Where is life? | Shanti-Parva-Section-185 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 13)
பதிவின் சுருக்கம் : உடலைத் தவிர உயிர் என்று ஏதும் எங்கே இருக்கிறது என்று பிருகுவிடம் விளக்கம் கேட்ட பரத்வாஜர்..
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "காற்றுதான் {வாயுதான்} நம்மை உயிருடன் வைத்திருக்கிறது, நாம் அசையவும், நம்மை முயற்சி செய்யவும் வைக்கிறது, நம்மை மூச்சுவிடவும், பேசவும் வைக்கிறது என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாக {பயனற்றதாகத்} தெரிகிறது.(1) (உணவு அனைத்தையும் செரிக்கும்) விலங்கு வெப்பம் இயற்கை நெருப்பின் {அக்னியின்} இயல்பைக் கொண்டதாக இருந்தால், நாம் உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் செரிப்பதில் துணைபுரிவது அந்நெருப்பே என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாகத் தெரிகிறது.(2) ஒரு விலங்கு இறக்கும்போது, உயிர் என்று எது அழைக்கப்படுகிறதோ, அஃது அதைவிட்டு வெளியேறுவது ஒருபோதும் காணப்படுவதில்லை. மூச்சு மட்டுமே விட்டுச் செல்கிறது, உள்ளார்த வெப்பமும் அணைந்துவிடுகிறது.(3) உயிர் என்பது காற்றைத் தவிர வேறில்லை என்றாலோ, உயிரானது காற்றை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றாலோ, அது வெளிப்புற காற்றுக் கடலைப் போலத் தென்படும், மேலும் வெளியேறும்போது, அந்தக் காற்றுடன் கலக்கும்.(4) உயிரானது காற்றைச் சார்ந்திருக்கிறது என்றால், உடலில் இருந்து காற்று வெளியேறுவதால் அது முடிவடைகிறது என்றால், அது, நீரின் ஒரு பகுதி, பெருங்கடலுக்குள் செல்வதைப் போல, (வெளிப்புறத்தில் இருக்கும்) மற்றொரு காற்றுப்பகுதியுடன் கலந்து தன் வசிப்பிடத்தை மட்டுமே மாற்றிக் கொள்ளும்.(5)
ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கிணற்றுக்குள் இறைக்கப்பட்டாலோ, ஒரு விளக்கை சுடர்மிக்க நெருப்புக்குள் தூக்கி வீசினாலோ, அவை இரண்டும், ஓரின இயற்பியல் கொண்ட பூதத்துக்குள் நுழைந்து, தற்சார்பையோ, தனிப்பட்ட இருப்பையோ இழக்கின்றன. உயிரே காற்றென்றால் {வாயு என்றால்}, ஒரு விலங்கு இறக்கும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றுப் பெருங்கடலில் அது கலக்கவே செய்யும்.(6) பிறகு, ஐந்து (முக்கிய) பூதங்களால் ஆன இந்த விலங்குடம்பில் உயிர் இருக்கிறது என்று நாம் எவ்வாறு சொல்லலாம்? அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றிவிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும்? அஃது எதை அறிகிறது? அஃது எதைக் கேட்கிறது? அதென்ன சொல்கிறது?(10)
(பிராமணனுக்குத் தானமாக அளிக்கப்படும்) இந்தப் பசு, மறுமையில் என்னை மீட்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த விலங்கே இறக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்தப் பசு யாரை மீட்கும்?(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்?(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்?(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது?(14) உண்மையில் வித்துகளே படைக்கப்பட்டன. இந்த அண்டம் முழுமையும் அடுத்தடுத்து வந்த வித்துகளின் விளைவால் விளைந்தவையே. இறந்து செல்பவை அழிவடையவே இறக்கின்றன. வித்துகள் வித்துகளிலிருந்தே விளைகின்றன" என்றார் {பரத்வாஜர்}.(15)
சாந்திபர்வம் பகுதி – 186ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |