Physiology! | Shanti-Parva-Section-185 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 12)
பதிவின் சுருக்கம் : உடலில் உள்ள பிராண வாயு உள்ளிட்ட வாயுக்களின் செயல்பாடுகளைக் குறித்துப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...
Physiology! | Shanti-Parva-Section-185 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "உடல்வெப்பம், அல்லது நெருப்பானது {அக்னி}, உடலுக்குள் புகுந்து எவ்வாறு அங்கே வசிக்கிறது? தனக்கென வெளியை அடையும் காற்று {வாயு} எவ்வாறு உடலை அசையச் செய்யவும், முயற்சி செய்யவும் வைக்கிறது?" என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, "ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, ஓ! பாவமற்றவனே, வலிமைமிக்கப் பூதமான காற்று {வாயு}, உயிரினங்களின் உடல்களை எவ்வாறு அசையவும், முயற்சிக்கவும் வைக்கும் நடைமுறை குறித்து உனக்குச் சொல்கிறேன்.(2) வெப்பம் தலையில் (மூளையில்) வசித்துக் கொண்டு உடலை (அழியாமல்) பார்த்துக் கொள்கிறது. பிராணன் என்றழைக்கப்படும் காற்று {வாயு} அல்லது மூச்சானது, தலைக்குள் வசித்துக் கொண்டு, தன் வெப்பத்தால் அனைத்து முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கிறது.(3) அந்தப் பிராணனே, உயிரினமாகவும், அண்ட ஆன்மாவாவாகவும், அழிவில்லாததாகவும், உயிரினங்கள் அனைத்தின் மனமாகவும், அறிவாகவும், நனவு நிலையாகவும், புலன்நுகர்பொருட்களுக்குரிய அனைத்துப் பொருட்களாகவும் இருக்கிறது[1].(4) இவ்வாறு ஓர் உயிரினமானது, அனைத்து வகையிலும் பிராணனால் இயக்கப்பட்டு, {உடலை} முயற்சி செய்ய வைக்கிறது.
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்தப்ராணனானது பிராணியும், எல்லாப் பிராணிகளின் ஆத்மாவான ஸனாதன புருஷனுமாயிருக்கிறது, அந்தப்பிராணன் மனமும், புத்தியும், அஹங்காரமும், பூதங்களும், மற்ற விஷயங்களுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.
சமானன் என்றழைக்கப்படும் மற்றொரு மூச்சின் விளைவாக, புலன்களில் ஒவ்வொன்றும் அதனதன் செயல்களுக்கேற்ப செயல்படுகின்றன.(5) அபானன் என்றழைக்கப்படும் மூச்சானது, சிறுநீர்ப்பை மற்றும் வயிற்றின் குடல்களில் உள்ள வெப்பத்தைக் கொண்டு அசைந்து, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வைப்பதில் ஈடுபடுகிறது.(6) இம்மூன்றிலும் {மூன்று பகுதிகளிலும்} செயல்படும் ஒற்றை மூச்சானது, அறிவியல் அறிந்தவர்களால் உதானன் என்றழைக்கப்படுகிறது[2].(7) மனிதர்களின் உடல்களில் உள்ள இணைப்புகள் அனைத்தையும் இயங்கச் செய்யும் மூச்சானது வியானன் என்றழைக்கப்படுகிறது.(8) உயிரினங்களில் உடல்களில் உள்ள வெப்பமானது, சமானன் என்ற மூச்சினால் உடலியக்கம் முழுவதிலும் சுற்றிச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு உடலில் வசித்திருக்கும் அந்த மூச்சானது, பல்வேறு வகைத் திரவங்களிலும் {அன்னரஸங்களிலும்}, தாதுக்களிலும், குற்றமான பொருட்கள் அனைத்திலும் செயல்படுகிறது[3].(9) அபானன் மற்றும் பிராணனுக்கு இடையில் தொப்புகள் பகுதியில் வசிக்கும் வெப்பமானது {அக்நியானது}, இந்த இரண்டு மூச்சுகளின் {வாயுக்களின்} உதவியுடன், அந்த உயிரினம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் செரிக்கச் செய்கிறது.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "சரீர சாஸ்திரத்தில் ஸமர்த்தர்களான ஜனங்கள், முயற்சி, தொழில், பலம் என்ற மூன்று காரியங்களிலும் ஒன்றாயிருப்பது எதுவோ அஃது உதானவாயுவென்று உபதேசிக்கிறார்கள்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "த்வக்கு முதலிய ஏழு தாதுக்களிலும் பரவியிருக்கும் அக்நியானது ஸமானவாயுவால் ஏவப்பட்டு அன்னரஸங்களையும், ஏழு தாதுக்களையும், தோஷங்களையும் பரிணமிக்கச் செய்து கொண்டிருக்கிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஏழு தாதுக்கள் என்பன, ‘த்வக், உதிரம், மாம்ஸம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்லம்’ என்றும், தோஷகள் என்பன, ‘வாதம், பித்தம், கபம்’ என்ற மூன்றும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
வாயில் தொடங்கிக் குதம் {மலவாய்} வரையில் ஒரு நாளம் {குழாய்/குடல்} இருக்கிறது. அதன் எல்லையானது குதம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் இந்த முக்கிய நாளத்திலிருந்து எண்ணற்ற துணைக் கிளைகள் {நாளங்கள்} பிரிந்து செல்கின்றன[4].(11) மேற்சொன்ன பெயர்களிலான பல்வேறு மூச்சுக்காற்றுகள் (இந்த நாளங்களின் வழியாக) விரைவதன் விளைவாக, அந்த மூச்சுகள் ஒன்றுகலக்கின்றன. (பிராணனில் வசிக்கும்) வெப்பமானது உஷ்மன் {உஷ்ணம்} என்றழைக்கப்படுகிறது. அந்த வெப்பமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் செரிமானத்திற்கும் காரணமாக இருக்கிறது.(12) வெப்ப ஊற்றைச் சுமந்து செல்லும் பிராணன் என்றழைக்கப்படும் மூச்சானது {வாயுவானது}, கீழ்நோக்கிச் சென்று குதக் கால்வாயெனும் எல்லையை அடைந்து, பிறகு மீண்டும் மேல்நோக்கி அனுப்பப்படுகிறது. மேலும் அதன் இருக்கையான தலைக்குத் திரும்பிவரும் அது {பிராணன்}, மீண்டும் வெப்பத்தைச் சுமந்து கொண்டு கீழே செல்கிறது.(13) தொப்புளுக்குக் கீழுள்ளது செரிக்கப்பட்டவற்றைக் கொண்ட பகுதியாகும். உடலைத் தக்கவைத்துக் கொள்ள உயிர் சக்திகள் அனைத்தும் தொப்புளில் இருக்கின்றன. பிராணனை முதலாகக் கொண்ட பத்து வகை மூச்சுகளால்[5] {வாயுக்களால்} தூண்டப்படுபவையும், {ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல} இதயத்தில் இருந்து கிளை விட்டு வருபவையுமான {ரத்த} நாளங்கள், உணவு கொடுக்கும் திரவச் சாறுகளை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், குறுக்குத் திசையிலும் கொண்டு செல்கின்றன[6].(15) இன்பத்தையும், துன்பத்தையும் முற்றிலும் சமமாகக் கண்டு களைப்பை வென்றவர்களான யோகிகள், மூளைக்குள் ஆன்மாவைத் தாங்கி பிரம்மத்தை அடைவதில் வெல்வதற்கு, வாயிலிருந்து குதத்திற்குச் செல்லும் இந்த நாளமே பாதையாக இருக்கிறது[7].(16)
இவ்வாறு, பிராணன், அபானன் மற்றும் பிறவாக அழைக்கப்படும் மூச்சுகளில் {வாயுக்களில்} வெப்பம் {அக்னி} வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வெப்பமானது, (புலப்படக்கூடிய) எந்தப் பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒரு நெருப்பைப் போல அங்கே எரிந்து கொண்டே இருக்கிறது" என்றார் {பிருகு}.(17)
[4] "இங்க சொல்லப்பட்டுள்ள வார்த்தை ஸ்ரோதாஸ் என்பதாகும். அது வழித்தடம் என்ற பொருளில் பொருள் கொள்ளப்படலாம். இது முக்கிய நாளம் {தமனி - இதயம்} அல்லது பெருந்தமனியைக் குறிப்படக்கூடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[5] பத்து வாயுக்கள் என்பன பிராண, அபான, வியான, உதான, ஸமான, நாக, கூர்ம, க்ரூகர, தேவதத்த, தனஞ்ச வாயுக்களாகும். இந்தக் குறிப்பு கும்பகோணம் பதிப்பில் காணக்கிடைக்கிறது.
[6] இந்தப் பகுதியில் முரட்டு உடற்கூறு, முரட்டு உடலியங்கியல் ஆகியன இருந்தாலும், பழங்கால முனிவர்களால் குறிப்பிட்ட சில உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. நவீன காலத்தில் ஹார்வேயின் பெருங்கண்டுபிடிப்பை இந்தியா மிகப் பழங்காலத்திலேயே அறிந்திருந்தது என்பதை ஸ்லோகம் 15 எடுத்துக்காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்
[7] யோக சாத்திரங்களில், இந்த முக்கிய நாளம் விருப்பப்படி கட்டுப்படத்தக்க கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என்று விதிக்கப்படுகிறது. அப்போது அந்த விருப்பச் செயலின் மூலமாக ஆன்மாவானது, மொத்த உடல் இயக்கத்தில் இருந்தும் தலையிலுள்ள மூளைச்சுருளில் இழுக்கப்படுகிறது. யோகிகளின் மொழியில் மூளையானது, ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையாகும். ஆத்மா அதற்குள் இழுக்கப்பட்டால், அந்த உயிரினம், உணவு, உறக்கம் முதலிய தேவைகளில் இருந்து விடுதலை அடைந்து, தெய்வீக சிந்தனையிலும் {தீயானத்திலும்}, முற்றான அமைதி நிலையிலும் காலம் கடந்து வாழலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு, பிராணன், அபானன் மற்றும் பிறவாக அழைக்கப்படும் மூச்சுகளில் {வாயுக்களில்} வெப்பம் {அக்னி} வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வெப்பமானது, (புலப்படக்கூடிய) எந்தப் பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒரு நெருப்பைப் போல அங்கே எரிந்து கொண்டே இருக்கிறது" என்றார் {பிருகு}.(17)
சாந்திபர்வம் பகுதி – 185ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |