The soul! | Shanti-Parva-Section-187 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 14)
பதிவின் சுருக்கம் : உடலைத் தவிர உயிர் என்ற வேறு ஒன்றும் இருக்கிறது என்று பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..
பிருகு {பரத்வாஜரிடம்}, "உயிரினத்திற்கோ, கொடுக்கப்பட்டவைக்கோ, நமது பிற செயல்களுக்கோ அழிவே கிடையாது. இறந்து போகும் உயிரினம் வடிவில் மட்டுமே மற்றொன்றாக மாறுகிறது. உடல் மட்டுமே கரைந்துபோகிறது.(1) உயிரினமானது, உடலைச் சார்ந்திருந்தாலும், உடல் அழியும் போது, அதனுடன் சேர்ந்து அழிவடைவதில்லை. விறகால் தூண்டப்பட்ட நெருப்பு, எரிந்த பிறகு எவ்வாறு காணப்படுவதில்லையோ அவ்வாறே உடல் கட்டுமானமும் அழிவுக்குப் பிறகு காணப்படுவதில்லை" என்றார் {பிருகு}.(2)
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "நெருப்பைப் போல, உயிரினத்திற்கு அழிவில்லையென்றால், (நெருப்பைத் தூண்டிய) விறகு எரிக்கப்பட்டபிறகு, நெருப்பு காணப்படுவதில்லை என்பதை ஏற்கிறேன். நான் அறிந்த மட்டிலும், எரிபொருள் ஊட்டம் நிறுத்தப்படும்போது, நெருப்பு அணைந்து, நிர்மூலமடைகிறது.(3) எது எந்தச் செயல்பாடும் இல்லாது போனதோ, எது இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையோ, எது வெளியை நிரப்பாமல் இருக்கிறதோ, அஃது அழிவடைந்ததாகவே கருதப்பட வேண்டும்" என்றார் {பரத்வாஜர்}.(4)
பிருகு {பரத்வாஜரிடம்}, "எரிபொருள் எரிக்கப்பட்டதும், நெருப்பு காணப்படாது என்பது உண்மையே. இயற்கூறாய் அமைய, புலப்படக்கூடிய எந்தப் பொருளும் இல்லாதபோது அது வெளியில் {ஆகாயத்தில்} கலக்கிறது. எனவே, அது நம்மால் உணரப்பட முடியாததாக ஆகிறது.(5) அதேபோலவே, உயிரினமானது உடலைவிட்டு அகன்றதும் வெளியில் வாழ்கிறது, {முன் சொன்ன} நெருப்பைப் போலவே மிக நுண்ணிய வடிவை ஏற்பதால் அது பார்வைக்குப் புலப்படாததாகிறது.(6) நெருப்பு, அல்லது வெப்பமே பிராணன் முதலியவையாக அழைக்கப்படும் மூச்சுக் காற்றுகளை நீடிக்கச் செய்கிறது. (இவ்வாறு நீடித்திருக்கும்) வெப்பமே உயிர் என்றோ, வாழும் ஒன்றாகவோ அழைக்கப்படுகிறது. எந்த வெப்பம் மூச்சுகளை நீடிக்கச் செய்கிறதோ, அது மூச்சு ஒடுங்குவதன் விளைவால் அணைகிறது.(7) உடல் கட்டுமானத்தில் உள்ள வெப்பம் அணைந்ததும், அந்தக் கட்டுமானமே அசைவூட்டத்தை இழக்கிறது. வீழும் அஃது {உடல் கட்டுமானம்}, இறுதியாகச் சேருமிடமான பூமியாக {நிலமெனும் பூதமாக} மாற்றமடைகிறது.(8) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்திலும் உள்ள மூச்சானது {வாயுக்கள்}, வெளியில் கலக்கும் போது, அவற்றில் உள்ள வெப்பமும் அந்த மூச்சையே {வாயுக்களையே} பின்தொடர்கிறது.(9) இம்மூன்றும் (வெளி, காற்று {வாயு} மற்றும் நெருப்பு ஆகியன) ஒன்றுகலக்கின்றன. மற்ற இரண்டும் (நீரும், பூமியும்) பூமியின் வடிவில் ஒன்று கலந்து நீடிக்கின்றன.(10) எங்கே வெளி {ஆகாயம்} இருக்கிறதோ, அங்கே காற்று {வாயு} இருக்கிறது, எங்கே காற்று இருக்கிறதோ, அங்கே நெருப்பு இருக்கிறது. அவை வடிவமற்றவை என்பது அறியப்பட வேண்டும், உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தே அவை வடிவங்கொள்கின்றன" என்றார் {பிருகு}.(11)
பரத்வாஜர், "உயிரினங்கள் அனைத்தின் உடற்கட்டுமானங்களிலும் வெப்பம், காற்று, பூமி, வெளி, நீர் ஆகியன இருக்கின்றனவென்றால், அப்போது உயிர் வாழும் ஒன்றின் {உயிரின் / ஜீவனின்} குறியீடுகள் என்ன? ஓ! பாவமற்றவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக.(12) ஐந்து முக்கியப் பூதங்களால் உண்டானவையும், ஐந்து செயல்களில் ஈடுபடுபவையும், ஐம்புலன்களைக் கொண்டவையும், அசைவூட்டம் கொண்டவையுமான உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிரின் {ஜீவனின்} இயல்பை நான் அறிய விரும்புகிறேன்.(13) சதை, குருதி, கொழுப்பு, தசைக்கட்டுகள் {நரம்புகள்}, எலும்புகள் ஆகியவற்றின் கலவையான உடல் அழிந்தபிறகு, எது உயிர் வாழ்கின்றதோ அந்த உயிர் {ஜீவன்} காணப்படுவதில்லை.(14) ஐம்பூதங்களாலான இவ்வுடல், உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று {ஜீவன்} இல்லாததாக இருந்தால், உடல், அல்லது மனத் துன்பம் தோன்றும்போது, அத்துன்பத்தை யார் உணர்வது? அல்லது எது உணர்கிறது?(15) எது சொல்லப்படுகிறதோ, அதைக் காதுகளின் உதவியுடன் உயிர் வாழும் ஒன்று {ஜீவன்} கேட்கிறது. எனினும், ஓ பெரும் முனிவரே, அதே ஒன்று {உயிர்}, மனம் வேறொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கேட்காமல் இருக்கிறது. எனவே, உயிர்வாழும் ஒன்று {ஜீவன்} என்றழைக்கப்படும் ஒன்றிற்கான குறிக்கோள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.(16) வாழும் உயிரானது {ஜீவனானது} மனத்தோடு இயைந்து செயல்பட்டு கண்களின் மூலமாக மொத்த காட்சியைப் பார்க்கிறது, ஆனால் மனம் வேறுவகையில் ஈடுபட்டிருக்கும்போது, கண்கள் தன் முன் இருப்பதைக் காண்பதில்லை.(17) மேலும் உறக்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அந்த ஒன்று {உயிரானது}, நுகர்வதோ, கேட்பதோ, பேசுவதோ, தீண்டல் மற்றும் சுவையின் உணர்வுகளை அனுபவிப்பதோ இல்லை.(18) கோபமடைவதும், கவலையடைவதும், பெருந்துயரை அனுபவிப்பதும் யார்? அல்லது எது? விரும்புவதும், எண்ணுவதும், வெறுப்பை உணர்வதும், சொற்களைப் பேசுவதும் எது?" என்று கேட்டார் {பரத்வாஜர்}.(19)
பிருகு, "உடலோடு சேர்ந்து பொதுவாக மனமும் ஐம்பூதங்களால் ஆனதே. இதன் காரணமாக, நீ சொன்ன எந்தச் செயல்பாடுகளின் விளைவாலும் இது நேரவில்லை. உள்ளார்ந்த ஒரே ஆன்மா மட்டுமே உடலை நீடிக்கச் செய்கிறது. மணம், சுவை, ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் (புற இயற்கையில் நீடிக்கும்) பிற பண்புகள் ஆகியவற்றை அதுவே {ஆன்மாவே} உணர்கிறது.(20) அந்த ஆத்மாவே, அங்கங்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஐம்பூதங்களால் தொகுக்கப்பட்ட உடலுக்குள் வசித்துக் கொண்டு, ஐந்து பண்புகளுடன் இருக்கும் மனத்திற்கு (மனத்தின் செயல்களுக்கு) சாட்சியாக இருக்கிறது. இன்பத்தையும், துன்பத்தையும் உணர்வது அதுவே {ஆன்மாவே}. அதனில் இருந்து உடல் பிரிக்கப்படும்போது, உடலானது அதற்குமேல் அவற்றை உணர்வதில்லை.(21) எந்த வடிவத்தையும், அல்லது தீண்டலையும் உணராதபோது, உடலில் வசிக்கும் நெருப்பில் வெப்பமேதும் இல்லாத போது, உண்மையில் அந்த விலங்குவெப்பம் அணையும்போது, ஆன்மாவால் கைவிடப்பட்டதன் விளைவால், அவ்வுடல் அழிவைச் சந்திக்கிறது.(22) இந்த மொத்த அண்டமும் நீரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீரே உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் வடிவமாக {ஸுக்ஷமசரீரமாக} இருக்கிறது. ஆன்மா என்பது அனைத்துப் பொருட்களிலும் நீடித்திருக்கும் படைப்பாளன் பிரம்மனே ஆவான்.(23)
ஆன்மா தீய பண்புகளை அடையும்போது, அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற அழைக்கப்படுகிறது. அப்பண்புகளில் இருந்து விடுபடும்போது, அது பரமாத்மா, அல்லது உயர்ந்த ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.(24) அஃதை ஆன்மா என்றறிவாயாக. அஃது அண்ட நல்லுணர்வால் ஊக்கமடைந்திருக்கிறது. அது {அவன்} தாமரையில் உள்ள நீர்த்துளி போல உடலில் வசிக்கிறது.(25) எது அண்ட நல்லுணர்வைக் கொண்டிருக்கிறதோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறது என்பதை நன்கறிவாயாக. வாழும் உயிரானது, இருள் {தாமஸம்}, ஆசை {ரஜோ} மற்றும் நல்லுணர்வு {சத்துவம்} என்ற மூன்று பண்புகளைக் கொண்டதாகும்.(26) ஆன்மாவானது, நனவுநிலையைக் கொண்டிருக்கிறது, வாழ்வின் பண்புகளுடன் நீடித்திருக்கிறது என்று கல்விமான்கள் சொல்கின்றனர். ஆன்மாவே முயற்சி செய்கிறது, அனைத்தையும் முயற்சி செய்ய வைக்கிறது. ஆன்மா குறித்த அறிவுடையோர், ஆன்மாவானது உயிரிலிருந்து வேறானது என்று சொல்கின்றனர். ஏழு உலகங்களையும் படைத்த பரமாத்மாவே அவற்றை {ஆன்மாக்களை} இயக்குகிறது[1].(27) உடல் அழியும்போது வாழும் ஒன்று {உயிர்} அழிவதில்லை. அறிவற்ற மனிதர்களே அஃது இறக்கிறது என்று சொல்கிறார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. மரணம் என்று அழைக்கப்படுவது உடலின் அழிவு மட்டுமே ஆகும்.(28)
[1] கும்பகோணம் பதிப்பில், "புத்தியுடன் கூடிய இச்சரீரம் ஜீவனால் அனுபவிக்கப்படுகிறதென்று சொல்லுகிறார்கள். அந்த ஜீவன் சரீரம் யாவற்றையும் சேஷ்டையுள்ளதாகச் செய்கிறதும், சேஷ்டையுள்ளதுமாயிருக்கிறது. க்ஷேத்திரத்தை அறிந்தவர்கள் ஏழு உலகங்களையும் படைத்தவர் எவரோ அவர் அந்த ஜீவ ரூபத்தைவிட வேறென்று கூறுகிறார்கள்" என்றிருக்கிறது.
இவ்வாறு பல்வேறு வடிவங்களில் பொதியப்படும் ஆன்மாவானது, ஒரு வடிவில் இருந்து மற்றொன்றாக மாறி, பிறரால் காணப்படாததாகவும், கவனிக்கப்படாததாகவும் இருக்கிறது. உண்மை ஞானத்தைக் கொண்டவர்கள், தங்கள் கூர்மையான நுண்ணறிவால் ஆன்மாவைக் காண்கிறார்கள்.(29) அனைத்துப் பாவங்களில் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் எளிய உணவு உண்டு வாழும் ஞானி, யோகத் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொறு நாள் இரவு உறங்கும் முன்பும், உறங்கிய பின்னரும் தன் ஆன்மாவின் உதவியால் தன் ஆன்மாவையே காண்கிறான்[2].(30) உள்ளடங்கிய இதயத்தின் விளைவால், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, தன் ஆன்மாவைச் சார்ந்து ஒருவனால் முடிவற்ற மகிழ்ச்சியை அடைய முடியும்.(31) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மனத்தில் வசிப்பவனுமான மன்னன், வாழும் ஒன்று என்று அழைக்கப்படுகிறான். அனைத்தின் தலைவனான அவனிலிருந்தே இந்தப் படைப்பு எழுந்தது. உயிரினங்கள் மற்றும் ஆன்மாவின் தோற்றம் குறித்த விசாரணையின் முடிவில், இந்தத் தீர்மானமே அடையப்படுகிறது" என்றார் {பிருகு}.(32)
[2] யோகத்தில் முன்னேறிய நிலையில் ஒருவன் தன் ஆன்மாவையோ, ஆன்மாவை உள்ளாய்வு செய்வதன் விளைவால் ஆன்மாவின் ஈரிருப்பையோ உணர இயன்றவனாகிறான் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. யோகத்தைக் குறித்து எழுதுபவர்கள் குறியீட்டுப் பொருளில் இம்மொழியிலேயே எழுதுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "லகுவான ஆகாரமுள்ளவனும், பரிசுத்தமான புத்தியுள்ளவனும் இரவுகளின் முதலிலும் கடையிலும் எப்பொழுதும் ஸமாதியிலிருப்பவனுமான அறிவுள்ளவன் அந்த ஆத்மாவைப் புத்தியில் பார்ப்பான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 187ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |