The distinction between varnas! | Shanti-Parva-Section-187 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 15)
பதிவின் சுருக்கம் : பிராமணர்கள் தத்தமது விருப்பப்படி நடந்து கொண்டதால் உண்டான வர்ண வேறுபாடு குறித்து பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..
பிருகு {பரத்வாஜரிடம்}, "பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]" என்றார் {பிருகு}.(5)
[1] இங்கே சொல்லப்படும் வண்ணம் அல்லது நிறம் என்பது பண்புகளையே குறிக்கும் என உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே சொல்லப்படும் நோக்கம் என்னவென்றால், பிராமணர்கள் நற்பண்பை (சத்வ குணத்தைக்) கொண்டனர்; இரண்டாவது வகையின் ஆசை (ரஜோ குணத்தைக்) கொண்டனர்; மூன்றாவது வகையினர் முதலிரண்டின் கலவையான, அதாவது நற்குணம் மற்றும் ஆசை குணத்தின் (சத்வ மற்றும் ரஜோ குணத்தின்) கலவையான நிறத்தை அடைந்தனர்; அதே வேளையில் எஞ்சிய பண்பான இருள் (தமோ குணத்தை) கீழ்வகை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தப் பகுதியின் ஏழாம் சுலோகம் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?" என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)
பிருகு {பரத்வாஜரிடம்}, "வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10) ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)
பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]" என்றார் {பிருகு}.(20)
[2] இங்கே விதிக்கப்படும் வேறுபாடு இவ்வாறே தெரிகிறது: அழிவில்லா படைப்பானது, யோகத்தின் காரணமாகவோ, ஆதி தேவனின் மனச் செயல்பாட்டாலோ விளைந்தது. நாம் காணும் படைப்பானது, முதலில் படைக்கப்பட்ட அந்தத் தவசிகளின் விளைவால் உண்டானது. ஒருவேளை, இங்கே சொல்லப்படுவது, உயிரில் இருந்து உண்டாகும் உயிர் மற்றும் அடிப்படை பொருளுடன் கூடிய வெளி ஆகியவற்றைக் கொண்ட உயிர் கொள்கையானது தேவனின் மனோவிருப்பத்தால் விளைந்தது; அந்தக் கொள்கைகளுடைய செயல்பாட்டாலும், அடிப்படை பொருள் மற்றும் வெளியாலும் விளைந்து, புலப்படக்கூடிய பொருட்களாகத் தெரியும் அனைத்தும் அந்தத் தவசிகள் சம்பந்தப்பட்டது என்றிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தர்மானுஷ்டானத்தை முக்கியகாரணமாகக் கொண்டதும், மனத்தான் செய்யப்பட்டதுமான அந்த ஸ்ருஷ்டியானது ஆதி தேவரானப்ரம்மதேவரிடிருந்து உண்டானதும், பிரம்மத்தை மூலமாகக் கொண்டதும் அழிவில்லாததும், குறைவில்லாததுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 188ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |