி பங்களிக்கிறது. வடிவம் பல்வேறு வகைகளில் இருக்கிறது. குட்டை, நெட்டை {நீளம்}, பருமை, நான்கு முனை கொண்டது {சதுரம்}, உருண்டை,(33) வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், நீலச்சிவப்பு, கெட்டியானது, வெளிச்சமானது {பிசுக்குள்ளது}, வழுவழுப்பானது {மெழுக்குள்ளது}, எண்ணெய்ப்பசையுள்ளது, மென்மையானது, பயங்கரமானது.(34) இந்தப் பதினாறு வகை வெவ்வேறு வடிவங்களும் ஒளி, அல்லது பார்வையின் பண்பைக் கொண்டவை. காற்று எனும் பூதத்தின் பண்பு தீண்டல். தீண்டல் பல்வேறு வகைகளைக் கொண்டது.(35) வெப்பமானது, குளிரானது, ஏற்புடையது, ஏற்பில்லாதது, அக்கறையற்றது, எரிச்சலுள்ளது, கனிவானது, மென்மையானது, கனமில்லாதது, கனமிக்கது.(36) ஒலி, தீண்டால் ஆகிய இரண்டும் காற்றெனும் பூதத்தின் பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பதினோரு பண்புகளும் காற்றை {வாயுவைச்} சார்ந்தவை.(37)
வெளிக்கு {ஆகாயத்திற்கு} ஒரே ஒரு பண்பு மட்டுமே உண்டு. அஃது ஒலி என்று அழைக்கப்படுகிறது. நான் இப்போது பல்வேறு வகையான ஒலிகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(38) அவை, ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு மூலக்குறிகளை {ஸ்வரங்களைக்} ஆகியவையே.(39) இந்த ஏழு வகைப் பண்புகளும் வெளி {ஆகாயம் எனும் பூதம்} தொடர்புடையவையாகும். ஒலியானது, குறிப்பாகப் பேரிகை முதலிய இசைக்கருவிகளில் வெளிப்படுவதாக இருந்தாலும் பரம்பொருளைப் போல வெளியெங்கும் பிரிக்க முடியாதவாறு உட்பொதிந்திருக்கிறது.(40) சிறி, பெரிய பேரிகைகள், சங்குகள், மேகங்கள், தேர்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகிய எதன் மூலம் கேட்கப்பட்டாலும் ஒலியானது, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த ஏழுவகை ஒலிகளையே கொண்டிருக்கிறது.(41) இவ்வாறு வெளியின் பண்பான ஒலி பல்வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கிறது. கல்விமான்கள் ஒலியானது வெளியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். காற்றின் பண்பான பல்வேறு வகைத் தீண்டல்களின் மூலம் எழுப்பப்படும்போது அது {ஒலி} கேட்கப்படுகிறது. எனினும், பல்வேறு வகையான தீண்டல்கள் தடுக்கப்பட்டால் அது {ஒலி} கேட்கப்படுவதில்லை[5]. உடலின் ஒத்த பகுதிகளில் பூதங்கள் கலந்து, பெருகி, வளர்கின்றன.(42,43) நீர், நெருப்பு, காற்று ஆகியவை உயிரினங்களின் உடல்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன. அவையே உடலின் வேர்களாக இருக்கின்றன. (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) ஐந்தும் உயிர் மூச்சுகளில் படர்ந்தூடுருவி அவை உடலில் வசித்து வருகின்றன" என்றார் {பிருகு}.(44)
[5] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயத்தில் இருந்து உண்டாகும் சப்தத்தை வெளியிலுள்ள காற்றின் குணமான ஸ்பர்சமானது தடைசெய்யாமலிருக்குமாகில் மனிதன் அறிவான்"என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 184ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |